பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    சீதக் கடலுள்*  அமுது அன்ன தேவகி* 
    கோதைக் குழலாள்*  அசோதைக்குப் போத்தந்த*

    பேதைக் குழவி*  பிடித்துச் சுவைத்து உண்ணும்*
    பாதக் கமலங்கள் காணீரே* 
      பவள வாயீர் வந்து காணீரே  (2) 


    முத்தும் மணியும்*  வயிரமும் நன்பொன்னும்*
    தத்திப் பதித்துத்*  தலைப்பெய்தாற் போல்*  எங்கும்

    பத்து விரலும்*  மணிவண்ணன் பாதங்கள்* 
    ஒத்திட்டு இருந்தவா காணீரே* 
          ஒண்ணுதலீர்! வந்து காணீரே


    பணைத்தோள் இள ஆய்ச்சி*  பால் பாய்ந்த கொங்கை*
    அணைத்து ஆர உண்டு*  கிடந்த இப் பிள்ளை*

    இணைக்காலில்*  வெள்ளித் தளை நின்று இலங்கும்*
    கணைக்கால் இருந்தவா காணீரே*
          காரிகையீர்! வந்து காணீரே


    உழந்தாள் நறுநெய்*  ஒரோர் தடா உண்ண*
    இழந்தாள் எரிவினால்*  ஈர்த்து எழில் மத்தின்*

    பழந்தாம்பால் ஓச்ச*  பயத்தால் தவழ்ந்தான்**
    முழந்தாள் இருந்தவா காணீரே*
          முகிழ்முலையீர் வந்து காணீரே


    பிறங்கிய பேய்ச்சி*  முலை சுவைத்து உண்டிட்டு*
    உறங்குவான் போலே*  கிடந்த இப்பிள்ளை*

    மறம் கொள் இரணியன்*  மார்வை முன் கீண்டான்*
    குறங்குகளை வந்து காணீரே* 
          குவிமுலையீர் வந்து காணீரே


    மத்தக் களிற்று*  வசுதேவர் தம்முடைச்* 
    சித்தம் பிரியாத*  தேவகிதன் வயிற்றில்*

    அத்தத்தின் பத்தாம் நாள்*  தோன்றிய அச்சுதன்* 
    முத்தம் இருந்தவா காணீரே* 
          முகிழ்நகையீர் வந்து காணீரே


    இருங்கை மதகளிறு*  ஈர்க்கின்றவனைப்* 
    பருங்கிப் பறித்துக்கொண்டு*  ஓடும் பரமன்தன்* 

    நெருங்கு பவளமும்*  நேர்நாணும் முத்தும்* 
    மருங்கும் இருந்தவா காணீரே* 
          வாணுதலீர் வந்து காணீரே


    வந்த மதலைக்*  குழாத்தை வலிசெய்து* 
    தந்தக் களிறு போல்*  தானே விளையாடும்*

    நந்தன் மதலைக்கு*  நன்றும் அழகிய* 
    உந்தி இருந்தவா காணீரே* 
    ஒளியிழையீர்! வந்து காணீரே


    அதிருங் கடல்நிற வண்ணனை*  ஆய்ச்சி 
    மதுரமுலை ஊட்டி*  வஞ்சித்து வைத்துப்*

    பதறப் படாமே*  பழந் தாம்பால் ஆர்த்த* 
    உதரம் இருந்தவா காணீரே* 
    ஒளிவளையீர் வந்து காணீரே


    பெருமா உரலிற்*  பிணிப்புண்டு இருந்து*  அங்கு 
    இரு மா மருதம்*  இறுத்த இப் பிள்ளை*

    குருமா மணிப்பூண்*  குலாவித் திகழும்* 
    திருமார்வு இருந்தவா காணீரே*
    சேயிழையீர் வந்து காணீரே


    நாள்கள் ஓர் நாலைந்து*  திங்கள் அளவிலே*
    தாளை நிமிர்த்துச்*  சகடத்தைச் சாடிப்போய்*

    வாள் கொள் வளைஎயிற்று*  ஆருயிர் வவ்வினான்*
    தோள்கள் இருந்தவா காணீரே*
     சுரிகுழலீர் வந்து காணீரே 


    மைத்தடங்கண்ணி*  யசோதை வளர்க்கின்ற*
    செய்த்தலை நீல நிறத்துச்*  சிறுப்பிள்ளை*

    நெய்த்தலை நேமியும்*  சங்கும் நிலாவிய* 
    கைத்தலங்கள் வந்து காணீரே* 
    கனங்குழையீர் வந்து காணீரே


    வண்டு அமர் பூங்குழல்*  ஆய்ச்சி மகனாகக்* 
    கொண்டு வளர்க்கின்ற*  கோவலக் குட்டற்கு*

    அண்டமும் நாடும்*  அடங்க விழுங்கிய* 
    கண்டம் இருந்தவா காணீரே* 
    காரிகையீர்! வந்து காணீரே


    எம் தொண்டை வாய்ச் சிங்கம்*  வா என்று எடுத்துக்கொண்டு* 
    அந் தொண்டை வாய்*  அமுது ஆதரித்து*  ஆய்ச்சியர்

    தம் தொண்டை வாயால்*  தருக்கிப் பருகும்*  இச் 
    செந் தொண்டை வாய் வந்து காணீரே* 
    சேயிழையீர்! வந்து காணீரே


    நோக்கி யசோதை*  நுணுக்கிய மஞ்சளால்* 
    நாக்கு வழித்து*  நீராட்டும் இந் நம்பிக்கு*

    வாக்கும் நயனமும்*  வாயும் முறுவலும்* 
    மூக்கும் இருந்தவா காணீரே* 
     மொய்குழலீர் வந்து காணீரே


    விண்கொள் அமரர்கள்*  வேதனை தீர*  முன் 
    மண்கொள் வசுதேவர்*  தம் மகனாய் வந்து*

    திண்கொள் அசுரரைத்*  தேய வளர்கின்றான்* 
    கண்கள் இருந்தவா காணீரே* 
     கனவளையீர் வந்து காணீரே


    பருவம் நிரம்பாமே*  பாரெல்லாம் உய்யத்*
    திருவின் வடிவு ஒக்கும்*  தேவகி பெற்ற*

    உருவு கரிய*  ஒளி மணிவண்ணன்*
    புருவம் இருந்தவா காணீரே* 
    பூண்முலையீர்! வந்து காணீரே


    மண்ணும் மலையும்*  கடலும் உலகு ஏழும்* 
    உண்ணுந் திறத்து*  மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு*

    வண்ணம் எழில்கொள்*  மகரக்குழை இவை* 
    திண்ணம் இருந்தவா காணீரே* 
     சேயிழையீர்! வந்து காணீரே


    முற்றிலும் தூதையும்*  முன்கைமேல் பூவையும்* 
    சிற்றில் இழைத்துத்*  திரிதருவோர்களைப்*

    பற்றிப் பறித்துக்கொண்டு*  ஓடும் பரமன்தன்* 
    நெற்றி இருந்தவா காணீரே* 
    நேரிழையீர்! வந்து காணீரே


    அழகிய பைம்பொன்னின்*  கோல் அங்கைக் கொண்டு* 
    கழல்கள் சதங்கை*  கலந்து எங்கும் ஆர்ப்ப* 

    மழ கன்றினங்கள்*  மறித்துத் திரிவான்* 
    குழல்கள் இருந்தவா காணீரே* 
     குவிமுலையீர் வந்து காணீரே


    சுருப்பார் குழலி*  யசோதை முன் சொன்ன* 
    திருப் பாதகேசத்தைத்*  தென்புதுவைப் பட்டன்*

    விருப்பால் உரைத்த*  இருபதோடு ஒன்றும் 
    உரைப்பார் போய்*  வைகுந்தத்து ஒன்றியிருப்பரே (2)


    முற்ற மூத்து கோல் துணையா*  முன் அடி நோக்கி வளைந்து* 
    இற்ற கால் போல் தள்ளி மெள்ள*  இருந்து அங்கு இளையாமுன்* 

    பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை 
    வற்ற வாங்கி உண்ட வாயான்*  வதரி வணங்குதுமே.


    முதுகு பற்றிக் கைத்தலத்தால்*  முன் ஒரு கோல் ஊன்றி* 
    விதிர் விதிர்த்து கண் சுழன்று*  மேல் கிளைகொண்டு இருமி* 

    இது என் அப்பர் மூத்த ஆறு என்று*  இளையவர் ஏசாமுன்* 
    மது உண் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.  


    உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து*  ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி* 
    நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று*  நடுங்காமுன்* 

    அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய்*  ஆயிரம் நாமம் சொலி* 
    வெறி கொள் வண்டு பண்கள் பாடும்*  வதரி வணங்குதுமே.    


    பீளை சோரக் கண் இடுங்கி*  பித்து எழ மூத்து இருமி*
    தாள்கள் நோவத் தம்மில் முட்டி*  தள்ளி நடவாமுன்* 

    காளை ஆகி கன்று மேய்த்து*  குன்று எடுத்து அன்று நின்றான* 
    வாளை பாயும் தண் தடம் சூழ்*  வதரி வணங்குதுமே.


    பண்டு காமர் ஆன ஆறும்*  பாவையர் வாய் அமுதம்* 
    உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி* 

    தண்டு காலா ஊன்றி ஊன்றி*  தள்ளி நடவாமுன்* 
    வண்டு பாடும் தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.


    எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி*  இருமி இளைத்து*
    உடலம்  பித்தர் போலச் சித்தம் வேறாய்ப்*  பேசி அயராமுன்* 

    அத்தன் எந்தை ஆதி மூர்த்தி*  ஆழ் கடலைக் கடைந்த* 
    மைத்த சோதி எம்பெருமான்*  வதரி வணங்குதுமே.    


    பப்ப அப்பர் மூத்த ஆறு*  பாழ்ப்பது சீத் திரளை* 
    ஒப்ப ஐக்கள் போத உந்த*  உன் தமர் காண்மின் என்று* 

    செப்பு நேர் மென் கொங்கை நல்லார்*  தாம் சிரியாத முன்னம்* 
    வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான்*  வதரி வணங்குதுமே.            


    ஈசி போமின் ஈங்கு இரேல்மின்*  இருமி இளைத்தீர்* 
    உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும்*  குவளை அம் கண்ணியர்பால்*

    நாசம் ஆன பாசம் விட்டு*  நல் நெறி நோக்கல் உறில்* 
    வாசம் மல்கு தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.


    புலன்கள் நைய மெய்யில் மூத்து*  போந்து இருந்து உள்ளம் எள்கி* 
    கலங்க ஐக்கள் போத உந்தி*  கண்ட பிதற்றாமுன்* 

    அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு*  ஆயிரம் நாமம் சொலி* 
    வலங்கொள் தொண்டர் பாடி ஆடும்*  வதரி வணங்குதுமே


    வண்டு தண் தேன் உண்டு வாழும்*  வதரி நெடு மாலைக்* 
    கண்டல் வேலி மங்கை வேந்தன்*  கலியன் ஒலி மாலை* 

    கொண்டு தொண்டர் பாடி ஆடக்*  கூடிடில் நீள் விசும்பில்* 
    அண்டம் அல்லால் மற்று அவர்க்கு*  ஓர் ஆட்சி அறியோமே. 


    பத்து உடை அடியவர்க்கு எளியவன்;*  பிறர்களுக்கு அரிய 
    வித்தகன்*  மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*

    மத்து உறு கடை வெண்ணெய்*  களவினில் உரவிடை யாப்புண்டு* 
    எத்திறம், உரலினோடு*  இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)   


    எளிவரும் இயல்வினன்*  நிலை வரம்பு இல பல பிறப்பாய்* 
    ஒளிவரும் முழு நலம்*  முதல் இல கேடு இல வீடு ஆம்*

    தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்*  முழுவதும்; இறையோன்* 
    அளிவரும் அருளினோடு*  அகத்தனன் புறத்தனன் அமைந்தே. 


    அமைவு உடை அறநெறி*  முழுவதும் உயர்வு அற உயர்ந்து* 
    அமைவு உடை முதல் கெடல்*  ஒடிவு இடை அற நிலம் அது ஆம்*

    அமைவு உடை அமரரும்*  யாவையும் யாவரும் தான் ஆம்* 
    அமைவு உடை நாரணன்*  மாயையை அறிபவர் யாரே?    


    யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு அரிய எம் பெருமான்* 
    யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு எளிய எம் பெருமான்*

    பேரும் ஓர் ஆயிரம்*  பிறபல உடைய எம் பெருமான்* 
    பேரும் ஓர் உருவமும்*  உளது இல்லை இலது இல்லை பிணக்கே.  


    பிணக்கற அறுவகைச் சமயமும்*  நெறி உள்ளி உரைத்த* 
    கணக்கு அறு நலத்தனன்*  அந்தம் இல் ஆதி அம் பகவன்*

    வணக்கு உடைத் தவநெறி*  வழிநின்று புறநெறி களைகட்டு* 
    உணக்குமின், பசை அற!*  அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே.    


    உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று*  உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை* 
    உணர்ந்து உணர்ந்து உணரிலும்*  இறைநிலை உணர்வு அரிது உயிர்காள்!*

    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  அரி அயன் அரன் என்னும் இவரை* 
    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து*  இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.   


    ஒன்று எனப் பல என*  அறிவு அரும்வடிவினுள் நின்ற* 
    நன்று எழில் நாரணன்*  நான்முகன் அரன் என்னும் இவரை*

    ஒன்ற நும் மனத்து வைத்து*  உள்ளி நும் இரு பசை அறுத்து* 
    நன்று என நலம் செய்வது*  அவனிடை நம்முடை நாளே.


    நாளும் நின்று அடு நம பழமை*  அம் கொடுவினை உடனே 
    மாளும்*  ஓர் குறைவு இல்லை;*  மனன் அகம் மலம் அறக் கழுவி*

    நாளும் நம் திரு உடை அடிகள் தம்*  நலம் கழல் வணங்கி* 
    மாளும் ஓர் இடத்திலும்*  வணக்கொடு மாள்வது வலமே.


    வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,*  இடம்பெறத் துந்தித் 
    தலத்து எழு திசைமுகன் படைத்த*  நல் உலகமும் தானும்

    புலப்பட*  பின்னும் தன் உலகத்தில்*  அகத்தனன் தானே 
    சொலப் புகில்*  இவை பின்னும் வயிற்று உள;*  இவை அவன் துயக்கே.


    துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்*  அமரரைத் துயக்கும்* 
    மயக்கு உடை மாயைகள்*  வானிலும் பெரியன வல்லன்*

    புயல் கரு நிறத்தனன்;*  பெரு நிலங் கடந்த நல் அடிப் போது* 
    அயர்ப்பிலன் அலற்றுவன்*  தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.


    அமரர்கள் தொழுது எழ*  அலை கடல் கடைந்தவன் தன்னை* 
    அமர் பொழில் வளங் குருகூர்ச்*  சடகோபன் குற்றேவல்கள்*

    அமர் சுவை ஆயிரத்து*  அவற்றினுள் இவை பத்தும் வல்லார்* 
    அமரரோடு உயர்வில் சென்று*  அறுவர் தம் பிறவி அம் சிறையே. (2)