பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    பெரும் புறக்கடலை அடல்ஏற்றினை*  பெண்ணை ஆணை எண்இல் முனிவர்க்குஅருள்- 
    தரும்தவத்தை முத்தின் திரள் கோவையை*  பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை*

    அரும்பினை அலரை அடியேன் மனத்துஆசையை*  அமுதம் பொதிஇன் சுவைக்* 
    கரும்பினை கனியை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*   


    மெய்ந்நலத் தவத்தை திவத்தைத் தரும்*  மெய்யை பொய்யினை கையில் ஓர்' சங்குஉடை* 
    மைந்நிறக்கடலை கடல் வண்ணனை*  மாலை- ஆல்இலைப் பள்ளி கொள் மாயனை*

    நென்னலை பகலை இற்றை நாளினை*  நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை* 
    கன்னலை கரும்பினிடைத் தேறலை*  கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே*  


    எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை*  வாசவார் குழலாள் மலைமங்கை தன்- 
    பங்கனைப்*  பங்கில் வைத்து உகந்தான் தன்னை*  பான்மையை பனி மா மதியம் தவழ்* 

    மங்குலை சுடரை வடமாமலை-  உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்- 
    கங்குலை*  பகலை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*  


    பேய்முலைத்தலை நஞ்சுஉண்ட பிள்ளையை*  தெள்ளியார் வணங்கப்படும் தேவனை* 
    மாயனை மதிள் கோவல்இடைகழி*  மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்*

    ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை*  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை* 
    காசினை மணியை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை*  இம்மையை மறுமைக்கு மருந்தினை,* 
    ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்  ஐயனை*  கையில்ஆழி ஒன்றுஏந்திய   

    கூற்றினை*  குரு மாமணிக் குன்றினை  நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை* 
    காற்றினை புனலை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*   


    துப்பனை துரங்கம் படச்சீறிய தோன்றலை*  சுடர் வான் கலன் பெய்தது ஓர் 
    செப்பினை*  திருமங்கை மணாளனை*  தேவனை திகழும் பவளத்துஒளி 

    ஒப்பனை*  உலகுஏழினை ஊழியை*  ஆழிஏந்திய கையனை அந்தணர் 
    கற்பினை*  கழுநீர் மலரும் வயல்*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    திருத்தனை திசை நான்முகன் தந்தையை*  தேவ தேவனை மூவரில் முன்னிய 
    விருத்தனை*  விளங்கும் சுடர்ச் சோதியை*  விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய

    அருத்தனை*  அரியை பரிகீறிய  அப்பனை*  அப்பில்ஆர் அழல்ஆய் நின்ற 
    கருத்தனை* களி வண்டுஅறையும் பொழில்*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    வெம்சினக் களிற்றை விளங்காய் விழக்*  கன்று வீசிய ஈசனை*  பேய்மகள்- 
    துஞ்ச நஞ்சு சுவைத்துஉண்ட தோன்றலை*  தோன்றல் வாள்அரக்கன் கெடத் தோன்றிய-

    நஞ்சினை*  அமுதத்தினை நாதனை*   நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை* 
    கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*


    பண்ணினை பண்ணில் நின்றதுஓர் பான்மையை*  பாலுள் நெய்யினை மால்உருஆய் நின்ற- 
    விண்ணினை*  விளங்கும் சுடர்ச் சோதியை*  வேள்வியை விளக்கின்ஒளி தன்னை*

    மண்ணினை மலையை அலை நீரினை*  மாலை மாமதியை மறையோர் தங்கள்- 
    கண்ணினை*  கண்கள் ஆரளவும் நின்று*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*  


    கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*  காதலால் கலி கன்றி உரைசெய்த* 
    வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றுஇவை*  வல்லர்ஆய் உரைப்பார் மதியம் தவழ்*

    விண்ணில் விண்ணவர்ஆய் மகிழ்வு எய்துவர்*  மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றுஏந்திய -
    கண்ண!*  நின் தனக்கும் குறிப்புஆகில்-  கற்கலாம்*  கவியின் பொருள் தானே*   (2)


    இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்*  தானும் இவ் ஏழ் உலகை,* 
    இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து*  ஆள்கின்ற எங்கள் பிரான்,* 

    அன்புற்று அமர்ந்து உறைகின்ற*  அணி பொழில் சூழ் திருவாறன்விளை,* 
    அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து*  கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)      


    ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி*  அகல் இடம் முற்றவும் ஈர் அடியே* 
    ஆகும்பரிசு நிமிர்ந்த*  திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்* 

    மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,* 
    மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து*  கைதொழக் கூடும்கொலோ!       


    கூடும் கொல் வைகலும்*  கோவிந்தனை மதுசூதனை கோளரியை,* 
    ஆடும் பறவைமிசைக் கண்டு*  கைதொழுது அன்றி அவன் உறையும்,*

    பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி*  ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,* 
    நீடு பொழில் திருவாறன்விளை தொழ*  வாய்க்கும்கொல் நிச்சலுமே!     


    வாய்க்கும்கொல் நிச்சலும்*  எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற* 
    வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்*  வயல் சூழ் திருவாறன்விளை,*

    வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்*  வடமதுரைப் பிறந்த,* 
    வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்*  மலர் அடிப்போதுகளே.    


    மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்*  இருத்தி வணங்க,* 
    பலர் அடியார் முன்பு அருளிய*  பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்,* 

    மலரின் மணி நெடு மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,* 
    உலகம் மலி புகழ் பாட*  நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.


    ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்*  தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*
    அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை*  அணி நெடும் தோள் புணர்ந்தான்,* 

    என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப*  உள்ளே இருக்கின்ற பிரான்,* 
    நின்ற அணி திருவாறன்விளை என்னும்*  நீள் நகரம் அதுவே.


    நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்*  திருவாறன்விளை,* 
    நீள் நகரத்து உறைகின்ற பிரான்*  நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்* 

    வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய*  வெம் போர்கள் செய்து.,* 
    வாணனை ஆயிரம் தோள் துணித்தான்*  சரண் அன்றி மற்று ஒன்று இலமே. 


    அன்றி மற்று ஒன்று இலம் நின்சரணே! என்று*  அகல் இரும் பொய்கையின்வாய்,* 
    நின்று தன் நீள் கழல் ஏத்திய*  ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்,* 

    சென்று அங்கு இனிது உறைகின்ற*  செழும் பொழில் சூழ் திருவாறன்விளை,* 
    ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?*  தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.


    தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி*  தெளி விசும்பு ஏறலுற்றால்,* 
    நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்*  அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,* 

    யாவரும் வந்து வணங்கும் பொழில்*  திருவாறன்விளை அதனை,* 
    மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்*  என்னும் என் சிந்தனையே. 


    சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை*  தேவபிரான் அறியும்,* 
    சிந்தையினால் செய்வ தான் அறியாதன*  மாயங்கள் ஒன்றும் இல்லை,* 

    சிந்தையினால் சொல்லினால் செய்கையால்*  நிலத்தேவர் குழுவணங்கும்,* 
    சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை*  தீர்த்தனுக்கு அற்ற பின்னே.     


    தீர்த்தனுக்கு அற்றபின்*  மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி*  தீர்த்தனுக்கே 
    தீர்த்த மனத்தனன் ஆகி*  செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 

    தீர்த்தங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்களைத்,*  தேவர் வைகல் 
    தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்*  தம் தேவியர்க்கே. (2)