பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    நெய்க்குடத்தைப்பற்றி*  ஏறும்எறும்புகள்போல் நிரந்து*  எங்கும்- 
    கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!*  காலம்பெற உய்யப்போமின்*

    மெய்க்கொண்டு வந்துபுகுந்து*  வேதப்பிரானார் கிடந்தார்* 
    பைக்கொண்ட பாம்புஅணையோடும்*  பண்டுஅன்று பட்டினம்காப்பே.  (2)


    சித்திரகுத்தன் எழுத்தால்*  தென்புலக்கோன் பொறிஒற்றி* 
    வைத்த இலச்சினை மாற்றித்*  தூதுவர் ஓடிஒளித்தார்*

    முத்துத் திரைக்கடற்சேர்ப்பன்*  மூதறிவாளர் முதல்வன்* 
    பத்தர்க்கு அமுதன்அடியேன்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே.


    வயிற்றில் தொழுவைப்பிரித்து*   வன்புலச் சேவைஅதக்கிக்* 
    கயிற்றும் அக்குஆணி கழித்துக்*   காலிடைப் பாசம்கழற்றி*

    எயிற்றிடை மண்கொண்ட எந்தை*   இராப்பகல் ஓதுவித்து*  என்னைப்- 
    பயிற்றிப் பணிசெய்யக்கொண்டான்*   பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    மங்கிய வல்வினை நோய்காள்!*  உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்* 
    இங்குப் புகேன்மின் புகேன்மின்*  எளிது அன்று கண்டீர் புகேன்மின்*

    சிங்கப் பிரான் அவன் எம்மான்*  சேரும் திருக்கோயில் கண்டீர்* 
    பங்கப்படாது உய்யப் போமின்*  பண்டு அன்று பட்டினம் காப்பே.


    மாணிக் குறளுருவாய்*  மாயனை என்மனத்துள்ளே* 
    பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்*  பிறிதுஇன்றி*

    மாணிக்கப் பண்டாரம்கண்டீர்*  வலிவன்குறும்பர்கள்உள்ளீர்!* 
    பாணிக்க வேண்டாநடமின்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    உற்றஉறு  பிணிநோய்காள்!*  உமக்கு ஒன்றுசொல்லுகேன் கேண்மின்* 
    பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்*  பேணும் திருக்கோயில்கண்டீர்*

    அற்றம்உரைக்கின்றேன்*  இன்னம் ஆழ்வினைகாள்!*  உமக்குஇங்குஓர்-
    பற்றில்லை கண்டீர்நடமின்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 


    கொங்கைச் சிறுவரைஎன்னும்*  பொதும்பினில் வீழ்ந்துவழுக்கி* 
    அங்குஓர் முழையினில்புக்கிட்டு*  அழுந்திக் கிடந்துஉழல்வேனை*

    வங்கக் கடல்வண்ணன் அம்மான்*  வல்வினைஆயின மாற்றி* 
    பங்கப்படாவண்ணம் செய்தான்*  பண்டுஅன்றுபட்டினம்காப்பே.


    ஏதங்கள் ஆயினஎல்லாம்*  இறங்கல்இடுவித்து*  என்னுள்ளே- 
    பீதகவாடைப்பிரனார்*  பிரமகுருவாகிவந்து*

    போதில்கமல வன்நெஞ்சம்*  புகுந்து என்சென்னித்திடரில்* 
    பாத இலச்சினை வைத்தார்*  பண்டன்றுபட்டினம்காப்பே. 


    உறகல் உறகல் உறகல்*  ஒண்சுடராழியே! சங்கே!* 
    அறவெறி நாந்தகவாளே!*  அழகியசார்ங்கமே! தண்டே!*

    இறவுபடாமல்இருந்த*  எண்மர் உலோகபாலீர்காள்!* 
    பறவைஅரையா! உறகல்*  பள்ளியறைக்குறிக் கொண்மின் (2)


    அரவத்து அமளியினோடும்*  அழகிய பாற்கடலோடும்* 
    அரவிந்தப் பாவையும்தானும்*  அகம்படி வந்துபுகுந்து*

    பரவைத் திரைபலமோதப்*  பள்ளி கொள்கின்றபிரானைப்* 
    பரவுகின்றான் விட்டுசித்தன்*  பட்டினம்காவற்பொருட்டே. (2) 


    தாம்*  தம் பெருமை அறியார்*  
    தூது வேந்தர்க்கு ஆய*  வேந்தர் ஊர்போல்*

    காந்தள் விரல்*  மென் கலை நல் மடவார்*
    கூந்தல் கமழும்*  கூடலூரே.


    செறும் திண்*  திமில் ஏறு உடைய*  பின்னை 
    பெறும் தண் கோலம்*  பெற்றார் ஊர்போல்*

    நறும் தண் தீம்*  தேன் உண்ட வண்டு* 
    குறிஞ்சி பாடும்*  கூடலூரே.


    பிள்ளை உருவாய்த்*  தயிர் உண்டு*  அடியேன்
    உள்ளம் புகுந்த*  ஒருவர் ஊர்போல்*

    கள்ள நாரை*  வயலுள்*  கயல்மீன்
    கொள்ளை கொள்ளும்*  கூடலூரே.


    கூற்று ஏர் உருவின்*  குறள் ஆய்*  நிலம் நீர்
    ஏற்றான் எந்தை*  பெருமான் ஊர்போல்*

    சேற்று ஏர் உழவர்*  கோதைப் போது ஊண்*
    கோல் தேன் முரலும்*  கூடலூரே.


    தொண்டர் பரவ*  சுடர் சென்று அணவ* 
    அண்டத்து அமரும்*  அடிகள் ஊர்போல்*

    வண்டல் அலையுள்*  கெண்டை மிளிர* 
    கொண்டல் அதிரும்*  கூடலூரே. 


    தக்கன் வேள்வி*  தகர்த்த தலைவன்*
    துக்கம் துடைத்த*  துணைவர் ஊர்போல்*

    எக்கல் இடு*  நுண் மணல்மேல்*  எங்கும்
    கொக்கின் பழம் வீழ்*  கூடலூரே.


    கருந் தண் கடலும்*  மலையும் உலகும்*
    அருந்தும் அடிகள்*  அமரும் ஊர்போல*

    பெருந் தண் முல்லைப்*  பிள்ளை ஓடிக்*
    குருந்தம் தழுவும்*  கூடலூரே.


    கலை வாழ்*  பிணையோடு அணையும்*  திருநீர் 
    மலை வாழ் எந்தை*  மருவும் ஊர்போல்*

    இலை தாழ் தெங்கின்*  மேல்நின்று*  இளநீர்க்
    குலை தாழ் கிடங்கின்*  கூடலூரே.


    பெருகு காதல் அடியேன்*  உள்ளம்- 
    உருகப் புகுந்த*  ஒருவர் ஊர் போல்* 

    அருகு கைதை மலர*  கெண்டை 
    குருகு என்று அஞ்சும்* கூடலூரே.    


    காவிப் பெருநீர் வண்ணன்*  கண்ணன்
    மேவித் திகழும்*  கூடலூர்மேல்*

    கோவைத் தமிழால்*  கலியன் சொன்ன* 
    பாவைப் பாட*  பாவம் போமே.


    பொலிக பொலிக பொலிக!*  போயிற்று வல் உயிர்ச் சாபம்* 
    நலியும் நரகமும் நைந்த*  நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை*

    கலியும் கெடும் கண்டுகொண்மின்*  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
    மலியப் புகுந்து இசைபாடி*  ஆடி உழிதரக் கண்டோம்*. (2) 


    கண்டோம் கண்டோம் கண்டோம்*  கண்ணுக்கு இனியன கண்டோம்* 
    தொண்டீர்! எல்லீரும் வாரீர்*  தொழுது தொழுது நின்று ஆர்த்தும்*

    வண்டுஆர் தண் அம் துழாயான்*  மாதவன் பூதங்கள் மண்மேல்* 
    பண் தான் பாடி நின்று ஆடி*   பரந்து திரிகின்றனவே*


    திரியும் கலியுகம் நீங்கி*  தேவர்கள் தாமும் புகுந்து* 
    பெரிய கிதயுகம் பற்றி*  பேரின்ப வெள்ளம் பெருக* 

    கரிய முகில்வண்ணன் எம்மான்*  கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்* 
    இரியப் புகுந்து இசை பாடி*  எங்கும் இடம் கொண்டனவே*


    இடம் கொள் சமயத்தை எல்லாம்*  எடுத்துக் களைவன போலே* 
    தடம் கடல் பள்ளிப் பெருமான்*  தன்னுடைப் பூதங்களே ஆய்* 

    கிடந்தும் இருந்தும் எழுந்தும்*  கீதம் பலபல பாடி* 
    நடந்தும் பறந்தும் குனித்தும்*  நாடகம் செய்கின்றனவே*.  


    செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே*  ஒக்கின்றது இவ் உலகத்து* 
    வைகுந்தன் பூதங்களே ஆய்*  மாயத்தினால் எங்கும் மன்னி*

    ஐயம் ஒன்று இல்லை அரக்கர்*  அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்* 
    உய்யும் வகை இல்லை தொண்டீர்!*  ஊழி பெயர்த்திடும் கொன்றே*


    கொன்று உயிர் உண்ணும் விசாதி*  பகை பசி தீயன எல்லாம்* 
    நின்று இவ் உலகில் கடிவான்*  நேமிப் பிரான் தமர் போந்தார்* 

    நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும்*  ஞாலம் பரந்தார்* 
    சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்!*  சிந்தையைச் செந்நிறுத்தியே*.


    நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும்*  தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்* 
    மறுத்தும் அவனோடே கண்டீர்*  மார்க்கண்டேயனும் கரியே* 

    கறுத்த மனம் ஒன்றும் வேண்டா*  கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை* 
    இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி*  யாயவர்க்கே இறுமினே*.    


    இறுக்கும் இறை இறுத்து உண்ண*  எவ் உலகுக்கும் தன் மூர்த்தி* 
    நிறுத்தினான் தெய்வங்கள் ஆக*  அத் தெய்வ நாயகன் தானே* 

    மறுத் திரு மார்வன் அவன் தன்*  பூதங்கள் கீதங்கள் பாடி* 
    வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்*  மேவித் தொழுது உய்ம்மின் நீரே*.


    மேவித் தொழுது உய்ம்மின்நீர்கள்*  வேதப் புனித இருக்கை* 
    நாவில் கொண்டு அச்சுதன் தன்னை*  ஞானவிதி பிழையாமே* 

    பூவில் புகையும் விளக்கும்*  சாந்தமும் நீரும் மலிந்து* 
    மேவித் தொழும் அடியாரும்*  பகவரும் மிக்கது உலகே*.     


    மிக்க உலகுகள் தோறும்*  மேவி கண்ணன் திருமூர்த்தி* 
    நக்க பிரானோடு*  அயனும் இந்திரனும் முதலாகத்* 

    தொக்க அமரர் குழாங்கள்*  எங்கும் பரந்தன தொண்டீர்!* 
    ஒக்கத் தொழ கிற்றிராகில்*  கலியுகம் ஒன்றும் இல்லையே*.      


    கலியுகம் ஒன்றும் இன்றிக்கே*  தன்அடியார்க்கு அருள்செய்யும்* 
    மலியும் சுடர் ஒளி மூர்த்தி*  மாயப் பிரான் கண்ணன் தன்னை*

    கலிவயல் தென் நன் குருகூர்க்*  காரிமாறன் சடகோபன்* 
    ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து*  உள்ளத்தை மாசு அறுக்குமே*.