பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    வண்டுஆர்பூ மாமலர் மங்கை*  மணநோக்கம் 
    உண்டானே*  உன்னை உகந்துஉகந்து*  உன்தனக்கே

    தொண்டுஆனேற்கு*  என்செய்கின்றாய் சொல்லு நால்வேதம்
    கண்டானே*  கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)


    பெருநீரும் விண்ணும்*  மலையும் உலகுஏழும்* 
    ஒருதாரா நின்னுள் ஒடுக்கிய*  நின்னை அல்லால்*

    வருதேவர் மற்றுஉளர் என்று*  என்மனத்து இறையும்-
    கருதேன்நான்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    மற்றும் ஓர்தெய்வம் உளதுஎன்று*  இருப்பாரோடு-
    உற்றிலேன்*  உற்றதும்*  உன்அடியார்க்கு அடிமை*

    மற்றுஎல்லாம் பேசிலும்*  நின்திரு எட்டுஎழுத்தும்-
    கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே!  (2)


    பெண்ஆனாள்*  பேர்இளங் கொங்கையின்ஆர் அழல்போல்,*
    உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை*  உகந்தேன்நான்*

    மண்ஆளா! வாள்நெடுங் கண்ணி*  மதுமலராள்-
    கண்ணாளா*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    பெற்றாரும் சுற்றமும்*  என்று இவை பேணேன்நான்* 
    மற்றுஆரும் பற்றுஇலேன்*  ஆதலால் நின்அடைந்தேன்*

    உற்றான்என்று உள்ளத்து வைத்து*  அருள் செய்கண்டாய்,*
    கற்றார்சேர்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    ஏத்திஉன் சேவடி*  எண்ணி இருப்பாரைப்*
    பார்த்திருந்து அங்கு*  நமன்தமர் பற்றாது*

    சோத்தம் நாம் அஞ்சுதும் என்று*  தொடாமைநீ,-
    காத்திபோல்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    வெள்ளைநீர் வெள்ளத்து*  அணைந்த அரவுஅணைமேல்*
    துள்ளுநீர் மெள்ளத்*  துயின்ற பெருமானே* 

    வள்ளலே! உன்தமர்க்கு என்றும்*  நமன்தமர்-
    கள்ளர்போல்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    மாண்ஆகி*  வையம் அளந்ததுவும், வாள் அவுணன்*
    பூண்ஆகம் கீண்டதுவும்*  ஈண்டு நினைந்துஇருந்தேன்*

    பேணாத வல்வினையேன்*  இடர் எத்தனையும்-
    காணேன்நான்*  கண்ணபுரத்து உறை அம்மானே!        


    நாட்டினாய் என்னை*  உனக்குமுன் தொண்டுஆக* 
    மாட்டினேன் அத்தனையே கொண்டு*  என் வல்வினையை*

    பாட்டினால் உன்னை*  என் நெஞ்சத்து இருந்தமை-
    காட்டினாய்*  கண்ணபுரத்து உறை அம்மானே!


    கண்டசீர்க்*  கண்ணபுரத்து உறை அம்மானை* 
    கொண்டசீர்த் தொண்டன்*  கலியன் ஒலிமாலை*

    பண்டமாய்ப் பாடும்*  அடியவர்க்கு எஞ்ஞான்றும்*
    அண்டம்போய் ஆட்சி*  அவர்க்கு அது அறிந்தோமே.   (2)


    நெடுமாற்குஅடிமை செய்வேன்போல்*   அவனைக் கருத வஞ்சித்து* 
    தடுமாற்றுஅற்ற தீக்கதிகள்*  முற்றும்  தவிர்ந்த சதிர்நினைந்தால்*

    கொடுமாவினையேன் அவன்அடியார்  அடியே*  கூடும் இதுஅல்லால்* 
    விடுமாறுஎன்பதுஎன்? அந்தோ!*  வியன் மூவுலகு பெறினுமே?.  (2)


    வியன் மூவுலகு பெறினும்போய்*  தானே தானே ஆனாலும்* 
    புயல் மேகம்போல் திருமேனிஅம்மான்*  புனைபூம் கழல்அடிக்கீழ்ச்*

    சயமே அடிமை தலைநின்றார்*  திருத்தாள் வணங்கி*  இம்மையே 
    பயனே இன்பம் யான்பெற்றது*  உறுமோ பாவியேனுக்கே? 


    உறுமோ பாவியேனுக்கு*  இவ்உலகம் மூன்றும் உடன்நிறைய* 
    சிறுமாமேனி நிமிர்த்த*  என்செந்தாமரைக்கண் திருக்குறளன்*

    நறுமாவிரைநாள் மலர்அடிக்கீழ்ப்*   புகுதல் அன்றி அவன்அடியார்* 
    சிறுமா மனிசராய் என்னைஆண்டார்*  இங்கே திரியவே. 


    இங்கே திரிந்தேற்கு இழுக்குஉற்றுஎன்!*  இருமாநிலம் முன்உண்டுஉமிழ்ந்த* 
    செங்கோலத்த பவளவாய்ச்*  செந்தாமரைக்கண் என்அம்மான்*

    பொங்குஏழ் புகழ்கள் வாயவாய்*  புலன்கொள் வடிவு என்மனத்ததாய்* 
    அங்குஏய் மலர்கள் கையவாய்*  வழிபட்டுஓட அருளிலே?  


    வழிபட்டுஓட அருள்பெற்று*  மாயன் கோல மலர்அடிக்கீழ்ச்* 
    சுழிபட்டுஓடும் சுடர்ச்சோதி  வெள்ளத்து*  இன்புற்றுஇருந்தாலும்*

    இழிபட்டுஓடும் உடலினில்பிறந்து*  தன்சீர் யான்கற்று* 
    மொழிபட்டுஓடும் கவிஅமுதம்*  நுகர்ச்சி உறுமோ முழுதுமே?  


    நுகர்ச்சி உறுமோ மூவுலகின்*  வீடு பேறு தன்கேழ்இல்* 
    புகர்ச்செம்முகத்த களிறுஅட்ட*  பொன்ஆழிக்கை என்அம்மான்*

    நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள்*  நீண்ட அசுரர் உயிர்எல்லாம்* 
    தகர்த்துஉண்டுஉழலும் புள்பாகன்*  பெரிய தனிமாப் புகழே?  


    தனிமாப் புகழே எஞ்ஞான்றும்*   நிற்கும் படியாத் தான்தோன்றி* 
    முனிமாப் பிரம முதல்வித்தாய்*  உலகம் மூன்றும் முளைப்பித்த*

    தனிமாத் தெய்வத் தளிர்அடிக்கீழ்ப்*  புகுதல் அன்றி அவன்அடியார்* 
    நனிமாக் கலவி இன்பமே*  நாளும் வாய்க்க நங்கட்கே


    நாளும் வாய்க்க நங்கட்கு*  நளிர்நீர்க் கடலைப் படைத்து*  தன் 
    தாளும் தோளும் முடிகளும்*  சமன் இலாத பலபரப்பி*

    நீளும் படர்பூங் கற்பகக்காவும்*  நிறைபல்நாயிற்றின்* 
    கோளும்உடைய மணிமலைபோல்*  கிடந்தான் தமர்கள் கூட்டமே.   


    தமர்கள் கூட்ட வல்வினையை*   நாசம் செய்யும் சதுமூர்த்தி* 
    அமர்கொள் ஆழி சங்குவாள்*  வில்தண்டுஆதி பல்படையன்*

    குமரன் கோல ஐங்கணைவேள்தாதை*  கோதுஇல் அடியார்தம்* 
    தமர்கள் தமர்கள் தமர்களாம்*  சதிரே வாய்க்க தமியேற்கே 


    வாய்க்க தமியேற்கு*  ஊழிதோறுஊழி ஊழி மாகாயாம்- 
    பூக்கொள் மேனி நான்குதோள்*  பொன்ஆழிக்கை என்அம்மான்*

    நீக்கம்இல்லா அடியார்தம்*  அடியார் அடியார் அடியார் எம் 
    கோக்கள்*  அவர்க்கே குடிகளாய்ச்  செல்லும்*  நல்ல கோட்பாடே  


    நல்ல கோட்பாட்டு உலகங்கள்*  மூன்றினுள்ளும் தான்நிறைந்த* 
    அல்லிக் கமலக் கண்ணனை*  அம்தண் குருகூர்ச் சடகோபன்*

    சொல்லப் பட்ட ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்* 
    நல்ல பதத்தால் மனைவாழ்வர்*  கொண்ட பெண்டீர் மக்களே.  (2)