பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து*  என்னை உள்ளம் கொண்ட- 
    கள்வா! என்றலும்*  என் கண்கள் நீர்கள் சோர்தருமால்*

    உள்ளே நின்று உருகி*  நெஞ்சம் உன்னை உள்ளியக்கால்* 
    நள்ளேன் உன்னை அல்லால்*  நறையூர் நின்ற நம்பீயோ!*    


    ஓடா ஆள் அரியின்*  உரு ஆய் மருவி என் தன்-
    மாடே வந்து*  அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா*

    பாடேன் தொண்டர் தம்மைக்* கவிதைப் பனுவல்கொண்டு* 
    நாடேன் உன்னை அல்லால்*  நறையூர் நின்ற நம்பீயோ!*.   


    எம்மானும் எம் அனையும்*  என்னைப் பெற்று ஒழிந்ததற்பின்* 
    அம்மானும் அம்மனையும்*  அடியேனுக்கு ஆகி நின்ற*

    நல் மான ஒண் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ!*  உன்- 
    மைம் மான வண்ணம் அல்லால்*  மகிழ்ந்து ஏத்தமாட்டேனே*        


    சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய்*  உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல் 
    உறைவாய்*  என் நெஞ்சின் உள்ளே*  உறைவாய் உறைந்ததுதான்*

    அறியாது இருந்தறியேன் அடியேன்*  அணி வண்டு கிண்டும்* 
    நறை வாரும் பொழில் சூழ்*  நறையூர் நின்ற நம்பீயோ!*


    நீண்டாயை வானவர்கள்*  நினைந்து ஏத்திக் காண்பு அரிதால்* 
    ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு*  நான் அடிமை

    பூண்டேன்*  என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்* 
    நான்தான் உனக்கு ஒழிந்தேன்*  நறையூர் நின்ற நம்பீயோ!*


    எம் தாதை தாதை அப்பால்*  எழுவர் பழ அடிமை 
    வந்தார்*  என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன்*

    அந்தோ! என் ஆர் உயிரே!*  அரசே அருள் எனக்கு* 
    நந்தாமல் தந்த எந்தாய்!*  நறையூர் நின்ற நம்பீயோ!* 


    மன் அஞ்ச ஆயிரம் தோள்*  மழுவில் துணித்த மைந்தா* 
    என் நெஞ்சத்துள் இருந்து*  இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர்* 

    வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன்*  வளைத்து வைத்தேன்* 
    நல் நெஞ்ச அன்னம் மன்னும்*  நறையூர் நின்ற நம்பீயோ!* 


    எப்போதும் பொன் மலர் இட்டு*  இமையோர் தொழுது*  தங்கள்- 
    கைப்போது கொண்டு இறைஞ்சி*  கழல்மேல் வணங்க நின்றாய்*

    இப்போது என் நெஞ்சின் உள்ளே*  புகுந்தாயைப் போகல் ஒட்டேன்- 
    நல் போது வண்டு கிண்டும்*  நறையூர் நின்ற நம்பீயோ!*           


    ஊன் நேர் ஆக்கைதன்னை*  உழந்து ஓம்பி வைத்தமையால்* 
    யான் ஆய் என்தனக்கு ஆய்*  அடியேன் மனம் புகுந்த

    தேனே!*  தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை தன்னால்* 
    நானே எய்தப் பெற்றேன்*  நறையூர் நின்ற நம்பீயோ!*     


    நல் நீர் வயல் புடை சூழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
    கல் நீர மால் வரைத் தோள்*  கலிகன்றி மங்கையர்கோன்*

    சொல் நீர சொல்மாலை*  சொல்லுவார்கள் சூழ் விசும்பில்- 
    நல் நீர்மையால் மகிழ்ந்து*  நெடுங் காலம் வாழ்வாரே.  (2)


    என் செய்கேன் அடியேன்? உரையீர் இதற்கு என்றும்- என் மனத்தே இருக்கும் புகழ்த்* 
    தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம்*  அன்று இடந்தவனை தழலே புரை*

    மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட*  சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்* 
    பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி*  என் மனம் போற்றி என்னாதே*


    கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்*  கண்ண நீர் கைகளால் இறைக்கும்,* 
    சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்*  தாமரைக் கண் என்றே தளரும்,* 

    எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்*  இரு நிலம் கை துழா இருக்கும்,* 
    செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!*  இவள் திறத்து என் செய்கின்றாயே?  (2)   


    என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா!   என்னும்*  கண்ணீர்மல்க இருக்கும்,* 
    என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?  என்னும்*  வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*

    முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்*  முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,* 
    முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!*  என்கொலோமுடிகின்றது இவட்கே?


    வட்குஇலள் இறையும் மணிவண்ணா! என்னும்*  வானமே நோக்கும் மையாக்கும்,* 
    உட்குஉடை அசுரர் உயிர்எல்லாம் உண்ட*  ஒருவனே! என்னும் உள்உருகும்,*

    கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்*  காகுத்தா! கண்ணனே! என்னும்,* 
    திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் செய்திட்டாயே?


    இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்*  எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,* 
    கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்*  கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*   

    வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,* 
    சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் சிந்தித்தாயே? 


    சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*  திருவரங் கத்துள்ளாய்! என்னும் 
    வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க*  வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*

    அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!*  அலை கடல் கடைந்த ஆர்அமுதே,* 
    சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த*  தையலை மையல் செய்தானே!


    மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே!  என்னும்*  மா மாயனே! என்னும்,* 
    செய்யவாய் மணியே! என்னும்*  தண் புனல்சூழ்  திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*

    வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்*  விண்ணோர் முதல்! என்னும்,* 
    பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்*   பாவியேன் செயற்பாலதுவே. 


    பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!*  பற்றிலார் பற்றநின்றானே,* 
    காலசக்கரத்தாய்! கடல்இடம் கொண்ட*  கடல்வண்ணா! கண்ணனே! என்னும்,*

    சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்!  என்னும்*  என்தீர்த்தனே என்னும்,* 
    கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்*  என்னுடைக் கோமளக் கொழுந்தே


    கொழுந்து வானவர்கட்கு என்னும்*  குன்றுஏந்தி கோநிரை காத்தவன்! என்னும்,* 
    அழும்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்*  அஞ்சன வண்ணனே! என்னும்,*

    எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*  எங்ஙனே நோக்குகேன்? என்னும்,* 
    செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!*  என்செய்கேன் என்திருமகட்கே?


    என் திருமகள் சேர்மார்வனே! என்னும்*  என்னுடை ஆவியே! என்னும்,* 
    நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட*  நிலமகள் கேள்வனே! என்னும்,*

    அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட*  ஆய்மகள் அன்பனே! என்னும்,* 
    தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!*  தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.  (2)


    முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்*  மூவுலகுஆளியே! என்னும்,* 
    கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்*  நான்முகக் கடவுளே! என்னும்,*

    வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்*  வண் திருவரங்கனே! என்னும்,* 
    அடிஅடையாதாள் போல்இவள் அணுகி  அடைந்தனள்*  முகில்வண்ணன் அடியே 


    முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி  உய்ந்தவன்*  மொய்புனல் பொருநல்,* 
    துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்*  வண்பொழில்சூழ்  வண்குருகூர்ச் சடகோபன்,*

    முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை*  ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,* 
    முகில்வண்ண வானத்து இமையவர் சூழ  இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே   (2)