பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்*  பொரு திறற் கஞ்சன் கடியன்* 
    காப்பாரும் இல்லை கடல்வண்ணா*  உன்னை தனியே போய் எங்கும் திரிதி*

    பேய்ப்பால் முலை உண்ட பித்தனே!*  கேசவ நம்பீ! உன்னைக் காது குத்த* 
    ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்*  அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (2)


    வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி*  மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப* 
    நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத*  நாராயணா! இங்கே வாராய்* 

    எண்ணற்கு அரிய பிரானே*  திரியை எரியாமே காதுக்கு இடுவன்* 
    கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய*  கனகக் கடிப்பும் இவையாம்!


    வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்*  மகரக்குழை கொண்டுவைத்தேன்* 
    வெய்யவே காதில் திரியை இடுவன்*  நீ வேண்டிய தெல்லாம் தருவன்*

    உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய*  ஒண்சுடர் ஆயர்கொழுந்தே* 
    மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து*  மாதவனே! இங்கே வாராய்


    வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு*  வார்காது தாழப் பெருக்கிக்* 
    குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள்*  கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்*

    இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால்*  இனிய பலாப்பழம் தந்து* 
    சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான்*  சோத்தம் பிரான்! இங்கே வாராய்


    சோத்தம் பிரான்! என்று இரந்தாலும் கொள்ளாய்*  சுரிகுழலாரொடு நீ போய்க்* 
    கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்*  குணங்கொண்டு இடுவனோ? நம்பீ*

    பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்*  பிரானே! திரியிட ஒட்டில்* 
    வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல்*  விட்டுவே! நீ இங்கே வாராய்


    விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்!*  உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி* 
    மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி*  மதுசூதனே என்று இருந்தேன்*

    புண் ஏதும் இல்லை உன்காது மறியும்*  பொறுத்து இறைப் போது இரு நம்பீ! 
    கண்ணா! என் கார்முகிலே! கடல்வண்ணா*  காவலனே! முலை உணாயே   


    முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி*  நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு* 
    மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்*  பசுநிரை மேய்த்தாய்*

    சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!*  திரு ஆயர்பாடிப் பிரானே!* 
    தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?


    என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்*  என்னை நான் மண் உண்டேனாக* 
    அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்*  அனைவர்க்கும் காட்டிற்றிலையே?*

    வன் புற்று அரவின் பகைக் கொடி*  வாமன நம்பீ! உன்காதுகள் தூரும்* 
    துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே! திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே


    மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்*  தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று* 
    கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக்*  காணவே கட்டிற்றிலையே?*

    செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்*  சிரீதரா! உன்காது தூரும்* 
    கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற*  காரிகையார் சிரியாமே


    காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்*  காதுகள் வீங்கி எரியில்?* 
    தாரியா தாகில் தலை நொந்திடும் என்று*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?*

    சேரியிற் பிள்ளைகள் எல்லாரும்- காது பெருக்கித்*  திரியவும் காண்டி* 
    ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட*  இருடிகேசா! என்தன் கண்ணே!


    கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்*  கடிகமழ் பூங்குழலார்கள்* 
    எண்ணத்துள் என்றும் இருந்து*  தித்திக்கும் பெருமானே! எங்கள் அமுதே* 

    உண்ணக் கனிகள் தருவன்*  கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்* 
    பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட*  பற்பநாபா இங்கே வாராய்    


    வா என்று சொல்லி என்கையைப் பிடித்து*  வலியவே காதிற் கடிப்பை* 
    நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்?*  காதுகள் நொந்திடும் கில்லேன்*

    நாவற் பழம் கொண்டுவைத்தேன்*  இவை காணாய் நம்பீ*  முன் வஞ்ச மகளைச் 
    சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட*  தாமோதரா இங்கே வாராய்


    வார் காது தாழப் பெருக்கி அமைத்து*  மகரக்குழை இட வேண்டிச்* 
    சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்*  சிந்தையுள் நின்று திகழப்*

    பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன்*  பன்னிரு நாமத்தால் சொன்ன* 
    ஆராத அந்தாதிப் பன்னிரண்டும் வல்லார்*  அச்சுதனுக்கு அடியாரே (2)


    வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்*  வேழமும் பாகனும் வீழச்* 
    செற்றவன் தன்னை புரம் எரி செய்த*  சிவன் உறு துயர் களை தேவை* 

    பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு*  பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை* 
    சிற்றவை பணியால் முடி துறந்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)   


    வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை*  விழுமிய முனிவரர் விழுங்கும்* 
    கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை*  குவலயத்தோர் தொழுதுஏத்தும்* 

    ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை*  ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்*
    மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.(2)


    வஞ்சனை செய்யத் தாய்உருஆகி*  வந்த பேய் அலறிமண் சேர* 
    நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனை*  தானவர் கூற்றை* 

    விஞ்சை வானவர் சாரணர் சித்தர்*  வியந்துதி செய்ய பெண்உருஆகி* 
    அம் சுவை அமுதம் அன்று அளித்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*


    இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த*  எழில் விழவில் பழ நடைசெய்* 
    மந்திர விதியில் பூசனை பெறாது*  மழை பொழிந்திட தளர்ந்து*

    ஆயர் எந்தம்மோடு இன ஆ நிரை தளராமல்*  எம் பெருமான் அருள் என்ன* 
    அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*


    இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்*  நல் புவிதனக்கு இறைவன்* 
    தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை*  மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை*

    பஞ்ச பாண்டவர்க்கு ஆகி*  வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை*
    எந்தை தந்தை தம்மானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*    


    அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்*  அணி இழையைச் சென்று* 
    'எந்தமக்கு உரிமை செய்' என தரியாது*  'எம் பெருமான் அருள்!' என்ன*

    சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்தம்*  பெண்டிரும் எய்தி நூல் இழப்ப* 
    இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*           


    பரதனும் தம்பி சத்துருக்கனனும்*  இலக்குமனோடு மைதிலியும்* 
    இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற*  இராவணாந்தகனை எம்மானை*

    குரவமே கமழும் குளிர் பொழிலூடு*  குயிலொடு மயில்கள் நின்று ஆல* 
    இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே.


    பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்*  வாயில் ஓர் ஆயிரம் நாமம்* 
    ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு*  ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி* 

    பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப*  பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்* 
    தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை*  திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2)


    மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான்*  வேட்கையினோடு சென்று இழிந்த* 
    கான் அமர் வேழம் கைஎடுத்து அலற*  கரா அதன் காலினைக் கதுவ* 

    ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து*  சென்று நின்று ஆழிதொட்டானை* 
    தேன் அமர் சோலை மாட மா மயிலைத்*  திருவல்லிக்கேணிக் கண்டேனே*      


    மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்*  மாட மாளிகையும் மண்டபமும்* 
    தென்னன் தொண்டையர்கோன் செய்த நல் மயிலைத்*  திருவல்லிக்கேணி நின்றானை*

    கன்னி நல் மாட மங்கையர் தலைவன்*  காமரு சீர்க் கலிகன்றி* 
    சொன்ன சொல்மாலை பத்து உடன் வல்லார்*  சுகம் இனிது ஆள்வர் வான்உலகே. (2)


    ஊனில் வாழ் உயிரே*  நல்லை போ உன்னைப் பெற்று,* 
    வான் உளார் பெருமான்*  மதுசூதன் என் அம்மான்,*

    தானும் யானும் எல்லாம்*  தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,* 
    தேனும் பாலும் நெய்யும்*  கன்னலும் அமுதும் ஒத்தே.  


    ஒத்தார் மிக்காரை*  இலையாய மாமாய,* 
    ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய்,*  என்னைப் பெற்ற- 

    அத் தாய் ஆய் தந்தை ஆய்*  அறியாதன அறிவித்து,* 
    அத்தா, நீ செய்தன*  அடியேன் அறியேனே.


    அறியாக் காலத்துள்ளே*  அடிமைக்கண் அன்பு செய்வித்து,* 
    அறியா மா மாயத்து*  அடியேனை வைத்தாயால்,*

    அறியாமைக் குறள் ஆய்*  நிலம் மாவலி மூவடி என்று,* 
    அறியாமை வஞ்சித்தாய்*  எனது ஆவியுள் கலந்தே.


    எனது ஆவியுள் கலந்த*  பெரு நல் உதவிக் கைம்மாறு,* 
    எனது ஆவி தந்தொழிந்தேன்,*  இனி மீள்வது என்பது உண்டே,*

    எனது ஆவி ஆவியும் நீ*  பொழில் ஏழும் உண்ட எந்தாய்,* 
    எனது ஆவி யார்? யான் ஆர்?*  தந்த நீ கொண்டாக்கினையே.  


    இனி யார் ஞானங்களால்*  எடுக்கல் எழாத எந்தாய்,* 
    கனிவார் வீட்டு இன்பமே*  என் கடல் படா அமுதே,*

    தனியேன் வாழ் முதலே*  பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்,* 
    நுனி ஆர் கோட்டில் வைத்தாய்*  நுன பாதம் சேர்ந்தேனே.


    சேர்ந்தார் தீவினைகட்கு*  அரு நஞ்சை திண் மதியை,* 
    தீர்ந்தார் தம் மனத்துப்*  பிரியாது அவர் உயிரைச்,*

    சோர்ந்தே புகல் கொடாச் சுடரை*  அரக்கியை மூக்கு- 
    ஈர்ந்தாயை,*  அடியேன் அடைந்தேன்*  முதல் முன்னமே.


    முன் நல் யாழ் பயில் நூல்*  நரம்பின் முதிர் சுவையே,* 
    பல் நலார் பயிலும்*  பரனே பவித்திரனே,*

    கன்னலே அமுதே*  கார் முகிலே என் கண்ணா,* 
    நின் அலால் இலேன்காண்*  என்னை நீ குறிக்கொள்ளே.


    குறிக்கொள் ஞானங்களால்*  எனை ஊழி செய் தவமும்,* 
    கிறிக்கொண்டு இப் பிறப்பே* சில நாளில் எய்தினன் யான்,*

    உறிக்கொண்ட வெண்ணெய் பால்*  ஒளித்து உண்ணும் அம்மான் பின்,* 
    நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்*  பிறவித் துயர் கடிந்தே.


    கடி வார் தண் அம் துழாய்க்*  கண்ணன் விண்ணவர் பெருமான்,* 
    படி வானம் இறந்த*  பரமன் பவித்திரன் சீர்,*

    செடி ஆர் நோய்கள் கெட*  படிந்து குடைந்து ஆடி,* 
    அடியேன் வாய்மடுத்துப்*  பருகிக் களித்தேனே. 


    களிப்பும் கவர்வும் அற்று*  பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று,* 
    ஒளிக்கொண்ட சோதியுமாய்*  உடன்கூடுவது என்று கொலோ,*

    துளிக்கின்ற வான் இந்நிலம்*  சுடர் ஆழி சங்கு ஏந்தி,* 
    அளிக்கின்ற மாயப் பிரான்*  அடியார்கள் குழாங்களையே.


    குழாம் கொள் பேர் அரக்கன்*  குலம் வீய முனிந்தவனை,* 
    குழாம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த,*

    குழாம் கொள் ஆயிரத்துள்*  இவை பத்தும் உடன் பாடி,* 
    குழாங்களாய் அடியீர் உடன்*  கூடிநின்று ஆடுமினே.