பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    நாவகாரியம்சொல்இலாதவர்*  நாள்தொறும்விருந்துஓம்புவார்* 
    தேவகாரியம்செய்து*  வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*

    மூவர்காரியமும்திருத்தும்*  முதல்வனைச்சிந்தியாத*  அப்- 
    பாவகாரிகளைப்படைத்தவன்*  எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)


    குற்றம்இன்றிக்குணம்பெருக்கிக்*  குருக்களுக்குஅனுகூலராய்* 
    செற்றம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்த்*

    துற்றிஏழ்உலகுஉண்ட*  தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்* 
    பெற்றதாயர்வயிற்றினைப்*  பெருநோய்செய்வான்பிறந்தார்களே.


    வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி*  நிழல்எழும்- 
    திண்ணைசூழ்*  திருக்கோட்டியூர்த்*  திருமாலவன்திருநாமங்கள்*

    எண்ணக்கண்டவிரல்களால்*  இறைப்போதும்எண்ணகிலாதுபோய்* 
    உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்*  கவளம்உந்துகின்றார்களே.


    உரகமெல்அணையான்கையில்*  உறைசங்கம்போல்மடஅன்னங்கள்* 
    நிரைகணம்பரந்துஏறும்*  செங்கமலவயற் திருக்கோட்டியூர்*

    நரகநாசனைநாவிற் கொண்டுஅழையாத*  மானிடசாதியர்* 
    பருகுநீரும்உடுக்குங்கூறையும்*  பாவம்செய்தனதாம்கொலோ!    


    ஆமையின்முதுகத்  திடைக்குதிகொண்டு*  தூமலர்சாடிப்போய்த்* 
    தீமைசெய்து இளவாளைகள்*  விளையாடுநீர்த் திருக்கோட்டியூர்*

    நேமிசேர்தடங்கையினானை*  நினைப்புஇலா வலிநெஞ்சுஉடை* 
    பூமிபாரங்கள்உண்ணும் சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.   


    பூதம்ஐந்தொடு வேள்விஐந்து*  புலன்கள்ஐந்துபொறிகளால்* 
    ஏதம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*

    நாதனை நரசிங்கனை*  நவின்றுஏத்துவார்கள்உழக்கிய* 
    பாததூளிபடுதலால்*  இவ்உலகம்பாக்கியம்செய்ததே.


    குருந்தமொன்றொ சித்தானொடும்சென்று*  கூடிஆடிவிழாச்செய்து* 
    திருந்துநான்மறையோர்*  இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்க்*

    கருந்தடமுகில்வண்ணனைக்*  கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்* 
    இருந்தஊரில்இருக்கும்மானிடர்*  எத்தவங்கள்செய்தார்கொலோ!  


    நளிர்ந்தசீலன்நயாசலன்*  அபிமானதுங்கனை*  நாள்தொறும்- 
    தெளிந்தசெல்வனைச்*  சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்க்*

    குளிர்ந்துஉறைகின்றகோவிந்தன்*  குணம்பாடுவார்உள்ளநாட்டினுள்* 
    விளைந்ததானியமும் இராக்கதர்*  மீதுகொள்ளகிலார்களே.


    கொம்பின்ஆர்பொழில்வாய்க்*  குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்*
    செம்பொன்ஆர்மதில்சூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*

    நம்பனைநரசிங்கனை*  நவின்றுஏத்துவார்களைக் கண்டக்கால்* 
    எம்பிரான் தனசின்னங்கள்*  இவர்இவர்என்றுஆசைகள்தீர்வனே . 


    காசின்வாய்க்கரம்விற்கிலும்*  கரவாதுமாற்றுஇலிசோறுஇட்டு* 
    தேசவார்த்தைபடைக்கும்*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்க்*

    கேசவா! புருடோத்தமா!*  கிளர்சோதியாய்! குறளா! என்று* 
    பேசுவார்அடியார்கள்*  எம்தம்மைவிற்கவும்பெறுவார்களே.


    சீதநீர்புடைசூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்* 
    ஆதியான்அடியாரையும்*  அடிமையின்றித்திரிவாரையும்* 

    கோதில்பட்டர்பிரான்*  குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்* 
    ஏதம்இன்றிஉரைப்பவர்*  இருடீகேசனுக்குஆளரே (2)


    மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும்*  மற்று அவர்தம் காதலிமார் குழையும்*
    தந்தை  கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி*  கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்*

    நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து*  இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின்* 
    சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே. (2)


    பொற்றொடித் தோள் மட மகள் தன் வடிவு கொண்ட*  பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி* 
    பெற்று எடுத்த தாய்போல மடுப்ப*  ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்*

    நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல்*  இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங்கணார்தம்* 
    சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண் மாலே.


    படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு*  பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும்* 
    அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி*  அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்*

    மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ*  மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி* 
    திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே* 


    வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி*  வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த* 
    கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட*  கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்*

    ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும்*  எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச்* 
    சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை*  கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி* 
    முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப*  மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்* 

    மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி*  ஆடவரை மட மொழியார் முகத்து*  இரண்டு 
    சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.   


    தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன்*  அது கண்டு தரித்திருப்பான் அரக்கர் தங்கள்*    
    கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன*  இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்*

    மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார்*  மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு* 
    தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப்*  பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன்* 
    மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு*  மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்*

    கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த*  குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்தன்னால்* 
    செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே.


    சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு*  திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க*
    நிலமடந்தைதனை இடந்து புல்கிக்*  கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்* 

    இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும்*  ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்* 
    சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.


    ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி*  எண் திசையும் மண்டலமும் மண்டி*
    அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம்*  முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்*

    ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து*  ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர்* 
    சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலே.


    சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த்*  திருத்தெற்றியம்பலத்து என்செங்கண்மாலை* 
    கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன்*  கொடி மாட மங்கையர் கோன் குறையல் ஆளி*

    பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன*  பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
    சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி*  சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர் தாமே*


    மண்ணை இருந்து துழாவி*  'வாமனன் மண் இது' என்னும்,* 
    விண்ணைத் தொழுது அவன் மேவு*  வைகுந்தம் என்று கை காட்டும்,* 

    கண்ணை உள்நீர் மல்க நின்று*  'கடல்வண்ணன்' என்னும் அன்னே!*  என் 
    பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு*  என் செய்கேன் பெய் வளையீரே? (2)      


    பெய்வளைக் கைகளைக் கூப்பி*  'பிரான்கிடக்கும் கடல்' என்னும்,* 
    செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி,*  'சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்,* 

    நையும் கண்ணீர் மல்க நின்று*  'நாரணன்' என்னும் அன்னே,*  என் 
    தெய்வ உருவில் சிறுமான்*  செய்கின்றது ஒன்று அறியேனே.


    அறியும் செந்தீயைத் தழுவி*  'அச்சுதன்' என்னும்மெய்வேவாள்,* 
    எறியும்தண் காற்றைத் தழுவி*  'என்னுடைக் கோவிந்தன்' என்னும்,*

    வெறிகொள் துழாய் மலர் நாறும்*  வினையுடையாட்டியேன் பெற்ற* 
    செறிவளை முன்கைச் சிறுமான்*  செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே?   


    ஒன்றிய திங்களைக் காட்டி*  'ஒளிமணி வண்ணனே' என்னும்* 
    நின்ற குன்றத்தினை நோக்கி* நெடுமாலே! வா 'என்று கூவும்,* 

    நன்று பெய்யும் மழை காணில்*  நாரணன் வந்தான் என்று ஆலும்,* 
    என்று இன மையல்கள் செய்தான்*  என்னுடைக் கோமளத்தையே?


    கோமள வான் கன்றைப் புல்கி*  கோவிந்தன் மேய்த்தன' என்னும்,* 
    போம் இள நாகத்தின் பின்போய்*  அவன் கிடக்கை ஈது என்னும்,*

    ஆம் அளவு ஒன்றும் அறியேன்*  அருவினையாட்டியேன் பெற்ற,* 
    கோமள வல்லியை மாயோன்*  மால் செய்து செய்கின்ற கூத்தே.


    கூத்தர் குடம் எடுத்து ஆடில்*  'கோவிந்தன்ஆம்' எனா ஓடும்,* 
    வாய்த்த குழல் ஓசை கேட்கில்*  'மாயவன்' என்று மையாக்கும்,*

    ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில்*  அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்,* 
    பேய்ச்சி முலை சுவைத்தாற்கு*  என் பெண்கொடி ஏறிய பித்தே!


    ஏறிய பித்தினோடு*  எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்,* 
    நீறு செவ்வே இடக் காணில்*  நெடுமால் அடியார்' என்று ஓடும்,*

    நாறு துழாய் மலர் காணில்*  நாரணன் கண்ணி ஈது என்னும்,* 
    தேறியும் தேறாதும் மாயோன்*  திறத்தனளே இத் திருவே.


    திரு உடை மன்னரைக் காணில்,*  திருமாலைக் கண்டேனே என்னும்,* 
    உரு உடை வண்ணங்கள் காணில்*  'உலகு அளந்தான்' என்று துள்ளும்,*

    கரு உடைத் தேவு இல்கள் எல்லாம்*  'கடல்வண்ணன் கோயிலே' என்னும்* 
    வெருவிலும் வீழ்விலும் ஓவாள்*  கண்ணன் கழல்கள் விரும்புமே.      


    விரும்பிப் பகவரைக் காணில்*  'வியல் இடம் உண்டானே!' என்னும்,* 
    கரும் பெரு மேகங்கள் காணில்*  'கண்ணன்' என்று ஏறப் பறக்கும்,*

    பெரும் புல ஆ நிரை காணில்*  'பிரான் உளன்' என்று பின் செல்லும்,* 
    அரும் பெறல் பெண்ணினை மாயோன்*  அலற்றி அயர்ப்பிக்கின்றானே!    


    அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி*  அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,* 
    வியர்க்கும் மழைக்கண் துளும்ப*  வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும்,* 
     

    பெயர்த்தும் கண்ணா! என்று பேசும்,*  பெருமானே! வா! என்று கூவும்,* 
    மயல் பெருங் காதல் என் பேதைக்கு*  என்செய்கேன் வல்வினையேனே!   


    வல்வினை தீர்க்கும் கண்ணனை* வண் குருகூர்ச் சடகோபன்,* 
    சொல் வினையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இவை பத்தும்,*

    நல் வினை என்று கற்பார்கள்*  நலனிடை வைகுந்தம் நண்ணி,*
    தொல்வினை தர எல்லாரும்*  தொழுது எழ வீற்றிருப்பாரே. (2)