பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    அலம்பாவெருட்டாக்*  கொன்றுதிரியும் அரக்கரை* 
    குலம்பாழ்படுத்துக்*  குலவிளக்காய் நின்றகோன்மலை*

    சிலம்பார்க்கவந்து*  தெய்வமகளிர்களாடும்சீர்* 
    சிலம்பாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே.  (2)


    வல்லாளன்தோளும்*  வாளரக்கன்முடியும்*  தங்கை- 
    பொல்லாதமூக்கும்*  போக்குவித்தான்பொருந்தும்மலை*

    எல்லாஇடத்திலும்*  எங்கும்பரந்து பல்லாண்டுஒலி- 
    செல்லாநிற்கும் சீர்த்*  தென்திருமாலிருஞ்சோலையே.


    தக்கார்மிக்கார்களைச்*  சஞ்சலம்செய்யும்சலவரை*
    தெக்காநெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை*

    எக்காலமும்சென்று*  சேவித்திருக்கும் அடியரை* 
    அக்கான்நெறியைமாற்றும்*  தண் மாலிருஞ்சோலையே.


    ஆனாயர்கூடி*  அமைத்தவிழவை*  அமரர்தம்- 
    கோனார்க்கொழியக்*  கோவர்த்தனத்துச்செய்தான்மலை*

    வான்நாட்டினின்று*  மாமலர்க்கற்பகத்தொத்துஇழி* 
    தேனாறுபாயும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 


    ஒருவாரணம் பணிகொண்டவன்*  பொய்கையில் கஞ்சன்தன்- 
    ஒருவாரணம் உயிர்உண்டவன்*  சென்றுறையும்மலை*

    கருவாரணம்*  தன்பிடிதுறந்துஓடக்*  கடல்வண்ணன்- 
    திருவாணைகூறத்திரியும்*  தண் மாலிருஞ்சோலையே. 


    ஏவிற்றுச்செய்வான்*  ஏன்றுஎதிர்ந்துவந்தமல்லரைச்* 
    சாவத்தகர்த்த*  சாந்த‌ணிதோள்சதுரன்மலை*

    ஆவத்தனமென்று*  அமரர்களும்நன்முனிவரும்* 
    சேவித்திருக்கும்*  தென்திருமாலிருஞ்சோலையே.


    மன்னர்மறுக*  மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்* 
    முன்னங்குநின்று*  மோழைஎழுவித்தவன் மலை* 

    கொன்னவில்கூர்வேற்கோன்*  நெடுமாறன்தென்கூடற்கோன்* 
    தென்னன்கொண்டாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே


    குறுகாதமன்னரைக்*  கூடுகலக்கி*  வெங்கானிடைச்-
    சிறுகால்நெறியே போக்குவிக்கும்*  செல்வன்பொன்மலை* 

    அறுகால்வரிவண்டுகள்*  ஆயிரநாமம்சொல்லிச்* 
    சிறுகாலைப்பாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே. 


    சிந்தப்புடைத்துச்*  செங்குருதிகொண்டு*  பூதங்கள்- 
    அந்திப்பலிகொடுத்து*  ஆவத்தனம்செய் அப்பன்மலை* 


    இந்திரகோபங்கள்*  எம்பெருமான் கனிவாய்ஒப்பான்* 
    சிந்தும்புறவிற்*  தென்திருமாலிருஞ்சோலையே    



    எட்டுத் திசையும்*  எண்- இறந்த பெருந் தேவிமார்*  
    விட்டு விளங்க*  வீற்றிருந்த விமலன் மலை*  

    பட்டிப்பிடிகள்*  பகடுறிஞ்சிச் சென்று*  மாலைவாய்த்- 
    தெட்டித்திளைக்கும்*  தென்திருமாலிருஞ் சோலையே.



    மருதப்பொழில‌ணி*  மாலிருஞ்சோலைமலைதன்னைக்* 
    கருதி உறைகின்ற*  கார்க்கடல்வண்ணன் அம்மான்தன்னை* 

    விரதம்கொண்டேத்தும்*  வில்லிபுத்தூர் விட்டுசித்தன்சொல்* 
    கருதியுரைப்பவர்*  கண்ணன்கழலிணை காண்பர்களே (2)


    கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்*  கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
    அரசு அவன் தம்பிக்கு*  அளித்தவன் உறைகோயில்*

    செம்பலாநிரை செண்பகம்மாதவி*  சூதகம் வாழைகள்சூழ்* 
    வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர*  வண்புருடோத்தமமே.       


    பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி*  அக்காளியன் பண அரங்கில்* 
    ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த*  உம்பர்கோன் உறைகோயில்*

    நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறுஅங்கம்* 
    வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.


    அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று*  அமைத்த சோறு அது எல்லாம் உண்டு* 
    கோநிரை மேய்த்து அவை காத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்*

    கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்*  குல மயில் நடம் ஆட* 
    வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     


    பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து*  அதன் பாகனைச் சாடிப் புக்கு*  
    ஒருங்க மல்லரைக் கொன்று*  பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*

    கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு*  கழனியில் மலி வாவி* 
    மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     


    சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து*  ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட* 
    வாணனை ஆயிரம் தோள்களும்*  துணித்தவன் உறை கோயில்*

    ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்*  பகலவன் ஒளி மறைக்கும்* 
    மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    


    அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று*  அயன் அலர் கொடு தொழுது ஏத்த* 
    கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய*   கண்ணன் வந்து உறை கோயில்* 

    கொங்கை கோங்குஅவை காட்ட*  வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்* 
    மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.  


    உளைய ஒண் திறல் பொன்பெயரோன்*  தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும்*
    வெம் சினத்து அரி பரி கீறிய*  அப்பன் வந்து உறை கோயில்*

    இளைய மங்கையர் இணைஅடிச் சிலம்பினோடு*  எழில் கொள் பந்து அடிப்போர்*
    கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.       


    வாளை ஆர் தடங் கண் உமைபங்கன்*  வன்சாபம் மற்றுஅதுநீங்க* 
    மூளைஆர்சிரத்து ஐயம் முன்அளித்த*  எம்முகில் வண்ணன் உறைகோயில்*

    பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்*  வண்பழம் விழ வெருவிப் போய்* 
    வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    


    இந்து வார் சடை ஈசனைப் பயந்த*  நான் முகனைத் தன் எழில் ஆரும்* 
    உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்* 

    குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து*  தன் குருளையைத் தழுவிப் போய்* 
    மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.


    மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்*  வண்புருடோத்தமத்துள்* 
    அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்*  ஆலி மன் அருள் மாரி* 

    பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்*  இப்பத்தும் வல்லார் உலகில்* 
    எண் இலாத பேர் இன்பம் உற்று*  இமையவரோடும் கூடுவரே. (2)   


    பாலன் ஆய்*  ஏழ் உலகு உண்டு பரிவு இன்றி,* 
    ஆல் இலை*  அன்னவசம் செய்யும் அண்ணலார்,* 

    தாள் இணைமேல் அணி*  தண் அம் துழாய் என்றே 
    மாலுமால்,*  வல்வினையேன்*  மட வல்லியே. (2)  


    வல்லி சேர் நுண் இடை*  ஆய்ச்சியர் தம்மொடும்,* 
    கொல்லைமை செய்து*  குரவை பிணைந்தவர்,* 

    நல் அடிமேல் அணி*  நாறு துழாய் என்றே 
    சொல்லுமால்,*  சூழ் வினையாட்டியேன் பாவையே.   


    பா இயல் வேத*  நல் மாலை பல கொண்டு,* 
    தேவர்கள் மா முனிவர்*  இறைஞ்ச நின்ற* 

    சேவடிமேல் அணி*  செம் பொன் துழாய் என்றே 
    கூவுமால்,*  கோள் வினையாட்டியேன் கோதையே.   


    கோது இல வண்புகழ்*  கொண்டு சமயிகள்,* 
    பேதங்கள் சொல்லிப்*  பிதற்றும் பிரான்பரன்,*

    பாதங்கள் மேல் அணி*  பைம் பொன் துழாய் என்றே 
    ஓதுமால்,*  ஊழ்வினையேன்*  தடந் தோளியே.     


    தோளி சேர் பின்னை பொருட்டு*  எருது ஏழ் தழீஇக் 
    கோளியார்*  கோவலனார்*  குடக் கூத்தனார்,* 

    தாள் இணைமேல் அணி*  தண் அம் துழாய் என்றே 
    நாளும்நாள்,*  நைகின்றதால்*  என்தன் மாதரே       


    மாதர் மா மண்மடந்தைபொருட்டு*  ஏனம் ஆய்,* 
    ஆதி அம் காலத்து*  அகல் இடம் கீண்டவர்,* 

    பாதங்கள்மேல் அணி*  பைம் பொன் துழாய் என்றே 
    ஓதுமால்,*  எய்தினள் என் தன் மடந்தையே.    


    மடந்தையை*  வண் கமலத் திருமாதினை,* 
    தடம் கொள் தார் மார்பினில்*  வைத்தவர் தாளின்மேல்,* 

    வடம் கொள் பூம் தண் அம் துழாய்மலர்க்கே*  இவள் 
    மடங்குமால்*  வாள் நுதலீர்!! என் மடக்கொம்பே. 


    கொம்பு போல் சீதைபொருட்டு*  இலங்கை நகர்* 
    அம்பு எரி உய்த்தவர்*  தாள் இணைமேல் அணி,*

    வம்பு அவிழ் தண் அம் துழாய்*  மலர்க்கே இவள்- 
    நம்புமால்,*  நான் இதற்கு என்செய்கேன்* நங்கைமீர்!


    நங்கைமீர்! நீரும்*  ஓர் பெண் பெற்று நல்கினீர்,* 
    எங்ஙனே சொல்லுகேன்*  யான் பெற்ற ஏழையை,* 

    சங்கு என்னும் சக்கரம் என்னும்*  துழாய் என்னும்,* 
    இங்ஙனே சொல்லும்*  இராப் பகல் என்செய்கேன்?   


    என் செய்கேன்? என்னுடைப் பேதை*  என் கோமளம்,* 
    என் சொல்லும்*  என் வசமும் அல்லள் நங்கைமீர்,*

    மின் செய் பூண் மார்பினன்*  கண்ணன் கழல் துழாய்,* 
    பொன் செய்பூண்*  மென்முலைக்கு என்று மெலியுமே


    மெலியும் நோய் தீர்க்கும்*  நம் கண்ணன் கழல்கள்மேல்,* 
    மலி புகழ் வண் குருகூர்ச்*  சடகோபன் சொல்,*

    ஒலி புகழ் ஆயிரத்து*  இப்பத்தும் வல்லவர்* 
    மலி புகழ் வானவர்க்கு ஆவர்*  நல் கோவையே. (2)