பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    வெண்ணெய் அளைந்த குணுங்கும்*  விளையாடு புழுதியும் கொண்டு* 
    திண்ணென இவ் இரா உன்னைத்*  தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்*

    எண்ணெய் புளிப்பழம் கொண்டு*  இங்கு எத்தனை போதும் இருந்தேன்* 
    நண்ணல் அரிய பிரானே!*  நாரணா! நீராட வாராய்  (2)


    கன்றுகள் ஓடச் செவியிற்*  கட்டெறும்பு பிடித்து இட்டால்* 
    தென்றிக் கெடும் ஆகில்*  வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்*

    நின்ற மராமரம் சாய்த்தாய்!*  நீ பிறந்த திருவோணம்* 
    இன்று நீ நீராட வேண்டும்*  எம்பிரான்! ஓடாதே வாராய்


    பேய்ச்சி முலை உண்ணக் கண்டு*  பின்னையும் நில்லாது என்நெஞ்சம்* 
    ஆய்ச்சியர் எல்லாரும் கூடி*  அழைக்கவும் நான் முலை தந்தேன்*

    காய்ச்சின நீரொடு நெல்லி* கடாரத்திற் பூரித்து வைத்தேன்* 
    வாய்த்த புகழ் மணிவண்ணா!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கஞ்சன் புணர்ப்பினில் வந்த*  கடிய சகடம் உதைத்து* 
    வஞ்சகப் பேய்மகள் துஞ்ச*  வாய் முலை வைத்த பிரானே!*

    மஞ்சளும் செங்கழுநீரின்*  வாசிகையும் நறுஞ்சாந்தும்* 
    அஞ்சனமும் கொண்டு வைத்தேன்*  அழகனே! நீராட வாராய்


    அப்பம் கலந்த சிற்றுண்டி*  அக்காரம் பாலிற் கலந்து* 
    சொப்பட நான் சுட்டு வைத்தேன்*  தின்னல் உறுதியேல் நம்பி!*

    செப்பு இள மென்முலையார்கள்*  சிறுபுறம் பேசிச் சிரிப்பர்* 
    சொப்பட நீராட வேண்டும்*  சோத்தம் பிரான்! இங்கே வாராய்


    எண்ணெய்க் குடத்தை உருட்டி*  இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்* 
    கண்ணைப் புரட்டி விழித்துக்*  கழகண்டு செய்யும் பிரானே!*

    உண்ணக் கனிகள் தருவன்*  ஒலிகடல் ஓதநீர் போலே* 
    வண்ணம் அழகிய நம்பீ!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கறந்த நற்பாலும் தயிரும்*  கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்* 
    பிறந்ததுவே முதலாகப்*  பெற்றறியேன் எம்பிரானே!*

    சிறந்த நற்றாய் அலர் தூற்றும்*  என்பதனால் பிறர் முன்னே* 
    மறந்தும் உரையாட மாட்டேன்*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கன்றினை வால் ஓலை கட்டி*  கனிகள் உதிர எறிந்து* 
    பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்*  பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்* 

    நின்திறத்தேன் அல்லேன் நம்பீ!*  நீ பிறந்த திரு நன்னாள்* 
    நன்று நீ நீராட வேண்டும்*  நாரணா! ஓடாதே வாராய்


    பூணித் தொழுவினிற் புக்குப்*  புழுதி அளைந்த பொன்-மேனி* 
    காணப் பெரிதும் உகப்பன்*  ஆகிலும் கண்டார் பழிப்பர்*

    நாண் இத்தனையும் இலாதாய்!*  நப்பின்னை காணிற் சிரிக்கும்* 
    மாணிக்கமே! என்மணியே!*  மஞ்சனம் ஆட நீ வாராய்


    கார் மலி மேனி நிறத்துக்*  கண்ணபிரானை உகந்து* 
    வார் மலி கொங்கை யசோதை*  மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்*

    பார் மலி தொல் புதுவைக் கோன்*  பட்டர்பிரான் சொன்ன பாடல்* 
    சீர் மலி செந்தமிழ் வல்லார்*  தீவினை யாதும் இலரே  (2)


    அன்று ஆயர் குலக் கொடியோடு*  அணி மாமலர் மங்கையொடு அன்பு அளவி*  
    அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு*  உறையும் இடம் ஆவது*

    இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை*  தடம் திகழ் கோவல்நகர்* 
    நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.


    காண்டாவனம் என்பது ஓர் காடு*  அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க*
    முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான்*

    அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து*  அரியாய்  நீண்டான்* 
    குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே*  


    அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து*  அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்* 
    புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள்*  பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்* 

    பல மன்னர் பட சுடர் ஆழியினைப்*  பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர்* 
    நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.


    தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்*  அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்* 
    பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அமரில்*

    பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி*  பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட* 
    நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.      


    மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு*  அணை கட்டி வரம்பு உருவ*
    மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட*  படை தொட்டு ஒருகால் அமரில் அதிர*

    காலம் இது என்று அயன் வாளியினால்*  கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்* 
    நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.   


    பார் ஆர் உலகும் பனி மால் வரையும்*  கடலும் சுடரும் இவை உண்டும்*
    எனக்கு ஆராது என நின்றவன் எம் பெருமான்*  அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய*

    அப் பேரானை முனிந்த முனிக்கு அரையன்*  பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்* 
    நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்*  புகழ் வீட முனிந்து உயிர் உண்டு*
    அசுரன் நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அவுணன்* 

    பகராதவன் ஆயிரம் நாமம்*  அடிப் பணியாதவனை பணியால் அமரில்* 
    நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    பிச்சச் சிறு பீலி பிடித்து*  உலகில் பிணம் தின் மடவார் அவர் போல்* 
    அங்ஙனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்*  அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய்*

    நச்சி நமனார் அடையாமை*  நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு* 
    நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    பேசும் அளவு அன்று இது வம்மின்*  நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்* 
    நாசம் அது செய்திடும் ஆதன்மையால்*  அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல்*

    வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்*  மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்*
    மதிஇல் நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே. 


    நெடுமால் அவன் மேவிய நீர்மலைமேல்*  நிலவும் புகழ் மங்கையர் கோன்*
    அமரில் கட மா களி யானை வல்லான்*  கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு*

    உடனே விடும் மால் வினை*  வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்* 
    கொடு மா கடல் வையகம் ஆண்டு*  மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே. (2)


    ஆடி ஆடி*  அகம் கரைந்து,*  இசை 
    பாடிப் பாடிக்*  கண்ணீர் மல்கி,*  எங்கும்

    நாடி நாடி*  நரசிங்கா என்று,* 
    வாடி வாடும்*  இவ் வாள் நுதலே.   


    வாள் நுதல்*  இம் மடவரல்,*  உம்மைக் 
    காணும் ஆசையுள்*  நைகின்றாள்,*  விறல்

    வாணன்*  ஆயிரம் தோள் துணித்தீர்,*  உம்மைக் 
    காண*  நீர் இரக்கம் இலீரே. 


    இரக்க மனத்தோடு*  எரி அணை,* 
    அரக்கும் மெழுகும்*  ஒக்கும் இவள்,*

    இரக்கம் எழீர்*  இதற்கு என் செய்கேன்,* 
    அரக்கன் இலங்கை*  செற்றீருக்கே.   


    இலங்கை செற்றவனே என்னும்,*  பின்னும் 
    வலம் கொள்*  புள் உயர்த்தாய் என்னும்,*  உள்ளம்

    மலங்க*  வெவ் உயிர்க்கும்,*  கண்ணீர் மிகக் 
    கலங்கிக்*  கைதொழும் நின்று இவளே


    இவள் இராப்பகல்*  வாய்வெரீ இத்,*  தன 
    குவளை ஒண்*  கண்ண நீர் கொண்டாள்,*  வண்டு

    திவளும்*  தண் அம் துழாய் கொடீர்,*  என 
    தவள வண்ணர்*  தகவுகளே. 


    தகவு உடையவனே என்னும்,*  பின்னும் 
    மிக விரும்பும்*  பிரான் என்னும்,*  எனது

    அக உயிர்க்கு*  அமுதே என்னும்,*  உள்ளம் 
    உக உருகி*  நின்று உள் உளே.


    உள் உள் ஆவி*  உலர்ந்து உலர்ந்து,*  என 
    வள்ளலே*  கண்ணனே என்னும்,*  பின்னும்

    வெள்ள நீர்க்*  கிடந்தாய் என்னும்,*  என 
    கள்விதான்*  பட்ட வஞ்சனையே.


    வஞ்சனே என்னும்*  கைதொழும்,*  தன 
    நெஞ்சம்வேவ*  நெடிது உயிர்க்கும்,*  விறல்

    கஞ்சனை*  வஞ்சனை செய்தீர்,*  உம்மைத் 
    தஞ்சம் என்று*  இவள் பட்டனவே.     


    பட்ட போது*  எழு போது அறியாள்,*  விரை 
    மட்டு அலர்*  தண் துழாய் என்னும்,*  சுடர்

    வட்ட வாய்*  நுதி நேமியீர்,*  நுமது 
    இட்டம் என்கொல்*  இவ்ஏழைக்கே.


    ஏழை பேதை*  இராப்பகல்,*  தன 
    கேழ் இல் ஒண்*  கண்ண நீர் கொண்டாள்,*  கிளர்

    வாழ்வை வேவ*  இலங்கை செற்றீர்.*  இவள் 
    மாழை நோக்கு ஒன்றும்*  வாட்டேன்மினே      


    வாட்டம் இல் புகழ்*  வாமனனை*  இசை 
    கூட்டி*  வண் சடகோபன் சொல்,*  அமை 

    பாட்டு*  ஓர் ஆயிரத்து இப் பத்தால்,*  அடி 
    சூட்டலாகும்*  அம் தாமமே.