பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    இரக்கம்இன்றி எம்கோன் செய்த தீமை*   இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர்* 
    பரக்கயாம் இன்று உரைத்துஎன் இராவணன்  பட்டனன்*  இனி யாவர்க்கு உரைக்கோம்*

    குரக்கு நாயகர்காள்! இளங்கோவே*   கோல வல்வில் இராம பிரானே* 
    அரக்கர் ஆடுஅழைப்பார் இல்லை*  நாங்கள்  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.  (2)


    பத்து நீள்முடியும் அவற்றுஇரட்டிப்*   பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,*
    சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்*   செய்வது ஒன்றுஅறியா அடியோங்கள்*

    ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும்*   ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்* 
    அத்த! எம் பெருமான்! எம்மைக் கொல்லேல்*   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    தண்ட காரணியம் புகுந்து*  அன்று  தையலை தகவிலி எம்கோமான்*
    கொண்டு போந்து கெட்டான்*  எமக்கு இங்குஓர்  குற்றம்இல்லை கொல்லேல் குலவேந்தே*

    பெண்டிரால் கெடும் இக்குடி தன்னைப்*  பேசுகின்றதுஎன்? தாசரதீ,*  உன்-
    அண்ட வாணர் உகப்பதே செய்தாய்*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    எஞ்சல்இல் இலங்கைக்குஇறை*  எம்கோன்தன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே*
    நஞ்சுதான் அரக்கர் குடிக்குஎன்று*  நங்கையை அவன் தம்பியே சொன்னான்*

    விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்*  வேரிவார் பொழில் மாமயில்அன்ன*
    அஞ்சுஅல்ஓதியைக் கொண்டு நடமின்*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 


    செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன்*  சீதை என்பதுஓர் தெய்வம் கொணர்ந்து* 
    வம்புஉலாம் கடி காவில் சிறையா வைத்ததே*  குற்றம் ஆயிற்றுக் காணீர்*

    கும்பனோடு நிகும்பனும் பட்டான்*  கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி* 
    அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ.


    ஓத மாகடலைக் கடந்துஏறி*  உயர்கொள் மாக்கடிகாவை இறுத்து* 
    காதல் மக்களும் சுற்றமும் கொன்று*  கடி இலங்கை மலங்க எரித்து*     

    தூது வந்த குரங்குக்கே*  உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே* 
    ஆதர் நின்று படுகின்றது அந்தோ!*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    தாழம்இன்றி முந்நீரை அஞ்ஞான்று*  தகைந்ததே கண்டு வஞ்சிநுண் மருங்குல்*
    மாழை மான்மட நோக்கியை விட்டு*  வாழகில்லா மதிஇல் மனத்தானை*    

    ஏழையை இலங்கைக்கு இறை தன்னை*  எங்களை ஒழியக் கொலை அவனை* 
    சூழு மாநினை மாமணி வண்ணா!*  சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 


    மனம்கொண்டுஏறும் மண்டோதரி முதலா*  அம்கயல் கண்ணினார்கள் இருப்ப* 
    தனம்கொள் மென்முலை நோக்கம் ஒழிந்து*  தஞ்சமே சில தாபதர்என்று*

    புனம்கொள் மென்மயிலைச் சிறை வைத்த*  புன்மையாளன் நெஞ்சில் புக எய்த* 
    அனங்கன் அன்னதிண்தோள் எம்இராமற்கு*  அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ   


    புரங்கள் மூன்றும்ஓர் மாத்திரைப் போதில்*  பொங்குஎரிக்கு இரை கண்டவன் அம்பின்*
    சரங்களே கொடிதுஆய் அடுகின்ற*  சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம்*

    இரங்கு நீ எமக்குஎந்தை பிரானே!*  இலங்கு வெம்கதிரோன்தன் சிறுவா* 
    குரங்குகட்குஅரசே! எம்மைக் கொல்லேல்!*  கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ


    அங்கு அவ்வானவர்க்கு ஆகுலம் தீர*  அணி இலங்கை அழித்தவன் தன்னை* 
    பொங்கு மாவலவன் கலி கன்றி*  புகன்ற பொங்கத்தம் கொண்டு,*  இவ்உலகினில்-

    எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர்!*  இம்மையே இடர் இல்லை,*  இறந்தால்- 
    தங்கும்ஊர் அண்டமே கண்டு கொள்மின்*  சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ!   (2)


    கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 
    கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*

    விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 
    தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே     (2)


    இன்றுபோய்ப் புகுதிராகில்*  எழுமையும் ஏதம்சாரா* 
    குன்றுநேர் மாடம்மாடே*  குருந்துசேர் செருந்திபுன்னை*

    மன்றலர் பொழில்*  அனந்தபுரநகர் மாயன்நாமம்*
    ஒன்றும்ஓர் ஆயிரமாம்*  உள்ளுவார்க்கு உம்பர்ஊரே


    ஊரும்புள் கொடியும் அஃதே*  உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தான்* 
    சேரும் தண்அனந்தபுரம்*  சிக்கெனப் புகுதிராகில்*

    தீரும்நோய் வினைகள்எல்லாம்*  திண்ணம்நாம் அறியச்சொன்னோம்* 
    பேரும் ஓர்ஆயிரத்துள்*  ஒன்றுநீர் பேசுமினே   


    பேசுமின் கூசம்இன்றி*  பெரியநீர் வேலைசூழ்ந்து* 
    வாசமே கமழும் சோலை*  வயலணிஅனந்தபுரம்*

    நேசம்செய்து உறைகின்றானை*  நெறிமையால் மலர்கள்தூவி* 
    பூசனை செய்கின்றார்கள்*  புண்ணியம் செய்தவாறே.   


    புண்ணியம் செய்து*  நல்ல புனலொடு மலர்கள்தூவி* 
    எண்ணுமின் எந்தைநாமம்*  இப்பிறப்புஅறுக்கும் அப்பால்*

    திண்ணம்நாம் அறியச்சொன்னோம்*  செறிபொழில் அனந்தபுரத்து* 
    அண்ணலார் கமலபாதம்*  அணுகுவார் அமரர்ஆவார் 


    அமரராய்த் திரிகின்றார்கட்கு*  ஆதிசேர் அனந்தபுரத்து* 
    அமரர்கோன் அர்ச்சிக்கின்று*  அங்குஅகப்பணி செய்வர் விண்ணோர்*

    நமர்களோ! சொல்லக்கேள்மின்*  நாமும்போய் நணுகவேண்டும்* 
    குமரனார் தாதை*  துன்பம் துடைத்த கோவிந்தனாரே


    துடைத்த கோவிந்தனாரே*  உலகுஉயிர் தேவும்மற்றும்* 
    படைத்த எம்பரமமூர்த்தி*  பாம்பணைப் பள்ளிகொண்டான்*

    மடைத்தலை வாளைபாயும்*  வயல்அணிஅனந்தபுரம்* 
    கடைத்தலை சீய்க்கப்பெற்றால்*  கடுவினை களையலாமே  


    கடுவினை களையலாகும்*  காமனைப் பயந்தகாளை* 
    இடவகை கொண்டதுஎன்பர்*  எழில்அணிஅனந்தபுரம்*

    படம்உடைஅரவில் பள்ளி*  பயின்றவன் பாதம்காண* 
    நடமினோ நமர்கள்உள்ளீர்!*  நாம் உமக்குஅறியச் சொன்னோம்.


    நாம் உமக்கு அறியச்சொன்ன*  நாள்களும் நணியஆன* 
    சேமம் நன்குஉடைத்துக்கண்டீர்*  செறிபொழில்அனந்தபுரம்*

    தூமநல் விரைமலர்கள்*  துவள்அற ஆய்ந்துகொண்டு* 
    வாமனன் அடிக்குஎன்று ஏத்த*  மாய்ந்துஅறும் வினைகள்தாமே.  


    மாய்ந்துஅறும் வினைகள்தாமே*  மாதவா என்ன நாளும்- 
    ஏய்ந்தபொன் மதிள்*  அனந்தபுர நகர்எந்தைக்குஎன்று*

    சாந்தொடு விளக்கம்தூபம்*  தாமரை மலர்கள்நல்ல* 
    ஆய்ந்துகொண்டு ஏத்தவல்லார்*  அந்தம்இல் புகழினாரே. 


    அந்தம்இல் புகழ்*  அனந்தபுர நகர் ஆதிதன்னைக்* 
    கொந்துஅலர் பொழில்*  குருகூர் மாறன் சொல்ஆயிரத்துள்*

    ஐந்தினோடு ஐந்தும்வல்லார்*  அணைவர்போய் அமர்உலகில்* 
    பைந்தொடி மடந்தையர்தம்*  வேய்மரு தோள்இணையே.   (2)