பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச்*  செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் 
    மனமுள் கொண்டு*  என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மாமுனியை*  மரம் ஏழ் எய்த மைந்தனை*

    நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை*  நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக்* 
    கனவில் கண்டேன் இன்று கண்டமையால்*  என்- கண்இணைகள் களிப்பக் களித்தேனே!*. (2)


    தாய் நினைந்த கன்றே ஒக்க*  என்னையும் தன்னையே நினைக்கச் செய்து*  தான் எனக்கு 
    ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை*  அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட

    வாயனை*  மகரக் குழைக் காதனை*  மைந்தனை மதிள் கோவல் இடைகழி 
    ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை*  என் அன்பனை அன்றி ஆதரியேனே.      


    வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்*  மற்று ஓர் நெஞ்சு அறியான்*  அடியேனுடைச் 
    சிந்தை ஆய் வந்து*  தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன்*

    கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக்கோவினை*  குடம் ஆடிய கூத்தனை 
    எந்தையை எந்தை தந்தை தம்மானை*  எம்பிரானை எத்தால் மறக்கேனே?* 


    உரங்களால் இயன்ற மன்னர் மாள*  பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று* 
    இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்*  எம்பிரானை*  வம்பு ஆர் புனல் காவிரி

    அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி*  ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று* 
    சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி*  என் மனம் தாழ்ந்து நில்லாதே*.


    ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது*  அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து 
    தாங்கு*  தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை*  உம்பர்க்கு அணி ஆய் நின்ற*

    வேங்கடத்து அரியை பரி கீறியை*  வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட 
    தீங் கரும்பினை*  தேனை நன் பாலினை அன்றி*  என் மனம் சிந்தை செய்யாதே*.


    எள் தனைப்பொழுது ஆகிலும்*  என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்* 
    தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின்*  தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்

    கட்டியை*  கரும்பு ஈன்ற இன் சாற்றை*  காதலால் மறை நான்கும் முன் ஓதிய 
    பட்டனை*  பரவைத் துயில் ஏற்றை*  என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே*.     


    பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற*  பாலை ஆகி இங்கே புகுந்து*  என் 
    கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான்*  கொண்ட பின் மறையோர் மனம் தன் உள்*

    விண் உளார் பெருமானை எம்மானை*  வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் 
    வண்ணன்*  மா மணி வண்ணன் எம் அண்ணல்*  வண்ணமே அன்றி வாய் உரையாதே*


    இனி எப் பாவம் வந்து எய்தும்? சொல்லீர்*  எமக்குஇம்மையே அருள்பெற்றமையால்*  அடும் 
    துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர்*  தோற்றத் தொல் நெறியை*  வையம் தொழப்படும்

    முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை*  பத்தர் தாம் நுகர்கின்றது ஓர் 
    கனியை*  காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே.


    தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர்*  தோன்றல் வாள் கலியன்*  திரு ஆலி- 
    நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன்*  நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில்-

    சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும்*  தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்மாலைப்* 
    பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே*. (2)


    வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி*  தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,* 
    புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்*  என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*

    வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த*  வேத ஒலியும் விழா ஒலியும்,* 
    பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும்  அறா*  திருப்பேரெயில் சேர்வன் நானே!  (2)


    நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,* 
    நான்இத் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்*  என்வசம் அன்றுஇதுஇராப்பகல்போய்,* 

    தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ்*  தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,* 
    வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்*  செங்கனி வாயின் திறத்ததுவே.


    செங்கனி வாயின் திறத்ததாயும்*  செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்,* 
    சங்கொடு சக்கரம் கண்டுஉகந்தும்*  தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*

    திங்களும் நாளும் விழாஅறாத*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
    நங்கள்பிரானுக்குஎன் நெஞ்சம் தோழீ!* நாணும் நிறையும் இழந்ததுவே.     


    இழந்த எம்மாமைத் திறத்துப் போன*  என்நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,* 
    உழந்து இனியாரைக் கொண்டுஎன்உசாகோ?*  ஓதக் கடல்ஒலி போல*  எங்கும்

    எழுந்தநல் வேதத்துஒலி நின்றுஓங்கு*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
    முழங்கு சங்கக்கையன் மாயத்துஆழ்ந்தேன்*  அன்னையர்காள் என்னை என்முனிந்தே?


    முனிந்து சகடம் உதைத்து மாயப்  பேய்முலைஉண்டு* மருதுஇடைபோய்,* 
    கனிந்த விளவுக்குக் கன்றுஎறிந்த*  கண்ண பிரானுக்குஎன் பெண்மை தோற்றேன்,*

    முனிந்துஇனி என்செய்தீர் அன்னைமீர்காள்!*  முன்னிஅவன் வந்து வீற்றிருந்த,* 
    கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே*  காலம் பெறஎன்னைக் காட்டுமினே  


    காலம் பெறஎன்னைக் காட்டுமின்கள்*  காதல் கடலின் மிகப் பெரிதால்,* 
    நீல முகில்வண்ணத்து எம்பெருமான்*  நிற்கும்முன்னே வந்துஎன் கைக்கும் எய்தான்,*

    ஞாலத்துஅவன் வந்து வீற்றிருந்த*  நான்மறையாளரும் வேள்வி ஓவா,* 
    கோலச் செந்நெற்கள் கவரி வீசும்*  கூடுபுனல் திருப்பேரெயிற்கே.  


    பேர்எயில் சூழ்கடல் தென்இலங்கை*  செற்றபிரான் வந்து வீற்றிருந்த,* 
    பேரெயிற்கே புக்குஎன்நெஞ்சம் நாடி*  பேர்த்து வரஎங்கும் காண மாட்டேன்,* 

    ஆரை இனிஇங்குஉடையம் தோழீ!* என்நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,* 
    ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?*  என்நெஞ்சம் கண்டதுவே கண்டேனே  


    கண்டதுவே கொண்டுஎல்லாரும் கூடி*  கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக் 
    கொண்டு,*  அலர் தூற்றிற்றுஅது முதலாக்*  கொண்டஎன் காதல் உரைக்கில் தோழீ,*

    மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்*  நீள்விசும்பும் கழியப் பெரிதால்,* 
    தெண்திரை சூழ்ந்துஅவன் வீற்றிருந்த*  தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே


    சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!*  அன்னையர்காள்! என்னைத்தேற்ற வேண்டா,* 
    நீர்கள் உரைக்கின்றது என்இதற்கு?*  நெஞ்சும் நிறைவும் எனக்குஇங்குஇல்லை,*

    கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட*  கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,* 
    ஏர்வள ஒண்கழனிப் பழன*  தென்திருப்பேரெயில் மாநகரே. 


    நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்*  நாண்எனக்கு இல்லைஎன் தோழி மீர்காள்,* 
    சிகர மணிநெடு மாடம் நீடு*  தென்திருப் பேரெயில் வீற்றிருந்த,*

    மகர நெடுங்குழைக் காதன் மாயன்*  நூற்றுவரை அன்று மங்க நூற்ற,* 
    நிகர்இல் முகில்வண்ணன் நேமியான்*  என்  நெஞ்சம் கவர்ந்துஎனை ஊழியானே?     


    ஊழிதோறுஊழி உருவும் பேரும்  செய்கையும்*  வேறவன் வையம் காக்கும்,* 
    ஆழிநீர் வண்ணனை அச்சுதனை*  அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள்*  இவை திருப்பேரெயில் மேய பத்தும்,* 
    ஆழிஅங்கையனை ஏத்த வல்லார்*  அவர்அடிமைத் திறத்து ஆழியாரே.  (2)