பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    தெள்ளியீர்! தேவர்க்கும்*  தேவர் திருத்தக்கீர்!* 
    வெள்ளியீர் வெய்ய*  விழுநிதி வண்ணர்*  ஓ!

    துள்ளுநீர்க்*  கண்ணபுரம் தொழுதாள் இவள்- 
    கள்வியோ,*  கைவளை கொள்வது தக்கதே?  (2)


    நீள்நிலா முற்றத்து*  நின்றுஇவள் நோக்கினாள்,* 
    காணுமோ!*  கண்ணபுரம் என்று காட்டினாள்,*

    பாணனார் திண்ணம் இருக்க*  இனிஇவள்- 
    நாணுமோ,?*  நன்று நன்று நறையூரர்க்கே. 


    அருவிசோர் வேங்கடம்*  நீர்மலை என்றுவாய்- 
    வெருவினாள்*  மெய்யம் வினவி இருக்கின்றாள்,*

    பெருகுசீர்க்*  கண்ணபுரம் என்று பேசினாள்- 
    உருகினாள்*  உள்மெலிந்தாள் இது என்கொலோ!  (2)


    உண்ணும் நாள்இல்லை*  உறக்கமும் தான்இல்லை,* 
    பெண்மையும் சால*  நிறைந்திலள் பேதைதான்,*

    கண்ணன்ஊர் கண்ணபுரம்*  தொழும் கார்க்கடல்- 
    வண்ணர்மேல்,*  எண்ணம் இவட்கு இது என்கொலோ!


    கண்ணன்ஊர்*  கண்ணபுரம் தொழும் காரிகை,* 
    பெண்மைஎன் தன்னுடை*  உண்மை உரைக்கின்றாள்,*

    வெண்ணெய்உண்டு ஆப்புண்ட*  வண்ணம் விளம்பினால்,* 
    வண்ணமும்*  பொன்நிறம் ஆவது ஒழியுமே. 


    வடவரை நின்றும் வந்து*  இன்று கணபுரம்,- 
    இடவகை கொள்வது*  யாம்என்று பேசினாள்,*

    மடவரல் மாதர் என் பேதை*  இவர்க்குஇவள்- 
    கடவதுஎன்,?*  கண்துயில் இன்று இவர் கொள்ளவே.


    தரங்கநீர் பேசினும்*  தண்மதி காயினும்,* 
    இரங்குமோ?*  எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*

    துரங்கம் வாய் கீண்டு உகந்தான்*  அது தொன்மை*  ஊர்- 
    அரங்கமே என்பது*  இவள் தனக்கு ஆசையே.    


    தொண்டுஎல்லாம் நின்அடியே*  தொழுது உய்யுமா- 
    கண்டு,*  தான் கண்ணபுரம்*  தொழப் போயினாள்*

    வண்டுஉலாம் கோதை என் பேதை*  மணிநிறம்- 
    கொண்டுதான்,*  கோயின்மை செய்வது தக்கதே?


    முள்எயிறு ஏய்ந்தில,*  கூழை முடிகொடா,* 
    தெள்ளியள் என்பதுஓர்*  தேசுஇலள் என்செய்கேன்,*

    கள்அவிழ் சோலைக்*  கணபுரம் கைதொழும்- 
    பிள்ளையைப்,*  பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? 


    கார்மலி*  கண்ணபுரத்து எம் அடிகளைப்,* 
    பார்மலி மங்கையர் கோன்*  பரகாலன் சொல்,*

    சீர்மலி பாடல்*  இவைபத்தும் வல்லவர்,* 
    நீர்மலி வையத்து*  நீடு நிற்பார்களே    (2)


    நங்கள் வரிவளையாய் அங்காளோ*   நம்முடை ஏதலர் முன்பு நாணி* 
    நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்*   நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*

    சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்*   தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்* 
    வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்*  வேங்கடவாணனை வேண்டிச்சென்றே.   (2)


    வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பாரில்*   என்னுடைத்தோழியர் நுங்கட்கேலும்* 
    ஈண்டுஇதுஉரைக்கும்படியை அந்தோ*  காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்*

    காண்தகுதாமரைக் கண்ணன் கள்வன்*  விண்ணவர்கோன் நங்கள்கோனைக் கண்டால்* 
    ஈண்டியசங்கும் நிறைவும்கொள்வான்*  எத்தனைகாலம் இளைக்கின்றேனே!


    காலம் இளைக்கில் அல்லால் வினையேன்  நான் இளைக்கின்றிலன்*  கண்டு கொள்மின்* 
    ஞாலம் அறியப் பழிசுமந்தேன்*  நல்நுதலீர்! இனி நாணித்தான்என்*

    நீலமலர் நெடும்சோதிசூழ்ந்த*   நீண்டமுகில்வண்ணன் கண்ணன் கொண்ட* 
    கோலவளையொடும் மாமைகொள்வான்*  எத்தனைகாலமும் கூடச்சென்றே? 


    கூடச்சென்றேன் இனி என்கொடுக்கேன்?*  கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்* 
    பாடுஅற்றுஒழிய இழந்துவைகல்*   பல்வளையார்முன் பரிசுஅழிந்தேன்*

    மாடக்கொடிமதிள் தென்குளந்தை*   வண்குடபால் நின்ற மாயக்கூத்தன்* 
    ஆடல்பறவை உயர்த்தவெல்போர்*  ஆழிவலவனை ஆதரித்தே.


    ஆழிவலவனை ஆதரிப்பும்*  ஆங்குஅவன் நம்மில் வரவும் எல்லாம்* 
    தோழியர்காள்! நம்உடையமேதான்?*  சொல்லுவதோ இங்கு அரியதுதான்*

    ஊழிதோறுஊழி ஒருவனாக*   நன்குஉணர்வார்க்கும் உணரலாகாச்* 
    சூழல்உடைய சுடர்கொள்ஆதித்*  தொல்லைஅம்சோதி நினைக்குங்காலே.  


    தொல்லையஞ்சோதி நினைக்குங்கால்*  என்  சொல்அளவன்று இமையோர் தமக்கும்* 
    எல்லைஇலாதன கூழ்ப்புச்செய்யும்*  அத்திறம் நிற்க எம்மாமைகொண்டான்*

    அல்லிமலர்த் தண்துழாயும் தாரான்*  ஆர்க்கு இடுகோ இனிப்பூசல்? சொல்லீர்* 
    வல்லிவளவயல்சூழ் குடந்தை*  மாமலர்க்கண் வளர்கின்றமாலே.


    மாலரிகேசவன் நாரணன்*  சீமாதவன்  கோவிந்தன் வைகுந்தன்' என்றுஎன்று* 
    ஓலம்இட என்னைப் பண்ணிவிட்டிட்டு*   ஒன்றும் உருவும் சுவடும்காட்டான்*

    ஏலமலர்  குழல் அன்னைமீர்காள்!*  என்னுடைத் தோழியர்காள்! என்செய்கேன்?* 
    காலம்பலசென்றும் காண்பதுஆணை*  உங்களோடு எங்கள் இடைஇல்லையே.


    இடைஇல்லையான் வளர்த்தகிளிகாள்*  பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
    உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும்*  ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*

    அடையும் வைகுந்தமும் பாற்கடலும்*   அஞ்சனவெற்பும் அவைநணிய* 
    கடையறப்பாசங்கள் விட்டபின்னை*  அன்றி அவன்அவை காண்கொடானே.  


    காண்கொடுப்பான்அல்லன் ஆர்க்கும் தன்னை*  கைசெய்அப்பாலதுஓர் மாயம்தன்னால்* 
    மாண்குறள் கோலவடிவுகாட்டி*  மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த*

    சேண்சுடர்த்தோள்கள் பலதழைத்த*  தேவபிராற்கு என் நிறைவினோடு* 
    நாண்கொடுத்தேன் இனி என்கொடுக்கேன்*  என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்


    என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்!*   யான் இனிச்செய்வதுஎன்? என் நெஞ்சுஎன்னை* 
    நின்இடையேன் அல்லேன்' என்றுநீங்கி*  நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*

    பல்நெடும்சூழ்சுடர் ஞாயிற்றோடு*   பால்மதி ஏந்தி ஓர்கோலநீல* 
    நல்நெடும்குன்றம் வருவதுஒப்பான்*   நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே


    பாதம் அடைவதன் பாசத்தாலே*   மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு* 
    கோதில்புகழ்க்கண்ணன் தன்அடிமேல்*   வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*

    தீதில் அந்தாதிஓர் ஆயிரத்துள்*  இவையும்ஓர் பத்து இசையொடும் வல்லார்* 
    ஆதும்ஓர் தீதுஇலர்ஆகி*  இங்கும்அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே.      (2)