பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த*  வலையை அறப்பறித்துப்* 
    புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்*  இனிப்போக விடுவதுண்டே?* 

    மக்கள் அறுவரைக் கல்லிடைமோத*  இழந்தவள் தன்வயிற்றில்* 
    சிக்கென வந்து பிறந்து நின்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!* (2)


    வளைத்துவைத்தேன் இனிப்போகலொட்டேன்*  உன்தன் இந்திரஞாலங்களால்* 
    ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய்*  நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை*

    அளித்தெங்கும் நாடும்நகரமும்*  தம்முடைத் தீவினைதீர்க்கலுற்று* 
    தெளித்துவலஞ்செய்யும் தீர்த்தமுடைத்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன்,*  இனிப்போய்ஒருவன்- 
    தனக்குப்பணிந்து*  கடைத்தலைநிற்கை*  நின்சாயையழிவுகண்டாய்*

    புனத்தினைக் கிள்ளிப்புதுவவி காட்டி*  உன்பொன்னடிவாழ்கவென்று* 
    இனத்துக்குறவர் புதியதுண்ணும்*  எழில்மாலிருஞ்சோலை எந்தாய்! (2)


    காதம்பலவும் திரிந்து உழன்றேற்கு*  அங்கோர்நிழலில்லை நீருமில்லை*  உன்- 
    பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம்*  நான்எங்கும்காண்கின்றிலேன்* 

    தூதுசென்றாய்! குருபாண்டவர்க்காய்*  அங்கோர்பொய்ச்சுற்றம்பேசிச்சென்று* 
    பேதஞ்செய்து எங்கும் பிணம்படைத்தாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    காலுமெழா கண்ணநீரும் நில்லா*  உடல்சோர்ந்து நடுங்கி*  குரல்- 
    மேலுமெழா மயிர்க்கூச்சுமறா*  எனதோள்களும் வீழ்வொழியா*

    மாலுகளாநிற்கும் என்மனனே!*  உன்னை வாழத்தலைப்பெய்திட்டேன்* 
    சேலுகளாநிற்கும் நீள்சுனைசூழ்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    எருத்துக் கொடியுடையானும்*  பிரமனும் இந்திரனும்*  மற்றும்- 
    ஒருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு*  மருந்து அறிவாருமில்லை*

    மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்- 
    திருத்தி*  உன்கோயில் கடைப்புகப்பெய்*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    அக்கரையென்னுமனத்தக் கடலுள் அழுந்தி*  உன்பேரருளால்* 
    இக்கரையேறி இளைத்திருந்தேனை*  அஞ்சேலென்று கைகவியாய்*

    சக்கரமும் தடக்கைகளும்*  கண்களும் பீதகவாடையொடும்* 
    செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    எத்தனைகாலமும் எத்தனையூழியும்*  இன்றொடுநாளையென்றே* 
    இத்தனைகாலமும் போய்க்கிறிப்பட்டேன்*  இனிஉன்னைப்போகலொட்டேன்* 

    மைத்துனன்மார்களைவாழ்வித்து*  மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்!* 
    சித்தம் நின்பாலதறிதியன்றே*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    அன்று வயிற்றில் கிடந்திருந்தே*  அடிமைசெய்யலுற்றிருப்பன்* 
    இன்றுவந்துஇங்கு உன்னைக்கண்டுகொண்டேன்*  இனிப்போகவிடுவதுண்டே?* 

    சென்றங்குவாணனை ஆயிரந்தோளும்*  திருச்சக்கரமதனால்* 
    தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்!*  திருமாலிருஞ்சோலை எந்தாய்!


    சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்*  திருமாலிருஞ்சோலை தன்னுள்- 
    நின்றபிரான்*  அடிமேல் அடிமைத்திறம்*  நேர்படவிண்ணப்பஞ்செய்* 

    பொன்திகழ்மாடம் பொலிந்துதோன்றும்*  புதுவைக்கோன்விட்டுசித்தன்* 
    ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்*  உலகமளந்தான்தமரே. (2)


    வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை*  மூவெழுகால் 
    கொன்ற தேவ*  நின் குரை கழல் தொழுவது ஓர் வகை*  எனக்கு அருள்புரியே*

    மன்றில் மாம் பொழில் நுழைதந்து*  மல்லிகை மௌவலின் போது அலர்த்தி* 
    தென்றல் மா மணம் கமழ்தர வரு*  திருவெள்ளறை நின்றானே.


    வசை இல் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி*  முன்பரிமுகமாய்* 
    இசை கொள் வேதநூல் என்று இவை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய*  மாருதம் வீதியின்வாய* 
    திசை எலாம் கமழும் பொழில் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.          


    வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்*  உடலகம் இரு பிளவாக்* 
    கையில் நீள் உகிர்ப் படை அது வாய்த்தவனே!*  எனக்கு அருள்புரியே,

    மையின் ஆர்தரு வரால் இனம் பாய*  வண்தடத்திடைக் கமலங்கள்*
    தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ்*  திருவெள்ளறை நின்றானே.


    வாம் பரி உக மன்னர்தம் உயிர் செக*  ஐவர்கட்கு அரசு அளித்த* 
    காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!*  நின் காதலை அருள் எனக்கு*

    மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில்*  வாய்அது துவர்ப்பு எய்த* 
    தீம் பலங்கனித் தேன் அது நுகர்*  திருவெள்ளறை நின்றானே. 


    மான வேல் ஒண் கண் மடவரல்*  மண்மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்* 
    ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி*  வெண்முறுவல் செய்து அலர்கின்ற* 
    தேனின் வாய் மலர் முருகு உகுக்கும்*  திருவெள்ளறை நின்றானே.


    பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ*  அமுதினைக் கொடுத்தளிப்பான்* 
    அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி!*  நின் அடிமையை அருள் எனக்கு*

    தங்கு பேடையோடு ஊடிய மதுகரம்*  தையலார் குழல் அணைவான்* 
    திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை*  திருவெள்ளறை நின்றானே. 


    ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி*  அரக்கன் தன் சிரம் எல்லாம்* 
    வேறு வேறு உக வில் அது வளைத்தவனே!*  எனக்கு அருள்புரியே*

    மாறு இல் சோதிய மரகதப் பாசடைத்*  தாமரை மலர் வார்ந்த* 
    தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.


    முன் இவ் ஏழ் உலகு உணர்வுஇன்றி*  இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த* 
    அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே!*  எனக்கு அருள்புரியே,

    மன்னு கேதகை சூதகம் என்று இவை*  வனத்திடைச் சுரும்பு இனங்கள்* 
    தென்ன என்ன வண்டு இன் இசை முரல்*  திருவெள்ளறை நின்றானே.      


    ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல்இடம் முழுதினையும்* 
    பாங்கினால் கொண்ட பரம!நின் பணிந்து எழுவேன்*  எனக்கு அருள்புரியே,* 

    ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி*  வண்டு உழிதர*  மாஏறித்
    தீம் குயில் மிழற்றும் படப்பைத்*  திருவெள்ளறை நின்றானே.


    மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ்*  திருவெள்ளறை அதன்மேய* 
    அஞ்சனம் புரையும் திரு உருவனை*  ஆதியை அமுதத்தை*

    நஞ்சு உலாவிய வேல் வலவன்*  கலிகன்றி சொல் ஐஇரண்டும்* 
    எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார்*  இமையோர்க்கு அரசு ஆவர்களே. 


    மாசு அறு சோதி*  என் செய்ய வாய் மணிக்குன்றத்தை* 
    ஆசு அறு சீலனை*  ஆதி மூர்த்தியை நாடியே* 

    பாசறவு எய்தி*  அறிவு இழந்து எனை நாளையம்?* 
    ஏசு அறும் ஊரவர் கவ்வை*  தோழீ என் செய்யுமே?*     


    என் செய்யும் ஊரவர் கவ்வை*  தோழீ இனி நம்மை* 
    என் செய்ய தாமரைக் கண்ணன்*  என்னை நிறை கொண்டான்*

    முன் செய்ய மாமை இழந்து*  மேனி மெலிவு எய்தி* 
    என் செய்ய வாயும் கருங்கண்ணும்*  பயப்பு ஊர்ந்தவே*.           


    ஊர்ந்த சகடம்*  உதைத்த பாதத்தன்*  பேய்முலை- 
    சார்ந்து சுவைத்த செவ்வாயன்*  என்னை நிறை கொண்டான்*

    பேர்ந்தும் பெயர்ந்தும்*  அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்* 
    தீர்ந்த என் தோழீ!*  என் செய்யும் ஊரவர் கவ்வையே?* 


    ஊரவர் கவ்வை எரு இட்டு*  அன்னை சொல் நீர் படுத்து* 
    ஈர நெல் வித்தி முளைத்த*  நெஞ்சப் பெருஞ் செய்யுள்*

    பேர் அமர் காதல்*  கடல் புரைய விளைவித்த* 
    கார் அமர் மேனி*  நம் கண்ணன் தோழீ! கடியனே* 


    கடியன் கொடியன்*  நெடிய மால் உலகம் கொண்ட-
    அடியன்*  அறிவு அரு மேனி மாயத்தன்*  ஆகிலும்

    கொடிய என் நெஞ்சம்*  அவன் என்றே கிடக்கும் எல்லே* 
    துடி கொள் இடை மடத் தோழீ!*  அன்னை என் செய்யுமே?


    அன்னை என் செய்யில் என்?*  ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்* 
    என்னை இனி உமக்கு ஆசை இல்லை*  அகப்பட்டேன்*

    முன்னை அமரர் முதல்வன்*  வண் துவராபதி- 
    மன்னன்*  மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.   


    வலையுள் அகப்படுத்து*  என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு* 
    அலை கடல் பள்ளி அம்மானை*  ஆழிப்பிரான் தன்னை* 

    கலை கொள் அகல் அல்குல் தோழீ!*  நம் கண்களால் கண்டு* 
    தலையில் வணங்கவும் ஆம் கொலோ?*  தையலார் முன்பே*.  


    பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து*  மருது இடை- 
    போய் முதல் சாய்த்து*  புள் வாய் பிளந்து களிறு அட்ட*

    தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை*  எந் நாள்கொலோ* 
    யாம் உறுகின்றது தோழீ!*  அன்னையர் நாணவே?*      


    நாணும் நிறையும் கவர்ந்து*  என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு* 
    சேண் உயர் வானத்து இருக்கும்*  தேவ பிரான் தன்னை*

    ஆணை என் தோழீ!*  உலகுதோறு அலர் தூற்றி*  ஆம்- 
    கோணைகள் செய்து*  குதிரியாய் மடல் ஊர்துமே*.


    யாம் மடல் ஊர்ந்தும்*  எம் ஆழி அங்கைப் பிரான் உடை*
    தூ மடல் தண் அம் துழாய்*  மலர் கொண்டு சூடுவோம்*

    ஆம் மடம் இன்றி*  தெருவுதோறு அயல் தையலார்*
    நா மடங்காப் பழி தூற்றி*  நாடும் இரைக்கவே*.            


    இரைக்கும் கருங் கடல் வண்ணன்*  கண்ண பிரான் தன்னை* 
    விரைக் கொள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    நிரைக் கொள் அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
    உரைக்க வல்லார்க்கு*  வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்*  (2)