பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    கண் சோர வெம் குருதி வந்து இழிய*  வெம் தழல்போல் கூந்தலாளை* 
    மண் சேர முலை உண்ட மா மதலாய்!*  வானவர்தம் கோவே! என்று*

    விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு*  மணி மாடம் மல்கு*  செல்வத்- 
    தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்*  காண்மின் என் தலைமேலாரே*


    அம் புருவ வரி நெடுங் கண்*  அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்* 
    கொம்பு உருவ விளங்கனிமேல்*  இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்* 

    வம்பு அலரும் தண் சோலை*  வண் சேறை வான் உந்து கோயில் மேய* 
    எம் பெருமான் தாள் தொழுவார்*  எப்பொழுதும்என் மனத்தே இருக்கின்றாரே*.  


    மீது ஓடி வாள் எயிறு மின் இலக*  முன் விலகும் உருவினாளைக்* 
    காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த*  கைத்தலத்தா! என்று நின்று*

    தாதோடு வண்டு அலம்பும்*  தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி* 
    போதோடு புனல் தூவும் புண்ணியரே*  விண்ணவரின் பொலிகின்றாரே*     


    தேர் ஆளும் வாள் அரக்கன்*  தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ* 
    போர் ஆளும் சிலைஅதனால்*  பொரு கணைகள் போக்குவித்தாய் என்று*  நாளும்

    தார் ஆளும் வரை மார்பன்*  தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்* 
    பேராளன் பேர் ஓதும் பெரியோரை*  ஒருகாலும் பிரிகிலேனே*.


    வந்திக்கும் மற்றவர்க்கும்*  மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்* 
    முந்திச் சென்று அரி உரு ஆய்*  இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*

    சந்தப் பூ மலர்ச் சோலைத்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    சிந்திப்பார்க்கு என் உள்ளம்*  தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே*.


    பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த*  பண்பாளா என்று நின்று* 
    தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்*  துணை இலேன் சொல்லுகின்றேன்*

    வண்டு ஏந்தும் மலர்ப் புறவின்*  வண் சேறைஎம் பெருமான் அடியார் தம்மைக்* 
    கண்டேனுக்கு இது காணீர்*  என் நெஞ்சும்கண் இணையும் களிக்கும் ஆறே*.


    பை விரியும் வரி அரவில்*  படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா! என்றும்* 
    மை விரியும் மணி வரைபோல்*  மாயவனே! என்று என்றும் வண்டு ஆர் நீலம்*

    செய் விரியும் தண் சேறை எம் பெருமான்*  திரு வடிவைச் சிந்தித்தேற்கு*  என் 
    ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்*  என் அன்புதானே*.


    உண்ணாது வெம் கூற்றம்*  ஓவாதபாவங்கள் சேரா*  மேலை- 
    விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்*  மென் தளிர்போல் அடியினானை*

    பண் ஆர வண்டு இயம்பும்*  பைம் பொழில் சூழ்தண் சேறை அம்மான் தன்னை* 
    கண் ஆரக் கண்டு உருகி*  கை ஆரத்தொழுவாரைக் கருதுங்காலே*.


    கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒருகால் கவலை என்னும்* 
    வெள்ளத்தேற்கு என்கொலோ*  விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்-

    தள்ள தேன் மணம் நாறும்*  தண் சேறை எம் பெருமான் தாளை*  நாளும்- 
    உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்*  என் உள்ளம் உருகும் ஆறே*.       


    பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து*  வயல் நின்ற பெடையோடு*  அன்னம் 
    தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்*  தண் சேறை அம்மான் தன்னை*

    வா மான் தேர்ப் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்* 
    தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்*  நும் துணைக் கையால் தொழுது நின்றே*.


    ஆழிஎழ*  சங்கும் வில்லும்எழ,*  திசை 
    வாழிஎழ*  தண்டும் வாளும்எழ,*  அண்டம்

    மோழைஎழ*  முடி பாதம்எழ,*  அப்பன் 
    ஊழிஎழ*  உலகம் கொண்டவாறே   (2)


    ஆறு மலைக்கு*  எதிர்ந்துஓடும் ஒலி,*  அரவு 
    ஊறு சுலாய்*  மலை தேய்க்கும் ஒலி,*  கடல்

    மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,*  அப்பன் 
    சாறுபட*  அமுதம்கொண்ட நான்றே.


    நான்றிலஏழ்*  மண்ணும் தானத்தவே,*  பின்னும் 
    நான்றில ஏழ்*  மலை தானத்தவே,*  பின்னும்

    நான்றில ஏழ்*  கடல் தானத்தவே,*  அப்பன் 
    ஊன்றி இடந்து*  எயிற்றில் கொண்ட நாளே.    


    நாளும்எழ*  நிலம் நீரும்எழ*  விண்ணும் 
    கோளும்எழ*  எரி காலும்எழ,*  மலை

    தாளும்எழ*  சுடர் தானும்எழ,*  அப்பன் 
    ஊளிஎழ*  உலகம்உண்ட ஊணே     


    ஊணுடை மல்லர்*  ததர்ந்த ஒலி,*  மன்னர் 
    ஆண்உடைச் சேனை*  நடுங்கும் ஒலி,*  விண்ணுள்

    ஏண்உடைத் தேவர்*  வெளிப்பட்ட ஒலி,*  அப்பன் 
    காணுடைப் பாரதம்*  கைஅறை போழ்தே


    போழ்து மெலிந்த*  புன் செக்கரில்,*  வான்திசை 
    சூழும் எழுந்து*  உதிரப்புனலா,*  மலை

    கீழ்து பிளந்த*  சிங்கம்ஒத்ததால்,*  அப்பன் 
    ஆழ்துயர் செய்து*  அசுரரைக் கொல்லுமாறே.  


    மாறு நிரைத்து*  இரைக்கும் சரங்கள்,*  இன 
    நூறு பிணம்*  மலை போல் புரள,*  கடல்

    ஆறு மடுத்து*  உதிரப்புனலா,*  அப்பன் 
    நீறுபட*  இலங்கை செற்ற நேரே


    நேர்சரிந்தான்*  கொடிக் கோழிகொண்டான்,*  பின்னும் 
    நேர்சரிந்தான்*  எரியும் அனலோன்,*  பின்னும்

    நேர்சரிந்தான்*  முக்கண் மூர்த்திகண்டீர்,*  அப்பன் 
    நேர்சரி வாணன்*  திண்தோள் கொண்ட அன்றே 


    அன்றுமண் நீர்எரிகால்*  விண் மலைமுதல்,* 
    அன்று சுடர்*  இரண்டு பிறவும்,*  பின்னும்

    அன்று மழை*  உயிர் தேவும் மற்றும்,* அப்பன் 
    அன்று முதல்*  உலகம் செய்ததுமே


    மேய்நிரை கீழ்புக*  மாபுரள,*  சுனை 
    வாய்நிறை நீர்*  பிளிறிச்சொரிய,*  இன

    ஆநிரை பாடி*  அங்கேஒடுங்க,*  அப்பன் 
    தீமழை காத்து*  குன்றம் எடுத்தானே     


    குன்றம் எடுத்தபிரான்*  அடியாரொடும்,* 
    ஒன்றிநின்ற*  சடகோபன்உரைசெயல்,*

    நன்றி புனைந்த*  ஓர்ஆயிரத்துள் இவை* 
    வென்றி தரும்பத்தும்*  மேவிக் கற்பார்க்கே (2)