பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    சீலைக் குதம்பை ஒருகாது*  ஒருகாது செந்நிற மேற் தோன்றிப்பூ* 
    கோலப் பணைக் கச்சும் கூறை- உடையும்*  குளிர் முத்தின் கோடாலமும்*

    காலிப் பின்னே வருகின்ற*  கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்* 
    ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்*  நங்கைமீர்! நானே மற்று ஆரும் இல்லை  (2)


    கன்னி நன் மா மதில் சூழ்தரு*  பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்* 
    மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!*  பாவியேன் வாழ்வு உகந்து*

    உன்னை இளங்கன்று மேய்க்கச்*  சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்* 
    என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை*  என்குட்டனே முத்தம் தா*


    காடுகள் ஊடு போய்க்*  கன்றுகள் மேய்த்து மறியோடிக்*  கார்க்கோடற்பூச்- 
    சூடி வருகின்ற தாமோதரா!*  கற்றுத் தூளி காண் உன் உடம்பு*

    பேடை மயிற் சாயற் பின்னை மணாளா!*  நீராட்டு அமைத்து வைத்தேன்* 
    ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்*  உன்னோடு உடனே உண்பான்*


    கடி ஆர் பொழில் அணி வேங்கடவா!*  கரும் போரேறே!*  நீ உகக்கும்- 
    குடையும் செருப்பும் குழலும்*  தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே!*

    கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன*  சிறுக்குட்டச் செங் கமல* 
    அடியும் வெதும்பி*  உன்கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்!* 


    பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை*  வாய்வைத்த போரேறே!*  என்
    சிற்றாயர் சிங்கமே! சீதை மணாளா!*  சிறுக்குட்டச் செங்கண் மாலே!*

    சிற்றாடையும் சிறுப்பத்திரமும்*  இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்* 
    கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்*  கலந்து உடன் வந்தாய் போலும்*


    அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா!*  நீ பொய்கை புக்கு* 
    நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும்*  நான் உயிர் வாழ்ந்திருந்தேன்*

    என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய்?*  ஏதும் ஓர் அச்சம் இல்லை* 
    கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்*  காயாம்பூ வண்ணம் கொண்டாய்!*


    பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய*  பாற்கடல் வண்ணா!*  உன்மேல்- 
    கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த*  கள்ள அசுரர் தம்மைச்*

    சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே*  விளங்காய் எறிந்தாய் போலும்* 
    என்றும் என்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்*  அங்ஙனம் ஆவர்களே*


    கேட்டு அறியாதன கேட்கின்றேன்*  கேசவா! கோவலர் இந்திரற்குக்* 
    காட்டிய சோறும் கறியும் தயிரும்*  கலந்து உடன் உண்டாய் போலும்*

    ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு*  ஒருபோதும் எனக்கு அரிது* 
    வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா!*  உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்*


    திண் ஆர் வெண்சங்கு உடையாய்!*  திருநாள் திரு வோணம் இன்று எழு நாள்*  முன்- 
    பண்நேர் மொழியாரைக் கூவி முளை அட்டிப்*  பல்லாண்டு கூறுவித்தேன்*

    கண்ணாலம் செய்யக்*  கறியும் கலத்தது அரிசியும் ஆக்கி வைத்தேன்* 
    கண்ணா! நீ நாளைத்தொட்டுக் கன்றின் பின் போகேல்*  கோலம் செய்து இங்கே இரு*


    புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி*  தன் புத்திரன் கோவிந்தனைக்* 
    கற்றினம் மேய்த்து வரக் கண்டு*  உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்*

    செற்றம் இலாதவர் வாழ்தரு*  தென்புது வை விட்டுசித்தன் சொல்* 
    கற்று இவை பாட வல்லார்*  கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (2)


    வாட மருது இடை போகி*  மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு* 
    ஆடல் நல் மா உடைத்து*  ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*

    கூடிய மா மழை காத்த*  கூத்தன் என வருகின்றான்* 
    சேடு உயர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே. (2)  


    பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட*  பிள்ளை பரிசு இது என்றால்* 
    மா நில மா மகள்*  மாதர் கேள்வன் இவன் என்றும்*

    வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்*  புலன் கெழு கோவியர் பாடித்* 
    தே மலர் தூவ வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.   


    பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று*  ஆய்ச்சியர் கூடி இழிப்ப* 
    எண் திசையோரும் வணங்க*  இணை மருது ஊடு நடந்திட்டு*

    அண்டரும் வானத்தவரும்*  ஆயிரம் நாமங்களோடு* 
    திண் திறல் பாட வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.  


    வளைக் கை நெடுங்கண் மடவார்*  ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப* 
    தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தண் தடம் புக்கு அண்டர் காண*

    முளைத்த எயிற்று அழல் நாகத்து*  உச்சியில் நின்று அது வாடத்* 
    திளைத்து அமர் செய்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    பருவக் கரு முகில் ஒத்து*  முத்து உடை மா கடல் ஒத்து* 
    அருவித் திரள் திகழ்கின்ற*  ஆயிரம் பொன்மலை ஒத்து* 

    உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து*  இன மால் விடை செற்று* 
    தெருவில் திளைத்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க*  வரு மழை காப்பான்* 
    உய்யப் பரு வரை தாங்கி*  ஆநிரை காத்தான் என்று ஏத்தி*

    வையத்து எவரும் வணங்க*  அணங்கு எழு மா மலை போல* 
    தெய்வப் புள் ஏறி வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே .(2)  


    ஆவர் இவை செய்து அறிவார்?*  அஞ்சன மா மலை போல* 
    மேவு சினத்து அடல் வேழம்*  வீழ முனிந்து*

    அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்*  கை தொழ வீதி வருவான்* 
    தேவர் வணங்கு தண் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே.


    பொங்கி அமரில் ஒருகால்*  பொன்பெயரோனை வெருவ* 
    அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு*  ஆயிரம் தோள் எழுந்து ஆட*

    பைங் கண் இரண்டு எரி கான்ற*  நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்* 
    சிங்க உருவின் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    கரு முகில் போல்வது ஓர் மேனி*  கையன ஆழியும் சங்கும்* 
    பெரு விறல் வானவர் சூழ*  ஏழ் உலகும் தொழுது ஏத்த*

    ஒரு மகள் ஆயர் மடந்தை*  ஒருத்தி நிலமகள்*
    மற்றைத் திருமகளோடும் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.


    தேன் அமர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடம் அமர்ந்த* 
    வானவர் தங்கள் பிரானை*  மங்கையர் கோன்மருவார்* 

    ஊன்அமர் வேல் கலிகன்றி*  ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்* 
    தான் இவை கற்று வல்லார்மேல்*  சாரா தீவினை தானே.  (2) 


    ஒழிவு இல் காலம் எல்லாம்*  உடனாய் மன்னி,* 
    வழு இலா*  அடிமை செய்யவேண்டும் நாம்,*

    தெழி குரல் அருவித்*  திருவேங்கடத்து,* 
    எழில் கொள் சோதி*  எந்தை தந்தை தந்தைக்கே. (2)


    எந்தை தந்தை தந்தை*  தந்தை தந்தைக்கும் 
    முந்தை,*  வானவர் வானவர் கோனொடும்,* 

    சிந்து பூ மகிழும்*  திருவேங்கடத்து,* 
    அந்தம் இல் புகழ்க்*  கார் எழில் அண்ணலே.


    அண்ணல் மாயன்*  அணி கொள் செந்தாமரைக் 
    கண்ணன் செங்கனி,*  வாய்க் கருமாணிக்கம்,*

    தெள் நிறை சுனை நீர்த்,*  திருவேங்கடத்து,* 
    எண் இல் தொல் புகழ்*  வானவர் ஈசனே.


    ஈசன் வானவர்க்கு*  என்பன் என்றால்,*  அது 
    தேசமோ*  திருவேங்கடத்தானுக்கு?,* 

    நீசனேன்*  நிறைவு ஒன்றும் இலேன்,*  என்கண் 
    பாசம் வைத்த*  பரம் சுடர்ச் சோதிக்கே.


    சோதி ஆகி*  எல்லா உலகும் தொழும்,* 
    ஆதிமூர்த்தி என்றால்*  அளவு ஆகுமோ?,*

    வேதியர்*  முழு வேதத்து அமுதத்தை,* 
    தீது இல் சீர்த்*  திருவேங்கடத்தானையே.


    வேம் கடங்கள்*  மெய்மேல் வினை முற்றவும்,* 
    தாங்கள் தங்கட்கு*  நல்லனவே செய்வார்,*

    வேங்கடத்து உறைவார்க்கு*  நம என்னல்- 
    ஆம் கடமை,* அது சுமந்தார்கட்கே.


    சுமந்து மாமலர்*  நீர் சுடர் தூபம் கொண்டு,* 
    அமர்ந்து வானவர்*  வானவர் கோனொடும்,* 

    நமன்று எழும்*  திருவேங்கடம் நங்கட்குச்,* 
    சமன் கொள் வீடு தரும்*  தடங் குன்றமே.


    குன்றம் ஏந்திக்*  குளிர் மழை காத்தவன்,* 
    அன்று ஞாலம்*  அளந்த பிரான்,*  பரன்

    சென்று சேர்*  திருவேங்கட மா மலை,* 
    ஒன்றுமே தொழ*  நம் வினை ஓயுமே. (2)


    ஓயும் மூப்புப்*  பிறப்பு இறப்பு:பிணி,*
    வீயுமாறு செய்வான்*  திருவேங்கடத்து

    ஆயன்,*  நாள் மலர் ஆம்*  அடித்தாமரை,* 
    வாயுள்ளும்மனத்துள்ளும்*  வைப்பார்கட்கே.


    வைத்த நாள் வரை*  எல்லை குறுகிச் சென்று,* 
    எய்த்து இளைப்பதன்*  முன்னம் அடைமினோ,*

    பைத்த பாம்பு அணையான்*  திருவேங்கடம்,* 
    மொய்த்த சோலை*  மொய்பூந்தடந் தாழ்வரே.  


    தாள் பரப்பி*  மண் தாவிய ஈசனை,* 
    நீள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொல்,*

    கேழ் இல் ஆயிரத்து*  இப் பத்தும் வல்லவர்* 
    வாழ்வர் வாழ்வு எய்தி*  ஞாலம் புகழவே. (2)