பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    விண்ணவர் தங்கள் பெருமான்*  திருமார்வன்,* 
    மண்ணவர் எல்லாம் வணங்கும்*  மலிபுகழ்சேர்,*

    கண்ணபுரத்து எம் பெருமான்*  கதிர்முடிமேல்,* 
    வண்ண நறுந்துழாய் வந்து ஊதாய் கோல்தும்பீ.!  (2)


    வேத முதல்வன்*  விளங்கு புரிநூலன்,* 
    பாதம் பரவிப்*  பலரும் பணிந்துஏத்தி,*

    காதன்மை செய்யும்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தாது நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    விண்ட மலர்எல்லாம்*  ஊதி நீ என்பெறுதி,?* 
    அண்ட முதல்வன்*  அமரர்கள் எல்லாரும்,*

    கண்டு வணங்கும்*  கண்ணபுரத்து எம்பெருமான்* 
    வண்டு நறுந்துழாய்*  வந்துஊதாய் கோல்தும்பீ!


    நீர் மலிகின்றது ஓர்*  மீன்ஆய் ஓர் ஆமையும்ஆய்,* 
    சீர் மலிகின்றது ஓர்*  சிங்க உருஆகி,*

    கார்மலி வண்ணன்*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தார்மலி தண்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    ஏர்ஆர் மலர்எல்லாம்*  ஊதி நீ என்பெறுதி,?*
    பார்ஆர் உலகம்*  பரவ பெருங்கடலுள்,*

    கார்ஆமை ஆன*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தார்ஆர் நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    மார்வில் திருவன்*  வலன்ஏந்து சக்கரத்தன்,* 
    பாரைப் பிளந்த*  பரமன் பரஞ்சோதி,*

    காரில் திகழ்*  காயா வண்ணன் கதிர்முடிமேல்,* 
    தாரில் நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    வாமனன் கற்கி*  மதுசூதன் மாதவன்* 
    தார்மன்னு*  தாசரதிஆய தடமார்வன்,*

    காமன்தன் தாதை*  கண்ணபுரத்து எம்பெருமான்,* 
    தாம நறுந்துழாய்*  தாழ்ந்துஊதாய் கோல்தும்பீ!


    நீல மலர்கள்*  நெடுநீர் வயல் மருங்கில்,* 
    சால மலர்எல்லாம்*  ஊதாதே,*  வாள்அரக்கர்-

    காலன்*  கண்ணபுரத்து எம்பெருமான் கதிர்முடிமேல்,* 
    கோல நறுந்துழாய்*  கொண்டுஊதாய் கோல்தும்பீ!


    நந்தன் மதலை*  நிலமங்கை நல்துணைவன்,* 
    அந்தம் முதல்வன்*  அமரர்கள் தம்பெருமான்,*

    கந்தம் கமழ்*  காயா வண்ணன் கதிர்முடிமேல்,* 
    கொந்து நறுந்துழாய்*  கொண்டுஊதாய் கோல்தும்பீ!


    வண்டு அமரும் சோலை*  வயல்ஆலி நல்நாடன்,* 
    கண்டசீர் வென்றிக்*  கலியன் ஒலிமாலை,*

    கொண்டல் நிறவண்ணன்*  கண்ண புரத்தானைத்,* 
    தொண்டரோம் பாட*  நினைந்துஊதாய் கோல்தும்பீ!  (2)


    வார்கடா அருவி யானை மாமலையின்*   மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி* 
    ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து*  அரங்கின்  மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*

    போர்கடா அரசர் புறக்கிட*  மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த* 
    சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே  (2)  


    எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்*   இமையவர் அப்பன் என்அப்பன்* 
    பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்*   பொருந்துமூவுருவன் எம்அருவன்*

    செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்*   திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு- 
    அங்கு அமர்கின்ற*  ஆதியான் அல்லால்*   யாவர்மற்றுஎன்அமர் துணையே?  


    என்அமர்பெருமான் இமையவர்பெருமான்*   இருநிலம் இடந்த எம்பெருமான்* 
    முன்னைவல்வினைகள் முழுதுஉடன்மாள*   என்னைஆள்கின்ற எம்பெருமான்*

    தென்திசைக்கு அணிகொள் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாற்றங்கரைமீபால்- 
    நின்றஎம்பெருமான் அடிஅல்லால் சரண்   நினைப்பிலும்*  பிறிதுஇல்லை எனக்கே.


    பிறிதுஇல்லை எனக்கு பெரியமூவுலகும்*   நிறையப்பேர் உருவமாய் நிமிர்ந்த* 
    குறியமாண் எம்மான் குரைகடல்கடைந்த*   கோலமாணிக்கம் என்அம்மான்*

    செறிகுலைவாழைகமுகு தெங்கணிசூழ்*  திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு 
    அறிய*  மெய்ம்மையே நின்ற எம்பெருமான்*   அடிஇணை அல்லதுஓர் அரணே.  


    அல்லதோர் அரணும் அவனில் வேறுஇல்லை*   அது பொருள்ஆகிலும்*  அவனை 
    அல்லது என்ஆவி அமர்ந்துஅணைகில்லாது*   ஆதலால் அவன் உறைகின்ற*

    நல்ல நான்மறையோர் வேள்வியுள்மடுத்த*   நறும்புகை விசும்புஒளி மறைக்கும்* 
    நல்ல நீள்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எனக்கு நல்அரணே.


    எனக்கு நல்அரணை எனதுஆருயிரை*   இமையவர் தந்தைதாய் தன்னை* 
    தனக்கும் தன் தன்மை அறிவரியானை*   தடம்கடல்பள்ளி அம்மானை*

    மனக்கொள்சீர் மூவாயிரவர்*  வண்சிவனும்  அயனும்தானும் ஒப்பார்வாழ்* 
    கனக்கொள் திண்மாடத் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு அதனுள்கண்டேனே. 


    திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள்கண்ட*  அத்திருவடி என்றும்* 
    திருச்செய்ய கமலக்கண்ணும்*  செவ்வாயும்செவ்வடியும் செய்யகையும்*

    திருச்செய்யகமல உந்தியும்*  செய்யகமலை மார்பும் செய்யஉடையும்* 
    திருச்செய்யமுடியும் ஆரமும்படையும்*   திகழ என் சிந்தையுளானே.  


    திகழ என்சிந்தையுள் இருந்தானை*  செழுநிலத்தேவர் நான்மறையோர்* 
    திசை கைகூப்பி ஏத்தும்*  திருச்செங்குன்றூரில்  திருச்சிற்றாற்றங்கரையானை*

    புகர்கொள்வானவர்கள் புகலிடம்தன்னை*   அசுரர்வன்கையர் வெம்கூற்றை* 
    புகழுமாறு அறியேன் பொருந்து மூவுலகும்*   படைப்பொடு கெடுப்புக்காப்பவனே!


    படைப்பொடு கெடுப்புக் காப்பவன்*  பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே* 
    இடைப்புக்குஓர் உருவும் ஒழிவுஇல்லைஅவனே*  புகழ்வுஇல்லையாவையும் தானே*

    கொடைப்பெரும்புகழார் இனையர் தன்ஆனார்*  கூரியவிச்சையோடு ஒழுக்கம்* 
    நடைப்பலி இயற்கைத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாறுஅமர்ந்த நாதனே.


    அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி*  அவர்க்குஅருள் அருளும் அம்மானை* 
    அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாற்றங்கரையானை*

    அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள்*   தம்பதி அவனிதேவர் வாழ்வு* 
    அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை*   நான்முகனை அமர்ந்தேனே. 


    தேனைநன்பாலை கன்னலைஅமுதை*  திருந்துஉலகுஉண்ட அம்மானை* 
    வானநான்முகனை மலர்ந்ததண்கொப்பூழ்*  மலர்மிசைப் படைத்தமாயோனை*

    கோனை வண்குருகூர் வண்சடகோபன்*  சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்* 
    வானின்மீதுஏற்றி அருள்செய்துமுடிக்கும்*  பிறவிமாமாயக் கூத்தினையே.   (2)