பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட*  வரி சிலை வளைவித்து*
    அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற*  இருந்த நல் இமயத்துள்* 

    ஆலி மா முகில் அதிர்தர அரு வரை*  அகடு உற முகடு ஏறி* 
    பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)


    கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய*  அரு வரை அணை கட்டி* 
    இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம்*  இருந்த நல் இமயத்து* 

    விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன*  வேழங்கள் துயர்கூர* 
    பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று*  இளங்கொடிதிறத்து ஆயர்* 
    இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்*  இருந்த நல் இமயத்து 

    கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்*  மணி அறைமிசை வேழம்* 
    பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 


    மறம் கொள் ஆள்அரி உரு என வெருவர*  ஒருவனது அகல் மார்வம் திறந்து* 
    வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்துள்* 

    இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்*  கிடந்து அருகு எரி வீசும்* 
    பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    கரை செய் மாக் கடல் கிடந்தவன்*  கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த* 
    அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும்*  அமர்ந்த நல் இமயத்து* 

    வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை*  அளை மிகு தேன் தோய்த்துப்* 
    பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள்*  பரமா என்று* 
    இணங்கி வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்து* 

    மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற*  நிமிர்ந்து அவை முகில் பற்றிப்* 
    பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!


    கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய*  கறி வளர் கொடி துன்னிப்* 
    போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய*  பூம் பொழில் இமயத்துள்* 

    ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து*  இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்* 
    பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!      


    இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை*  இரும் பசி அது கூர* 
    அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய*  அருவரை இமயத்து*

    பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று*  எண்ணி நின்று இமையோர்கள்* 
    பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!  


    ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு*  உறு துயர் அடையாமல்* 
    ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை*  இருந்த நல் இமயத்து*

    தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற*  தழல் புரை எழில் நோக்கி* 
    பேதை வண்டுகள் எரி என வெருவரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 


    கரிய மா முகில் படலங்கள் கிடந்து*  அவை முழங்கிட*
    களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு*  பிரிதி எம் பெருமானை* 

    வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்*  கலியனது ஒலி மாலை* 
    அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு*  அரு வினை அடையாவே*  (2)


    வீடுமின் முற்றவும்* வீடு செய்து*  உம் உயிர்

    வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)  


    மின்னின் நிலை இல* மன் உயிர் ஆக்கைகள்* 

    என்னும் இடத்து*  இறை உன்னுமின் நீரே.


    நீர் நுமது என்று இவை* வேர்முதல் மாய்த்து*  இறை

    சேர்மின் உயிர்க்கு*  அதன் நேர் நிறை இல்லே.


    இல்லதும் உள்ளதும்* அல்லது அவன் உரு*

    எல்லை இல் அந் நலம்* புல்கு பற்று அற்றே.


    அற்றது பற்று எனில்* உற்றது வீடு உயிர்*

    செற்ற அது மன் உறில்* அற்று இறை பற்றே.


    பற்று இலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*

    பற்று இலையாய்* அவன் முற்றில் அடங்கே.


    அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு*  ஈசன்

    அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.


    உள்ளம் உரை செயல்* உள்ள இம் மூன்றையும்*

    உள்ளிக் கெடுத்து*  இறை உள்ளில் ஒடுங்கே.


    ஒடுங்க அவன்கண்*  ஒடுங்கலும் எல்லாம்*

    விடும் பின்னும் ஆக்கை*  விடும்பொழுது எண்ணே.


    எண் பெருக்கு அந் நலத்து*  ஒண் பொருள் ஈறு இல*

    வண் புகழ் நாரணன்*  திண் கழல் சேரே.


    சேர்த்தடத்*  தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*

    சீர்த் தொடை ஆயிரத்து*  ஓர்த்த இப்பத்தே. (2)