பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    கரைஎடுத்த சுரிசங்கும்*  கனபவளத்து எழுகொடியும்,* 
    திரைஎடுத்து வருபுனல்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    விரைஎடுத்த துழாய்அலங்கல்*  விறல்வரைத்தோள் புடைபெயர* 
    வரைஎடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.   (2)


    அரிவிரவு முகில்கணத்தால்*  அகில்புகையால் வரையோடும்* 
    தெரிவுஅரிய மணிமாடத்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    வரிஅரவின் அணைத்துயின்று*  மழைமதத்த சிறுதறுகண்,* 
    கரிவெருவ மருப்புஒசித்தாற்கு*  இழந்தேன்என் கனவளையே. 


    துங்கமா மணிமாட*  நெடுமுகட்டின் சூலிகை, போம்* 
    திங்கள்மா முகில்துணிக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*

    பைங்கண்மால் விடைஅடர்த்து*  பனிமதிகோள் விடுத்துஉகந்த* 
    செங்கண்மால் அம்மானுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.


    கணம்மருவும் மயில்அகவு*  கடிபொழில்சூழ் நெடுமறுகின்,* 
    திணம்மருவு கனமதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்,* 

    மணம்மருவு தோள்ஆய்ச்சி*  ஆர்க்கபோய், உரலோடும்* 
    புணர்மருதம் இறநடந்தாற்கு*  இழந்தேன் என் பொன்வளையே.


    வாய்எடுத்த மந்திரத்தால்*  அந்தணர்தம் செய்தொழில்கள்* 
    தீஎடுத்து மறைவளர்க்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்*

    தாய்எடுத்த சிறுகோலுக்கு*  உளைந்துஓடி தயிர்உண்ட,* 
    வாய்துடைத்த மைந்தனுக்கு*  இழந்தேன் என் வரிவளையே.


    மடல்எடுத்த நெடுந்தாழை*  மருங்குஎல்லாம் வளர்பவளம்,* 
    திடல்எடுத்து சுடர்இமைக்கும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    அடல்அடர்த்து அன்று இரணியனை*  முரண்அழிய அணிஉகிரால்,* 
    உடல்எடுத்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.


    வண்டுஅமரும் மலர்ப்புன்னை*   வரிநீழல் அணிமுத்தம்,* 
    தெண்திரைகள் வரத்திரட்டும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    எண்திசையும் எழுகடலும்*  இருநிலனும் பெருவிசும்பும்,* 
    உண்டுஉமிழ்ந்த பெருமானுக்கு*  இழந்தேன் என் ஒளிவளையே.


    கொங்குமலி கருங்குவளை*  கண்ஆகத் தெண்கயங்கள்* 
    செங்கமலம் முகம்அலர்த்தும்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    வங்கம்மலி தடங்கடலுள்*  வரிஅரவின் அணைத்துயின்ற,* 
    செங்கமல நாபனுக்கு*  இழந்தேன் என் செறிவளையே.


    வார்ஆளும் இளங்கொங்கை*  நெடும்பணைத்தோள் மடப்பாவை,*
    சீர்ஆளும் வரைமார்வன்*  திருக்கண்ணபுரத்து உறையும்,*

    பேராளன் ஆயிரம்பேர்*  ஆயிரவாய் அரவுஅணைமேல்* 
    பேராளர் பெருமானுக்கு*  இழந்தேன் என் பெய்வளையே.


    தேமருவு பொழில்புடைசூழ்*  திருக்கண்ணபுரத்து உறையும்- 
    வாமனனை,*  மறிகடல்சூழ்*  வயல்ஆலி வளநாடன்,*

    காமருசீர்க் கலிகன்றி*  கண்டுஉரைத்த தமிழ்மாலை,* 
    நாமருவி இவைபாட*  வினைஆய நண்ணாவே.  (2)


    அங்கும் இங்கும்*  வானவர் தானவர் யாவரும்* 
    எங்கும் இனையைஎன்று*  உன்னைஅறியகிலாதுஅலற்றி*

    அங்கம்சேரும்*  பூமகள் மண்மகள் ஆய்மகள்* 
    சங்குசக்கரக் கையவன் என்பர்*  சரணமே.  (2)


    சரணமாகிய*  நான்மறை நூல்களும் சாராதே* 
    மரணம் தோற்றம்*  வான்பிணி மூப்புஎன்றுஇவை மாய்த்தோம்*

    கரணப்பல்படை*  பற்றறஓடும் கனல்ஆழி* 
    அரணத்திண் படைஏந்திய*  ஈசற்கு ஆளாயே.


    ஆளும் ஆளார் ஆழியும்*  சங்கும் சுமப்பார்தாம்* 
    வாளும் வில்லும் கொண்டு*  பின் செல்வார் மற்றுஇல்லை*

    தாளும் தோளும்*  கைகளைஆரத் தொழக்காணேன்* 
    நாளும் நாளும் நாடுவன்*  அடியேன் ஞாலத்தே


    ஞாலம் போனகம்பற்றி*  ஓர்முற்றா உருஆகி* 
    ஆலம்பேர்இலை*  அன்னவசம்செய்யும் அம்மானே*

    காலம்பேர்வதுஓர்*  கார்இருள் ஊழி ஒத்துஉளதால்*  உன் 
    கோலம்கார்எழில்*  காணலுற்று ஆழும் கொடியேற்கே


    கொடியார்மாடக்*  கோளூர்அகத்தும் புளியங்குடியும்* 
    மடியாதுஇன்னே*  நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*

    அடியார் அல்லல்தவிர்த்த*  அசைவோ? அன்றேல்*  இப் 
    படிதான் நீண்டுதாவிய*  அசைவோ? பணியாயே.


    பணியாஅமரர்*  பணிவும் பண்பும் தாமேஆம்* 
    அணியார் ஆழியும்*  சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்*

    தணியா வெம்நோய்*  உலகில் தவிர்ப்பான்*  திருநீல 
    மணியார்மேனியோடு*  என்மனம் சூழவருவாரே. 


    வருவார் செல்வார்*  வண்பரிசாரத்து இருந்த*  என் 
    திருவாழ்மார்வற்கு*  என்திறம் சொல்லார் செய்வதுஎன்*

    உருவார் சக்கரம்*  சங்குசுமந்து இங்குஉம்மோடு* 
    ஒருபாடுஉழல்வான்*  ஓர்அடியானும் உளன்என்றே.  


    என்றே என்னை*  உன்ஏர்ஆர்கோலத்திருந்து அடிக்கீழ்* 
    நின்றே ஆட்செய்ய*  நீகொண்டருள நினைப்பதுதான்*

    குன்றுஏழ் பார்ஏழ்*  சூழ்கடல்ஞாலம் முழுஏழும்* 
    நின்றே தாவிய*  நீள்கழல் ஆழித் திருமாலே!


    திருமால் நான்முகன்*  செஞ்சடையான் என்றுஇவர்கள்*  எம் 
    பெருமான் தன்மையை*  யார் அறிகிற்பார்? பேசிஎன்*

    ஒருமாமுதல்வா!*  ஊழிப்பிரான் என்னை ஆளுடைக்* 
    கருமாமேனியன்! என்பன்*  என்காதல் கலக்கவே. 


    கலக்கம் இல்லா*  நல்தவமுனிவர் கரைகண்டோர்* 
    துளக்கம் இல்லா*  வானவர் எல்லாம் தொழுவார்கள்*

    மலக்கம் எய்த*  மாகடல்தன்னைக் கடைந்தானை* 
    உலக்க நாம் புகழ்கிற்பது*  என்செய்வது உரையீரே.   


    உரையா வெம்நோய்தவிர*  அருள் நீள்முடியானை* 
    வரையார்மாடம்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*

    உரையேய் சொல்தொடை*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    நிரையே வல்லார்*  நீடு உலகத்துப் பிறவாரே.   (2)