பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    மாணிக்கம் கட்டி*  வயிரம் இடை கட்டி* 
    ஆணிப் பொன்னால் செய்த*  வண்ணச் சிறுத்தொட்டில்*

    பேணி உனக்குப்*  பிரமன் விடுதந்தான்* 
    மாணிக் குறளனே தாலேலோ* 
    வையம் அளந்தானே தாலேலோ (2)


    உடையார் கனமணியோடு*  ஒண் மாதுளம்பூ* 
    இடை விரவிக் கோத்த*  எழிற் தெழ்கினோடும்*

    விடை ஏறு காபாலி*  ஈசன் விடுதந்தான்* 
    உடையாய்! அழேல் அழேல் தாலேலோ* 
    உலகம் அளந்தானே! தாலேலோ


    என்தம்பிரானார்*  எழிற் திருமார்வற்குச்*
    சந்தம் அழகிய*  தாமரைத் தாளற்கு*

    இந்திரன் தானும்*  எழில் உடைக் கிண்கிணி* 
    தந்து உவனாய் நின்றான் தாலேலோ* 
    தாமரைக் கண்ணனே! தாலேலோ


    சங்கின் வலம்புரியும்*  சேவடிக் கிண்கிணியும்* 
    அங்கைச் சரிவளையும்*  நாணும் அரைத்தொடரும்*

    அங்கண் விசும்பில்*  அமரர்கள் போத்தந்தார்* 
    செங்கண் கருமுகிலே! தாலேலோ* 
     தேவகி சிங்கமே! தாலேலோ   


    எழில் ஆர் திருமார்வுக்கு*  ஏற்கும் இவை என்று*
    அழகிய ஐம்படையும்*  ஆரமும் கொண்டு*

    வழு இல் கொடையான்*  வயிச்சிரவணன்* 
    தொழுது உவனாய் நின்றான் தாலேலோ* 
    தூமணி வண்ணனே தாலேலோ


    ஓதக் கடலின்*  ஒளிமுத்தின் ஆரமும்* 
    சாதிப் பவளமும்*  சந்தச் சரிவளையும்*

    மா தக்க என்று*  வருணன் விடுதந்தான்* 
    சோதிச் சுடர் முடியாய்! தாலேலோ* 
    சுந்தரத் தோளனே! தாலேலோ


    கானார் நறுந்துழாய்*  கைசெய்த கண்ணியும்* 
    வானார் செழுஞ்சோலைக்*  கற்பகத்தின் வாசிகையும்*

    தேனார் மலர்மேல்*  திருமங்கை போத்தந்தாள்* 
    கோனே! அழேல் அழேல் தாலேலோ* 
     குடந்தைக் கிடந்தானே! தாலேலோ


    கச்சொடு பொற்சுரிகை*  காம்பு கனகவளை*
    உச்சி மணிச்சுட்டி*  ஒண்தாள் நிரைப் பொற்பூ*

    அச்சுதனுக்கு என்று*  அவனியாள் போத்தந்தாள்*
    நச்சுமுலை உண்டாய்! தாலேலோ*
    நாராயணா! அழேல் தாலேலோ


    மெய் திமிரும் நானப்*  பொடியொடு மஞ்சளும்*
    செய்ய தடங்கண்ணுக்கு*  அஞ்சனமும் சிந்துரமும்*

    வெய்ய கலைப்பாகி*  கொண்டு உவளாய் நின்றாள்*
    ஐயா! அழேல் அழேல் தாலேலோ* 
     அரங்கத்து அணையானே! தாலேலோ


    வஞ்சனையால் வந்த*  பேய்ச்சி முலை உண்ட*
    அஞ்சன வண்ணனை*  ஆய்ச்சி தாலாட்டிய*

    செஞ்சொல் மறையவர் சேர்*  புதுவைப் பட்டன் சொல்*
    எஞ்சாமை வல்லவர்க்கு*  இல்லை இடர்தானே  (2)


    ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து*  அன்று இணை அடி இமையவர் வணங்க* 
    தானவன் ஆகம் தரணியில் புரளத்*  தடஞ் சிலை குனித்த என் தலைவன்*

    தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த*  தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து* 
    வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  (2)   


    கானிடை உருவை சுடு சரம் துரந்து*  கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்* 
    ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப*  உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்* 

    தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்*  சென்று சென்று இறைஞ்சிட*
    பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.   


    இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்*  இரு நிதிக்கு இறைவனும்*
    அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்*  கொழுஞ் சுடர் சுழன்ற* 

    விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்*  வெண் துகில் கொடி என விரிந்து* 
    வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.       


    துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே!*  தொழுது எழு தொண்டர்கள் தமக்குப்* 
    பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்*  பேர் அருளாளன் எம் பெருமான்* 

    அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்*  ஆரமும் வாரி வந்து*
    அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.        


    பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன்*  பெரு முலை சுவைத்திட*
    பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட*  வளர்ந்த என் தலைவன்*

    சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த*  செம்பொன் செய் விலங்கலில் இலங்கு,* 
    வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்,*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே


    தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து*  ஒரு மறத் தொழில் புரிந்து* 
    பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த*  பனி முகில் வண்ணன் எம் பெருமான்

    காரணம் தன்னால் கடும் புனல் கயத்த*  கரு வரை பிளவு எழக் குத்தி* 
    வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே.


    வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்*  விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்* 
    இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்*  எந்தை எம் அடிகள் எம் பெருமான்*

    அந்தரத்து அமரர் அடி இணை வணங்க*  ஆயிரம் முகத்தினால் அருளி* 
    மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.  


    மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த*  மன்னவன் பொன் நிறத்து உரவோன்* 
    ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா*  உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்* 

    தான் முனிந்து இட்ட*  வெம் திறல் சாபம் தவிர்த்தவன்*
    தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 


    கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்*  குரை கடல் உலகு உடன் அனைத்தும்* 
    உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த*  உம்பரும் ஊழியும் ஆனான்* 

    அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து*  அங்கு அவனியாள் அலமரப்*
    பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானே. 


    வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்*  வதரி ஆச்சிரமத்து உள்ளானை* 
    கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்* 

    வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்*  வானவர் உலகு உடன் மருவி* 
    இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  இமையவர் ஆகுவர் தாமே. (2)


    அம்சிறைய மட நாராய்! அளியத்தாய்!*  நீயும் நின் 
    அம்சிறைய சேவலுமாய்*  ஆஆ என்று எனக்கு அருளி*

    வெம்சிறைப் புள் உயர்த்தார்க்கு*  என் விடு தூதாய்ச் சென்றக்கால்* 
    வன்சிறையில் அவன் வைக்கில்*  வைப்புண்டால் என் செயுமோ? (2)


    என் செய்ய தாமரைக்கண்*  பெருமானார்க்கு என் தூதாய்* 
    என் செய்யும் உரைத்தக்கால்?*  இனக் குயில்காள் நீர் அலிரே?*

    முன் செய்த முழுவினையால்*  திருவடிக்கீழ்க் குற்றேவல்* 
    முன் செய்ய முயலாதேன்*  அகல்வதுவோ? விதியினமே.


    விதியினால் பெடை மணக்கும்*  மென்நடைய அன்னங்காள்!* 
    மதியினால் குறள் மாணாய்*  உலகு இரந்த கள்வர்க்கு*

    மதியிலேன் வல் வினையே*  மாளாதோ? என்று ஒருத்தி* 
    மதி எல்லாம் உள் கலங்கி*  மயங்குமால் என்னீரே!


    என் நீர்மை கண்டு இரங்கி*  இது தகாது என்னாத* 
    என் நீல முகில் வண்ணற்கு*  என் சொல்லி யான் சொல்லுகேனோ?*

    நன் நீர்மை இனி அவர்கண்*  தங்காது என்று ஒரு வாய்ச்சொல்* 
    நன் நீல மகன்றில்காள்!*  நல்குதிரோ? நல்கீரோ?


    நல்கித் தான் காத்து அளிக்கும்*  பொழில் ஏழும்; வினையேற்கே* 
    நல்கத் தான் ஆகாதோ?*  நாரணனைக் கண்டக்கால்*

    மல்கு நீர்ப் புனல் படப்பை*  இரை தேர் வண் சிறு குருகே!* 
    மல்கு நீர்க் கண்ணேற்கு*  ஓர் வாசகம் கொண்டு அருளாயே. 


    அருளாத நீர் அருளி*  அவர் ஆவி துவராமுன்* 
    அருள் ஆழிப் புட்கடவீர்*  அவர் வீதி ஒருநாள் என்று*

    அருள் ஆழி அம்மானைக்*  கண்டக்கால் இது சொல்லி* 
    அருள் ஆழி வரி வண்டே!*  யாமும் என் பிழைத்தோமே?     


    என்பு இழை கோப்பது போலப்*  பனி வாடை ஈர்கின்றது* 
    என் பிழையே நினைந்தருளி*  அருளாத திருமாலார்க்கு*

    என் பிழைத்தாள் திருவடியின்*  தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்* 
    என்பிழைக்கும்? இளங் கிளியே!*  யான் வளர்த்த நீ அலையே?   


    நீயலையே ? சிறு பூவாய்!*  நெடுமாலார்க்கு என் தூதாய்* 
    நோய் எனது நுவல் என்ன,*  நுவலாதே இருந்தொழிந்தாய்*

    சாயலொடு மணி மாமை*  தளர்ந்தேன் நான்*  இனி உனது- 
    வாய் அலகில் இன் அடிசில்*  வைப்பாரை நாடாயே.  


    நாடாத மலர் நாடி*  நாள்தோறும் நாரணன் தன்* 
    வாடாத மலர் அடிக்கீழ்*  வைக்கவே வகுக்கின்று*

    வீடாடி வீற்றிருத்தல்*  வினை அற்றது என் செய்வதோ?* 
    ஊடாடு பனி வாடாய்!*  உரைத்து ஈராய் எனது உடலே.


    உடல் ஆழிப் பிறப்பு வீடு*  உயிர் முதலா முற்றுமாய்க்* 
    கடல் ஆழி நீர் தோற்றி*  அதனுள்ளே கண்வளரும்*

    அடல் ஆழி அம்மானைக்*  கண்டக்கால் இது சொல்லி* 
    விடல் ஆழி மட நெஞ்சே!*  வினையோம் ஒன்றாம் அளவே.


    அளவு இயன்ற ஏழ் உலகத்தவர்*  பெருமான் கண்ணனை* 
    வள வயல் சூழ் வண் குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்து உரைத்த*

    அளவு இயன்ற அந்தாதி*  ஆயிரத்துள் இப் பத்தின்* 
    வள உரையால் பெறலாகும்*  வான் ஓங்கு பெரு வளமே. (2)