பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    சென்னியோங்கு*  தண்திருவேங்கடமுடையாய்!*  உலகு- 
    தன்னை வாழநின்ற நம்பீ!*  தாமோதரா! சதிரா!* 

    என்னையும் என்னுடைமையையும்*  உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு* 
    நின்னருளே புரிந்திருந்தேன்* இனிஎன்திருக்குறிப்பே? (2)


    பறவையேறு பரமபுருடா!*  நீஎன்னைக் கைக்கொண்டபின்* 
    பிறவியென்னும் கடலும்வற்றிப்*  பெரும்பதம் ஆகின்றதால்* 

    இறவு செய்யும் பாவக்காடு*  தீக்கொளீஇவேகின்றதால்* 
    அறிவையென்னும் அமுதவாறு*  தலைப்பற்றி வாய்க்கொண்டதே.


    எம்மனா! என்குலதெய்வமே!*  என்னுடைய நாயகனே!* 
    நின்னுளேனாய்ப் பெற்றநன்மை*  இவ்வுலகினில் ஆர்பெறுவார்? 

    நம்மன்போலே வீழ்த்தமுக்கும்*  நாட்டிலுள்ளபாவமெல்லாம் 
    சும்மெனாதே கைவிட்டோடித்*  தூறுகள்பாய்ந்தனவே.


    கடல்கடைந்து அமுதம்கொண்டு *  கலசத்தைநிறைத்தாற்போல்* 
    உடலுருகிவாய்திறந்து*  மடுத்து உன்னைநிறைத்துக்கொண்டேன்* 

    கொடுமை செய்யும்கூற்றமும்*  என்கோலாடிகுறுகப்பெறா* 
    தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற்சேவகனே!


    பொன்னைக்கொண்டு உரைகல்மீதே*  நிறமெழவுரைத்தாற்போல்* 
    உன்னைக்கொண்டு என்நாவகம்பால்*  மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்*

    உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன்*  என்னையும்உன்னிலிட்டேன்* 
    என்னப்பா! என்னிருடீகேசா!*  என்னுயிர்க்காவலனே!


    உன்னுடைய விக்கிரமம்*  ஒன்றோழியாமல் எல்லாம்* 
    என்னுடைய நெஞ்சகம்பால்* சுவர்வழி எழுதிக்கொண்டேன்* 

    மன்னடங்க மழுவலங்கைக்கொண்ட*  இராமநம்பீ!* 
    என்னிடைவந்து எம்பெருமான்!*  இனியெங்குப்போகின்றதே? 


    பருப்பதத்துக் கயல்பொறித்த*  பாண்டியர்குலபதிபோல்* 
    திருப்பொலிந்தசேவடி*  என் சென்னியின் மேல் பொறித்தாய்* 

    மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்!* என்றென்றுஉன்வாசகமே* 
    உருப்பொலிந்தநாவினேனை*  உனக்கு உரித்தாக்கினையே. (2)


    அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து*  என்- 
    மனந்தனுள்ளே வந்துவைகி*  வாழச்செய்தாய்எம்பிரான்!* 

    நினைந்து என்னுள்ளே நின்றுநெக்குக்*  கண்கள் அசும்பொழுக* 
    நினைந்திருந்தே சிரமம்தீர்ந்தேன்*  நேமி நெடியவனே!


    பனிக்கடலில் பள்ளிகோளைப்*  பழகவிட்டு ஓடிவந்துஎன்- 
    மனக்கடலில் வாழவல்ல*  மாயமணாளநம்பீ!*

    தனிக்கடலே!  தனிச்சுடரே!*  தனியுலகே என்றென்று* 
    உனக்கிடமாய்யிருக்க*  என்னை உனக்கு உரித்தாக்கினையே. 


    தடவரை வாய்மிளிர்ந்து மின்னும்*  தவள நெடுங்கொடிபோல்* 
    சுடரொளியாய் நெஞ்சினுள்ளே*  தோன்றும்என்சோதிநம்பீ!*

    வடதடமும் வைகுந்தமும்*  மதிள்துவராபதியும்* 
    இடவகைகள் இகழ்ந்திட்டு*  என்பால் இடவகைகொண்டனையே. (2)


    வேயர் தங்கள் குலத்துதித்த*  விட்டுசித்தன் மனத்தே* 
    கோயில்கொண்ட கோவலனைக்*  கொழுங்குளிர் முகில்வண்ணனை* 

    ஆயரேற்றை அமரர்கோவை*  அந்தணர்தம் அமுதத்தினை* 
    சாயைபோலப் பாடவல்லார்*  தாமும் அணுக்கர்களே. (2)


    உந்திமேல் நான்முகனைப் படைத்தான்*  உலகு உண்டவன்
    எந்தை பெம்மான்*  இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*

    சந்தினோடு மணியும் கொழிக்கும்*  புனல் காவிரி* 
    அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்*  தென் அரங்கமே.          


    வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்*  மணி நீள் முடி* 
    பைகொள் நாகத்து அணையான்*  பயிலும் இடம் என்பரால்*

    தையல் நல்லார் குழல் மாலையும்*  மற்று அவர் தட முலைச்*
    செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்*  தென் அரங்கமே.


    பண்டு இவ் வையம் அளப்பான் சென்று*  மாவலி கையில் நீர 
    கொண்ட*  ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்* 

    வண்டு பாடும் மது வார் புனல்*  வந்து இழி காவிரி* 
    அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.    


    விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்*  நகர் பாழ்பட* 
    வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு*  இடம் என்பரால்* 

    துளைக் கை யானை மருப்பும் அகிலும்*  கொணர்ந்து உந்தி* முன்
    திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.        


    வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்*  வான் புக* 
    அம்பு தன்னால் முனிந்த*  அழகன் இடம் என்பரால்* 

    உம்பர் கோனும் உலகு ஏழும்*  வந்து ஈண்டி வணங்கும்* நல 
    செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.


    கலை உடுத்த அகல் அல்குல்*  வன் பேய் மகள் தாய் என* 
    முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்*  வாழ் இடம் என்பரால்*

    குலை எடுத்த கதலிப்*  பொழிலூடும் வந்து உந்தி*  முன்
    அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.     


    கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்*  சகடமும் காலினால்*
    துஞ்ச வென்ற சுடர் ஆழியான்*  வாழ் இடம் என்பரால்* 

    மஞ்சு சேர் மாளிகை*  நீடு அகில் புகையும் மா மறையோர்*
    செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்*  தென் அரங்கமே        


    ஏனம் மீன் ஆமையோடு*  அரியும் சிறு குறளும் ஆய* 
    தானும்ஆய*  தரணித் தலைவன் இடம் என்பரால்*

    வானும் மண்ணும் நிறையப்*  புகுந்து ஈண்டி வணங்கும்*  நல் 
    தேனும் பாலும் கலந்தன்னவர்*  சேர் தென் அரங்கமே


    சேயன் என்றும் மிகப் பெரியன்*  நுண் நேர்மையன் ஆய*  இம்
    மாயை ஆரும் அறியா*  வகையான் இடம் என்பரால்*

    வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து*  ஆர் புனல் காவிர* 
    ஆய பொன் மா மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.  


    அல்லி மாதர் அமரும்*  திரு மார்வன் அரங்கத்தைக்*
    கல்லின் மன்னு மதிள்*  மங்கையர்-கோன் கலிகன்றி சொல்* 

    நல்லிசை மாலைகள்*  நால் இரண்டும் இரண்டும் உடன்*
    வல்லவர் தாம் உலகு ஆண்டு*  பின் வான் உலகு ஆள்வரே.


    ஊர் எல்லாம் துஞ்சி*  உலகு எல்லாம் நள் இருள் ஆய்* 
    நீர் எல்லாம் தேறி*  ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால்* 

    பார் எல்லாம் உண்ட*  நம் பாம்பு அணையான் வாரானால்* 
    ஆர் எல்லே! வல்வினையேன்*  ஆவி காப்பார் இனியே?* (2)   


    ஆவி காப்பார் இனி யார்?*  ஆழ் கடல் மண் விண் மூடி* 
    மா விகாரம் ஆய்*  ஓர் வல் இரவு ஆய் நீண்டதால்*

    காவி சேர் வண்ணன்*  என் கண்ணனும் வாரானால்* 
    பாவியேன் நெஞ்சமே!*  நீயும் பாங்கு அல்லையே?*.      


    நீயும் பாங்கு அல்லைகாண்*  நெஞ்சமே நீள் இரவும்* 
    ஓயும் பொழுது இன்றி*  ஊழி ஆய் நீண்டதால்* 

    காயும் கடும் சிலை*  என் காகுத்தன் வாரானால்* 
    மாயும் வகை அறியேன்*  வல்வினையேன் பெண் பிறந்தே*


    பெண் பிறந்தார் எய்தும்*  பெரும் துயர் காண்கிலேன் என்று* 
    ஒண் சுடரோன்*  வாராது ஒளித்தான்*  இம்மண்அளந்த-

    கண் பெரிய செவ்வாய்*  எம் கார் ஏறு வாரானால்* 
    எண் பெரிய சிந்தைநோய்*  தீர்ப்பார் ஆர் என்னையே?*


    ஆர் என்னை ஆராய்வார்?*  அன்னையரும் தோழியரும்* 
    'நீர் என்னே?' என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்* 

    கார் அன்ன மேனி*  நம் கண்ணனும் வாரானால்* 
    பேர் என்னை மாயாதால்*  வல்வினையேன் பின் நின்றே*.


    பின்நின்று காதல் நோய்*  நெஞ்சம் பெரிது அடுமால்* 
    முன்நின்று இரா ஊழி*  கண் புதைய மூடிற்றால்* 

    மன் நின்ற சக்கரத்து*  எம் மாயவனும் வாரானால்* 
    இந் நின்ற நீள் ஆவி*  காப்பார் ஆர் இவ் இடத்தே?*


    காப்பார் ஆர் இவ் இடத்து?*  கங்கு இருளின் நுண் துளி ஆய்* 
    சேண் பாலது ஊழி ஆய்*  செல்கின்ற கங்குல்வாய்த்* 

    தூப் பால வெண்சங்கு*  சக்கரத்தன் தோன்றானால்* 
    தீப் பால வல்வினையேன்*  தெய்வங்காள்! என் செய்கேனோ?*   


    தெய்வங்காள்! என் செய்கேன்?*  ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்* 
    மெய் வந்து நின்று*  எனது ஆவி மெலிவிக்கும்,* 

    கைவந்த சக்கரத்து*  என் கண்ணனும் வாரானால்* 
    தைவந்த தண் தென்றல்*  வெம் சுடரில் தான் அடுமே* 


    வெம் சுடரில் தான் அடுமால்*  வீங்கு இருளின் நுண் துளி ஆய்* 
    அம் சுடர வெய்யோன்*  அணி நெடும் தேர் தோன்றாதால்* 

    செஞ் சுடர்த் தாமரைக்கண்*  செல்வனும் வாரானால்* 
    நெஞ்சு இடர் தீர்ப்பார் இனியார்?*  நின்று உருகுகின்றேனே!*            


    நின்று உருகுகின்றேனே போல*  நெடு வானம்* 
    சென்று உருகி நுண் துளி ஆய்*  செல்கின்ற கங்குல்வாய்* 

    அன்று ஒருகால் வையம்*  அளந்த பிரான் வாரான் என்று* 
    ஒன்று ஒருகால் சொல்லாது*  உலகோ உறங்குமே*      


    உறங்குவான் போல்*  யோகுசெய்த பெருமானை* 
    சிறந்த பொழில் சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொல்*

    நிறம் கிளர்ந்த அந்தாதி*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
    இறந்து போய் வைகுந்தம்*  சேராவாறு எங்ஙனேயோ?*