பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    அஞ்சன வண்ணனை*  ஆயர் கோலக் கொழுந்தினை* 
    மஞ்சனம் ஆட்டி*  மனைகள்தோறும் திரியாமே*

    கஞ்சனைக் காய்ந்த*  கழல் அடி நோவக் கன்றின்பின்* 
    என்செயப் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!* (2)


    பற்றுமஞ்சள் பூசிப்*  பாவைமாரொடு பாடியிற்* 
    சிற்றில் சிதைத்து எங்கும்*  தீமை செய்து திரியாமே*

    கற்றுத் தூளியுடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்* 
    எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!*


    நன்மணி மேகலை*  நங்கைமாரொடு நாள்தொறும்* 
    பொன்மணி மேனி*  புழுதியாடித் திரியாமே*

    கல்மணி நின்று அதிர்*  கான்- அதரிடைக் கன்றின்பின்* 
    என் மணிவண்ணனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    வண்ணக் கருங்குழல்*  மாதர் வந்து அலர் தூற்றிடப்* 
    பண்ணிப் பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

    கண்ணுக்கு இனியானைக்*  கான் -அதரிடைக் கன்றின்பின்* 
    எண்ணற்கு அரியானைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    அவ்வவ் இடம் புக்கு*  அவ் ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க்* 
    கொவ்வைக் கனிவாய் கொடுத்துக்*  கூழைமை செய்யாமே*

    எவ்வும் சிலை உடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்* 
    தெய்வத் தலைவனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    மிடறு மெழுமெழுத்து ஓட*  வெண்ணெய் விழுங்கிப் போய்ப்* 
    படிறு பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

    கடிறு பல திரி*  கான் -அதரிடைக் கன்றின் பின்* 
    இடற என்பிள்ளையைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    வள்ளி நுடங்கு-இடை*  மாதர் வந்து அலர் தூற்றிடத்* 
    துள்ளி விளையாடித்*  தோழரோடு திரியாமே*

    கள்ளி உணங்கு*  வெங்கான் -அதரிடைக் கன்றின் பின்* 
    புள்ளின் தலைவனைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    பன்னிரு திங்கள்*  வயிற்றிற் கொண்ட அப் பாங்கினால்* 
    என் இளங் கொங்கை*  அமுதம் ஊட்டி எடுத்து யான்*

    பொன்னடி நோவப்*  புலரியே கானிற் கன்றின் பின்* 
    என் இளஞ் சிங்கத்தைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*


    குடையும் செருப்பும் கொடாதே*  தாமோதரனை நான்* 
    உடையும் கடியன ஊன்று*  வெம் பரற்கள் உடைக்*

    கடிய வெங் கானிடைக்*  கால்- அடி நோவக் கன்றின் பின்* 
    கொடியென் என்பிள்ளையைப் போக்கினேன்*  :எல்லே பாவமே!*


    என்றும் எனக்கு இனியானை*  என் மணிவண்ணனைக்* 
    கன்றின் பின் போக்கினேன் என்று*  அசோதை கழறிய*

    பொன் திகழ் மாடப்*  புதுவையர்கோன் பட்டன் சொல்* 
    இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு*  இடர் இல்லையே* (2)


    ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*  உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து* 
    தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*  தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்* 

    கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*  கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்* 
    தேன் ஆட மாடக் கொடி ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2) 


    காயோடு நீடு கனி உண்டு வீசு*  கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*
    ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*  திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

    வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*  மறையாளர் நாளும் முறையால் வளர்த்த* 
    தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.  


    வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*  விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த* 
    வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*  அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*

    பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*  படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த* 
    செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த*   தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*  அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த* 
    பெருமான் திருநாமம் பிதற்றி*  நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்* 

    கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*  கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்* 
    திருமால் திருமங்கையொடு ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. 


    கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய*  குல மன்னர் அங்கம் மழுவில் துணிய* 
    தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*  தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்* 

    பூமங்கை தங்கி புலமங்கை மன்னி*  புகழ்மங்கை எங்கும் திகழ*
    புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    நெய் வாய் அழல் அம்பு துரந்து*  முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*
    இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி*  நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*

    அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்*  அரு மா மறை அந்தணர் சிந்தை புக* 
    செவ் வாய்க் கிளி நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*  மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த* 
    தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*  திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

    கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*  கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்* 
    தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    மா வாயின் அங்கம் மதியாது கீறி*  மழை மா முது குன்று எடுத்து*
    ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*  குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*

    மூவாயிரம் நான்மறையாளர்*  நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்* 
    தேவாதிதேவன் திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்*  சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்* 
    அரு நீல பாவம் அகல புகழ் சேர்*  அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*

    பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து*  எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள* 
    திரு நீலம் நின்று திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.


    சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு* 
    ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*  அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*

    கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*  குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்* 
    பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*  பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)


    முந்நீர் ஞாலம் படைத்த*  எம் முகில் வண்ணனே,* 
    அந் நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,*

    வெம் நாள் நோய் வீய*  வினைகளை வேர் அறப் பாய்ந்து,* 
    எந் நாள் யான் உன்னை*  இனி வந்து கூடுவனே? (2)


    வன் மா வையம் அளந்த*  எம் வாமனா,*  நின் 
    பல்மா மாயப்*  பல் பிறவியில் படிகின்ற யான்,*

    தொல் மா வல்வினைத்*  தொடர்களை முதல் அரிந்து,* 
    நின் மா தாள் சேர்ந்து*  நிற்பது எஞ்ஞான்றுகொலோ?


    கொல்லா மாக்கோல்*  கொலைசெய்து பாரதப் போர்,* 
    எல்லாச் சேனையும்*  இரு நிலத்து அவித்த எந்தாய்,*

    பொல்லா ஆக்கையின்*  புணர்வினை அறுக்கல் அறா,* 
    சொல்லாய் யான் உன்னைச்*  சார்வது ஓர் சூழ்ச்சியே.    


    சூழ்ச்சி ஞானச்*  சுடர் ஒளி ஆகி,*  என்றும் 
    ஏழ்ச்சி கேடு இன்றி*  எங்கணும் நிறைந்த எந்தாய்,*

    தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து*  நின் தாள் இணைக்கீழ் 
    வாழ்ச்சி,*  யான் சேரும்*  வகை அருளாய் வந்தே.  


    வந்தாய் போலே*  வந்தும் என் மனத்தினை நீ,* 
    சிந்தாமல் செய்யாய்*  இதுவே இது ஆகில்,* 

    கொந்து ஆர் காயாவின்*  கொழு மலர்த் திருநிறத்த 
    எந்தாய்,*  யான் உன்னை*  எங்கு வந்து அணுகிற்பனே?   


    கிற்பன் கில்லேன்*  என்று இலன் முனம் நாளால்,* 
    அற்ப சாரங்கள்*  அவை சுவைத்து அகன்றொழிந்தேன்,*

    பற்பல் ஆயிரம்*  உயிர் செய்த பரமா,*  நின் 
    நற் பொன் சோதித்தாள்*  நணுகுவது எஞ்ஞான்றே?


    எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து*  இரங்கி நெஞ்சே!* 
    மெய்ஞ்ஞானம் இன்றி*  வினை இயல் பிறப்பு அழுந்தி,*

    எஞ்ஞான்றும் எங்கும்*  ஒழிவு அற நிறைந்து நின்ற,* 
    மெய்ஞ் ஞானச் சோதிக்*  கண்ணனை மேவுதுமே?


    மேவு துன்ப வினைகளை*  விடுத்துமிலேன்,*
    ஓவுதல் இன்றி*  உன் கழல் வணங்கிற்றிலேன்,*

    பாவு தொல் சீர்க் கண்ணா!*  என் பரஞ்சுடரே,* 
    கூவுகின்றேன் காண்பான்*  எங்கு எய்தக் கூவுவனே?


    கூவிக் கூவிக்*  கொடுவினைத் தூற்றுள் நின்று*
    பாவியேன் பல காலம்*  வழி திகைத்து அலமர்கின்றேன்,*

    மேவி அன்று ஆ நிரை காத்தவன்*  உலகம் எல்லாம்,* 
    தாவிய அம்மானை*  எங்கு இனித் தலைப்பெய்வனே?  


    தலைப்பெய் காலம்*  நமன்தமர் பாசம் விட்டால்,* 
    அலைப்பூண் உண்ணும்*  அவ் அல்லல் எல்லாம் அகல,*

    கலைப் பல் ஞானத்து*  என் கண்ணனைக் கண்டுகொண்டு,* 
    நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது*  நீடு உயிரே  


    உயிர்கள் எல்லா*  உலகமும் உடையவனைக்,* 
    குயில் கொள் சோலைத்*  தென் குருகூர்ச் சடகோபன்,*

    செயிர் இல் சொல் இசை மாலை*  ஆயிரத்துள் இப் பத்தும்,* 
    உயிரின்மேல் ஆக்கை*  ஊனிடை ஒழிவிக்குமே. (2)