பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்*  தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி* 
    குழல்களும் கீதமும் ஆகி*  எங்கும்- கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு* 

    மழைகொலோ வருகின்றது என்று சொல்லி*  மங்கைமார் சாலக வாசல் பற்றி* 
    நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்*  உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே.* (2)


    வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு*  வசை அறத் திருவரை விரித்து உடுத்து* 
    பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி*  பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே* 

    முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்- அணிந்து*  பல் ஆயர் குழாம் நடுவே* 
    எல்லியம் போதாகப் பிள்ளை வரும்*  எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே*


    சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும்*  மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட* 
    ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி*  ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்*

    வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்*  மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்* 
    அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள்*  அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே.*


    குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான்*  கோவலனாய்க் குழல் ஊதி ஊதிக்* 
    கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு*  கலந்து உடன் வருவானைத் தெருவிற் கண்டு* 

    என்றும் இவனை ஒப்பாரை நங்காய்*  கண்டறியேன் ஏடி! வந்து காணாய்* 
    ஒன்றும்நில்லா வளை கழன்று*  துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே.* 


    சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்*  சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து* 
    பற்றி நின்று ஆயர் கடைத்தலையே*  பாடவும் ஆடக் கண்டேன்*  அன்றிப் பின்- 

    மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்*  மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்* 
    கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்*  கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.*


    சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்*  திருத்திய கோறம்பும் திருக்குழலும்* 
    அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்*  வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச*

    அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை*  அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்* 
    பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்* பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ !*


    சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின்கீழ்த்*  தன் திருமேனிநின்று ஒளி திகழ* 
    நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து*  பல் ஆயர் குழாம் நடுவே* 

    கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்*  குழல் ஊதி இசைப் பாடிக் குனித்து* ஆயரோடு- 
    ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை*  அழகு கண்டு என்மகள் அயர்க்கின்றதே.*


    சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்*  திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்* 
    அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை*  அழகிய நேத்திரத்தால் அணிந்து* 

    இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை*  எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன* 
    சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்*  துகிலொடு சரிவளை கழல்கின்றதே.


    வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து*  மல்லிகை வனமாலை மௌவல் மாலை* 
    சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்*  தீங்குழல் வாய்மடுத்து ஊதி ஊதி* 

    அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை*  அழகு கண்டு என்மகள் ஆசைப்பட்டு*
    விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர்* வெள்வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.* 


    விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ*  மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே* 
    கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு*  இளஆய்க் கன்னிமார் காமுற்ற- 

    வண்ணம்*  வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்*   விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்* 
    பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)  


    ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி*  உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி*
    ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த*  தாடாளன் தாள் அணைவீர்*

    தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்*  அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்* 
    தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச்*  சீராமவிண்ணகரே சேர்மின் நீரே. (2) 


    நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை*  நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி*
    நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை*  ஒளி மலர்ச் சேவடி அணைவீர்*

    உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத்*  தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க*
    எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய்*  மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து* 
    நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள்*  நேர்த்தவன் தாள் அணைகிற்பீர்*

    நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும்*  மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள்* 
    செய் அணைந்து களை களையாது ஏறும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து*  முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்* 
    நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட*  நின்மலன் தாள் அணைகிற்பீர்*

    நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே*  தண் மதியின் நிலாக் காட்ட பவளம் தன்னால்* 
    செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு*  திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து* 
    வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்*

    விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட*  அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல்* 
    செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.   


    பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள*  படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை* 
    வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த*  விண்ணவர் கோன் தாள் அணைவீர்* 

    வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும்*  துடி இடையார் முகக் கமலச் சோதி தன்னால்* 
    திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.


    பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும்*  புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த* 
    செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன்*  திருவடி சேர்ந்து உய்கிற்பீர்*

    திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி*  வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி* 
    தெருவில் வலம்புரி தரளம் ஈனும்*  காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே.         


    பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய்*  பணை நெடுந் தோள் பிணை நெடுங்கண் பால்ஆம் இன்சொல்* 
    மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின்*  மரம் கொணர்ந்தான் அடி அணைவீர்*

    அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங்காய்வீழ*  நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு*
    பீனத்தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின் நீரே. 


    பிறைதங்கு சடையானை வலத்தே வைத்து*  பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து* 
    கறைதங்கு வேல்தடங்கண் திருவைமார்பில்*  கலந்தவன் தாள்அணைகிற்பீர்*

    கழுநீர்கூடி துறைதங்கு கமலத்துத்துயின்று*  கைதைத் தோடுஆரும் பொதிசோற்றுச் சுண்ணம்நண்ணி* 
    சிறைவண்டு களிபாடும் வயல்சூழ்*  காழிச்சீராம விண்ணகரே சேர்மின்நீரே.    


    செங்கமலத்து அயன்அனைய மறையோர்*  காழிச் சீராமவிண்ணகர் என்செஙகண்மாலை* 
    அம்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்*  அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார்சீயம்*

    கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்*  கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன* 
    சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2) 


    புகழும் நல் ஒருவன் என்கோ!* பொரு இல் சீர்ப் பூமிஎன்கோ,* 
    திகழும் தண் பரவை என்கோ!*  தீ என்கோ! வாயு என்கோ,*

    நிகழும் ஆகாசம் என்கோ!*  நீள் சுடர் இரண்டும் என்கோ,* 
    இகழ்வு இல் இவ் அனைத்தும் என்கோ*  கண்ணனைக் கூவும் ஆறே! 


    கூவும் ஆறு அறியமாட்டேன்*  குன்றங்கள் அனைத்தும் என்கோ,*
    மேவு சீர் மாரி என்கோ!*  விளங்கு தாரகைகள் என்கோ,*

    நா இயல் கலைகள் என்கோ!*  ஞான நல்ஆவி என்கோ,* 
    பாவு சீர்க் கண்ணன் எம்மான்*  பங்கயக் கண்ணனையே! 


    பங்கயக் கண்ணன் என்கோ!*  பவளச் செவ்வாயன் என்கோ,*
    அம் கதிர் அடியன் என்கோ!*  அஞ்சன வண்ணன் என்கோ,*

    செங்கதிர் முடியன் என்கோ!*  திரு மறு மார்பன் என்கோ,*
    சங்கு சக்கரத்தன் என்கோ!*  சாதி மாணிக்கத்தையே!      


    சாதி மாணிக்கம் என்கோ!*  சவி கொள் பொன் முத்தம் என்கோ*
    சாதி நல் வயிரம் என்கோ,*  தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,*

    ஆதி அம் சோதி என்கோ!*  ஆதி அம் புருடன் என்கோ,* 
    ஆதும் இல் காலத்து எந்தை*  அச்சுதன் அமலனையே!    


    அச்சுதன் அமலன் என்கோ,*  அடியவர் வினை கெடுக்கும்,* 
    நச்சும் மா மருந்தம் என்கோ!*  நலங் கடல் அமுதம் என்கோ,*

    அச்சுவைக் கட்டி என்கோ!*  அறுசுவை அடிசில் என்கோ,*
    நெய்ச் சுவைத் தேறல் என்கோ!*  கனி என்கோ! பால் என்கேனோ!


    பால் என்கோ!*  நான்கு வேதப் பயன் என்கோ,*  சமய நீதி 
    நூல் என்கோ!*  நுடங்கு கேள்வி இசை என்கோ! இவற்றுள் நல்ல

    மேல் என்கோ,*  வினையின் மிக்க பயன் என்கோ,*  கண்ணன் என்கோ!- 
    மால் என்கோ! மாயன் என்கோ*  வானவர் ஆதியையே!    


    வானவர் ஆதி என்கோ!*  வானவர் தெய்வம் என்கோ,*
    வானவர் போகம் என்கோ!*  வானவர் முற்றும் என்கோ,*

    ஊனம் இல் செல்வம் என்கோ!*  ஊனம் இல் சுவர்க்கம் என்கோ,*
    ஊனம் இல் மோக்கம் என்கோ!*  ஒளி மணி வண்ணனையே!


    ஒளி மணி வண்ணன் என்கோ!*  ஒருவன் என்று ஏத்த நின்ற* 
    நளிர் மதிச் சடையன் என்கோ!*  நான்முகக் கடவுள் என்கோ,*

    அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்*  படைத்து அவை ஏத்த நின்ற,* 
    களி மலர்த் துளவன் எம்மான்*  கண்ணனை மாயனையே!   


    கண்ணனை மாயன் தன்னை*  கடல் கடைந்து அமுதம் கொண்ட,* 
    அண்ணலை அச்சுதனை*  அனந்தனை அனந்தன் தன்மேல்,* 

    நண்ணி நன்கு உறைகின்றானை*  ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை,* 
    எண்ணும் ஆறு அறியமாட்டேன்,*  யாவையும் எவரும் தானே. 


    யாவையும் எவரும் தானாய்*  அவரவர் சமயம் தோறும்,* 
    தோய்வு இலன் புலன் ஐந்துக்கும்*  சொலப்படான் உணர்வின் மூர்த்தி,*

    ஆவி சேர் உயிரின் உள்ளால்*  ஆதும் ஓர் பற்று இலாத,* 
    பாவனை அதனைக் கூடில்*  அவனையும் கூடலாமே.   


    கூடி வண்டு அறையும் தண் தார்க்*  கொண்டல் போல் வண்ணன் தன்னை* 
    மாடு அலர் பொழில்*  குருகூர் வண் சடகோபன் சொன்ன,* 

    பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவையும் ஓர் பத்தும் வல்லார்,* 
    வீடு இல போகம் எய்தி*  விரும்புவர் அமரர் மொய்த்தே. (2)