பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
    ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 

    எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
    அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)


    சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்*  சங்கொடு சக்கரம் ஏந்தினானே!* 
    நாமடித்து என்னை அனேக தண்டம்*  செய்வதா நிற்பர் நமன்தமர்கள்* 

    போமிடத்து உன்திறத்து எத்தனையும்*  புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை* 
    ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    எல்லையில் வாசல் குறுகச்சென்றால்*  எற்றிநமன்தமர் பற்றும்போது* 
    நில்லுமின் என்னும் உபாயமில்லை*  நேமியும் சங்கமும் ஏந்தினானே!

    சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்*  சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்* 
    அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே!


    ஒற்றைவிடையனும் நான்முகனும்*  உன்னையறியாப் பெருமையோனே!* 
    முற்றஉலகெல்லாம் நீயேயோகி* மூன்றெழுத்தாய முதல்வனேயோ!*

    அற்றதுவாழ்நாள் இவற்கென்றெண்ணி*   அஞ்சநமன்தமர் பற்றலுற்ற* 
    அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    பையரவினனைப் பாற்கடலுள்*  பள்ளிகொள்கின்ற பரமமுர்த்தி!* 
    உய்யஉலகு படைக்கவேண்டி*  உந்தியிற் தோற்றினாய் நான்முகனை* 

    வையமனிசரைப் பொய்யென்றெண்ணிக்*  காலனையும் உடனே படைத்தாய்* 
    ஐய!இனி என்னைக் காக்க வேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    தண்ணெனவில்லை நமன்தமர்கள்*  சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்* 
    மண்ணொடு நீரும் எரியும் காலும்*  மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*

    எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்* 
    அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற*  தேவர்கள்நாயகனே! எம்மானே!* 
    எஞ்சலில் என்னுடை இன்னமுதே!*  ஏழலகுமுடையாய்! என்னப்பா!*

    வஞ்சவுருவின் நமன்தமர்கள்*  வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது* 
    அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்*  நமன்தமர்பற்றி நலிந்திட்டு* 
    இந்த ஊனேபுகேயென்று மோதும்போது*  அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 

    வானேய் வானவர் தங்கள் ஈசா!*  மதுரைப் பிறந்த மாமாயனே!*  என்- 
    ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!*  கோநிரை மேய்த்தவனே! எம்மானே!* 
    அன்றுமுதல் இன்றறுதியாக*  ஆதியஞ்சோதி மறந்தறியேன்* 

    நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது* 
    அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!


    மாயவனை மதுசூதனனை*  மாதவனை மறையோர்கள் ஏத்தும்* 
    ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*

    வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்*  விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்* 
    தூய மனத்தனாகி வல்லார்*  தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)


    ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்*  ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்* 
    பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து*  பெரு நிலம் அளந்தவன் கோயில்*

    காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்*  எங்கும் ஆம் பொழில்களின் நடுவே* 
    வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்*  திருவெள்ளியங்குடி அதுவே. (2)  


    ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு*  அரக்கர் தம் சிரங்களை உருட்டி* 
    கார்நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்*  கண்ணனார் கருதிய கோயில்*

    பூநிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி*  பொதும்பிடை வரி வண்டு மிண்டி* 
    தேன்இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்*  திருவெள்ளியங்குடி அதுவே.


    கடு விடம் உடைய காளியன் தடத்தைக்*  கலக்கி முன் அலக்கழித்து* 
    அவன்தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்*

    பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்* 
    அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்*  திருவெள்ளியங்குடிஅதுவே. 


    கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த*  காளமேகத் திரு உருவன்* 
    பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற*  பரமனார் பள்ளிகொள் கோயில்*

    துறைதுறைதோறும் பொன் மணி சிதறும்*  தொகு திரை மண்ணியின் தென்பால்* 
    செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்*  திருவெள்ளியங்குடி அதுவே.           


    பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து*  பாரதம் கையெறிந்து*  ஒருகால் 
    தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த*  செங்கண்மால் சென்று உறை கோயில்*

    ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி*  எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி* 
    சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற*  திருவெள்ளியங்குடி அதுவே.    


    காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உற*  கடல் அரக்கர் தம் சேனை* 
    கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த*  கோல வில் இராமன் தன் கோயில்*

    ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்*  ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி* 
    சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்*  திருவெள்ளியங்குடி அதுவே.


    ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த*  மாவலி வேள்வியில் புக்கு* 
    தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு*  திக்கு உற வளர்ந்தவன் கோயில்*

    அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்*  அரி அரி என்று அவை அழைப்ப* 
    வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்*  திருவெள்ளியங்குடி அதுவே.  


    முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்*  அசுரர் தம் பெருமானை*  அன்று அரி ஆய் 
    மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட* மாயனார் மன்னிய கோயில்*

    படியிடை மாடத்து அடியிடைத் தூணில்*  பதித்த பல் மணிகளின் ஒளியால்* 
    விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய*  திருவெள்ளியங்குடி அதுவே.    


    குடிகுடி ஆகக் கூடி நின்று அமரர்*  குணங்களே பிதற்றி நின்று ஏத்த* 
    அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற*  ஆழியான் அமர்ந்து உறை கோயில்*

    கடிஉடைக் கமலம் அடியிடை மலர*  கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய* 
    வடிவுஉடை அன்னம் பெடையொடும் சேரும்*  வயல் வெள்ளியங்குடி அதுவே.


    பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால்*  பார் இடந்து எயிற்றினில் கொண்டு* 
    தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற*  திருவெள்ளியங்குடியானை*

    வண்டு அறை சோலை மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
    கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள்*  ஆள்வர் இக்குரை கடல் உலகே. (2)      


    ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்*  யாதும் இல்லா 
    அன்று,*  நான்முகன் தன்னொடு*  தேவர் உலகோடு உயிர் படைத்தான்,* 

    குன்றம்போல் மணிமாடம் நீடு*   திருக்குருகூர் அதனுள்,* 
    நின்ற ஆதிப்பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)


    நாடி நீர் வணங்கும் தெய்வமும்*  உம்மையும் முன்படைத்தான்,* 
    வீடு இல் சீர்ப்புகழ் ஆதிப்பிரான்*  அவன் மேவி உறைகோயில்,* 

    மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனைப்* 
    பாடி ஆடி பரவிச் செல்மின்கள்*  பல் உலகீர்! பரந்தே.       


    பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து*  அன்று உடனே விழுங்கி,* 
    கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது*  கண்டும் தெளியகில்லீர்,* 

    சிரங்களால் அமரர் வணங்கும்*  திருக்குருகூர் அதனுள்,* 
    பரன் திறம் அன்றி பல் உலகீர்!*  தெய்வம் மற்று இல்லை பேசுமினே!   


    பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்*  பிறர்க்கும் 
    நாயகன் அவனே,*  கபால நல் மோக்கத்துக்*  கண்டுகொண்மின்,* 

    தேச மாமதிள் சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஈசன்பால் ஓர் அவம் பறைதல்*  என் ஆவது இலிங்கியர்க்கே?


    இலிங்கத்து இட்ட புராணத்தீரும்*  சமணரும் சாக்கியரும்* 
    வலிந்து வாது செய்வீர்களும்*  மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்* 

    மலிந்து செந்நெல் கவரி வீசும்*  திருக்குருகூர் அதனுள்,* 
    பொலிந்து நின்ற பிரான் கண்டீர்*  ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)     


    போற்றி மற்று ஓர் தெய்வம்*  பேணப் புறத்திட்டு*  உம்மை இன்னே 
    தேற்றி வைத்தது*  எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே,* 

    சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர்*  அது அறிந்து அறிந்து ஓடுமினே.  


    ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து*  மற்று ஓர் தெய்வம், 
    பாடி ஆடிப் பணிந்து*  பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்,*

    கூடி வானவர் ஏத்த நின்ற*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு*  அடிமைபுகுவதுவே


    புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட*  மார்க்கண்டேயன் அவனை* 
    நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது*  நாராயணன் அருளே*

    கொக்கு அலர் தடம் தாழை வேலித்*  திருக்குருகூர் அதனுள்* 
    மிக்க ஆதிப்பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் விளம்புதிரே   


    விளம்பும் ஆறு சமயமும்*  அவைஆகியும் மற்றும் தன்பால்,* 
    அளந்து காண்டற்கு அரியன் ஆகிய*  ஆதிப்பிரான் அமரும்,* 

    வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனை,* 
    உளம் கொள் ஞானத்து வைம்மின்*  உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.  


    உறுவது ஆவது எத்தேவும்*  எவ் உலகங்களும் மற்றும்தன்பால்,* 
    மறு இல் மூர்த்தியோடு ஒத்து*  இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே,* 

    செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு*  திருக்குருகூர் அதனுள்* 
    குறிய மாண் உரு ஆகிய*  நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே. 


    ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்*  வண் குருகூர்நகரான்*
    நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்*  மாறன் சடகோபன்,* 

    வேட்கையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,* 
    மீட்சி இன்றி வைகுந்த மாநகர்*  மற்றது கையதுவே. (2)