பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    நெறிந்த கருங்குழல் மடவாய்!*  நின் அடியேன் விண்ணப்பம்*
    செறிந்த மணி முடிச் சனகன்*  சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது-

    அறிந்து அரசு களைகட்ட*  அருந்தவத்தோன் இடை விலங்கச்* 
    செறிந்த சிலைகொடு தவத்தைச்*  சிதைத்ததும் ஓர் அடையாளம்*  (2)


    அல்லியம்பூ மலர்க்கோதாய்!*  அடிபணிந்தேன் விண்ணப்பம்* 
    சொல்லுகேன் கேட்டருளாய்*  துணைமலர்க் கண் மடமானே!*

    எல்லியம் போது இனிதிருத்தல்*  இருந்தது ஓர் இட வகையில்* 
    மல்லிகை மா மாலைகொண்டு*  அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்*


    கலக்கிய மா மனத்தனளாய்க்*  கைகேசி வரம் வேண்ட* 
    மலக்கிய மா மனத்தனனாய்*  மன்னவனும் மறாது ஒழியக்*

    குலக்குமரா! காடு உறையப் போ என்று*  விடை கொடுப்ப* 
    இலக்குமணன் தன்னொடும்*  அங்கு ஏகியது ஓர் அடையாளம்*


    வார் அணிந்த முலை மடவாய்!*  வைதேவீ! விண்ணப்பம்* 
    தேர் அணிந்த அயோத்தியர்கோன்*  பெருந்தேவீ! கேட்டருளாய்*

    கூர் அணிந்த வேல் வலவன்*  குகனோடும் கங்கைதன்னிற்* 
    சீர் அணிந்த தோழமை*  கொண்டதும் ஓர் அடையாளம்*


    மான் அமரும் மென்நோக்கி!*  வைதேவீ! விண்ணப்பம்*
    கான் அமரும் கல்-அதர் போய்க்*  காடு உறைந்த காலத்துத்* 

    தேன் அமரும் பொழிற் சாரல்*  சித்திரகூடத்து இருப்பப்*
    பால்மொழியாய்! பரதநம்பி*  பணிந்ததும் ஓர் அடையாளம*


    சித்திரகூடத்து இருப்பச்*  சிறுகாக்கை முலை தீண்ட* 
    அத்திரமே கொண்டு எறிய*  அனைத்து உலகும் திரிந்து ஓடி*

    வித்தகனே! இராமாவோ!*  நின் அபயம் என்று அழைப்ப*
    அத்திரமே அதன்கண்ணை*  அறுத்ததும் ஓர் அடையாளம்*


    மின் ஒத்த நுண்- இடையாய்!*  மெய்- அடியேன் விண்ணப்பம்* 
    பொன் ஒத்த மான் ஒன்று*  புகுந்து இனிது விளையாட*

    நின் அன்பின் வழிநின்று*  சிலை பிடித்து எம்பிரான் ஏகப்* 
    பின்னே அங்கு இலக்குமணன்*  பிரிந்ததும் ஓர் அடையாளம்*


    மைத் தகு மா மலர்க்குழலாய்!*  வைதேவீ விண்ணப்பம்* 
    ஒத்த புகழ் வானரக்கோன்*  உடன் இருந்து நினைத் தேட* 

    அத்தகு சீர் அயோத்தியர்கோன்*  அடையாளம் இவை மொழிந்தான்* 
    இத் தகையால் அடையாளம்*  ஈது அவன் கைம் மோதிரமே*    


    திக்கு நிறை புகழாளன்*  தீ வேள்விச் சென்ற நாள்* 
    மிக்க பெரும் சபை நடுவே*  வில் இறுத்தான் மோதிரம் கண்டு*

    ஒக்குமால் அடையாளம்*  அனுமான்! என்று*  உச்சிமேல்- 
    வைத்துக்கொண்டு உகந்தனளால்*  மலர்க்குழலாள் சீதையுமே (2)


    வார் ஆரும் முலை மடவாள்*  வைதேவி தனைக் கண்டு* 
    சீர் ஆரும் திறல் அனுமன்*  தெரிந்து உரைத்த அடையாளம்* 

    பார் ஆரும் புகழ்ப் புதுவைப்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
    ஏர் ஆரும் வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே* (2)


    திருமடந்தை மண்மடந்தை, இருபாலும் திகழத்*  தீவினைகள் போய்அகல, அடியவர்கட்கு என்றும்அருள்நடந்து* 
    இவ்ஏழ்உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்துஏத்த இருந்தஇடம்*

    பெரும்புகழ் வேதியர் வாழ்தரும்இடங்கள் மலர்கள், மிகுகைதைகள் செங்கழுநீர்*  தாமரைகள் தடங்கள் தொறும், இடங்கள் தொறும் திகழ* 
    அருஇடங்கள் பொழில்தழுவி, எழில்திகழும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!  (2)


    வென்றிமிகு நரகன்உரம்அது, அழிய விசிறும்*  விறல்ஆழித் தடக்கையன், விண்ணவர்கட்கு அன்று* 
    குன்றுகொடு குரைகடலைக், கடைந்து அமுதம்அளிக்கும்*  குருமணி என்ஆர்அமுதம், குலவிஉறை கோயில்*

    என்றும்மிகு பெருஞ்செல்வத்து, எழில்விளங்கு மறையோர்*  ஏழ்இசையும் கேள்விகளும், இயன்ற பெருங்குணத்தோர்* 
    அன்றுஉலகம் படைத்தவனை, அனையவர்கள் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!


    உம்பரும் இவ்ஏழ்உலகும், ஏழ்கடலும் எல்லாம்*  உண்டபிரான் அண்டர்கள், முன்கண்டு மகிழ்வுஎய்தக்* 
    கும்பம்மிகு மதயானை, மருப்புஒசித்து*  கஞ்சன் குஞ்சிபிடித்துஅடித்த பிரான் கோயில்*

    மருங்குஎங்கும் பைம்பொனொடு, வெண்முத்தம் பலபுன்னை காட்ட*  பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் 
    அம்பு அனைய கண்மடவார், மகிழ்வுஎய்தும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே!    


    ஓடாத ஆள்அரியின், உருவம்அது கொண்டு*  அன்றுஉலப்பில் மிகுபெருவரத்த, இரணியனைப்பற்றி* 
    வாடாத வள்உகிரால் பிளந்து, அவன்தன் மகனுக்கு*  அருள்செய்தான் வாழும்இடம், மல்லிகைசெங்கழுநீர்*

    சேடுஏறு மலர்ச்செருந்தி, செழுங்கமுகம் பாளை*  செண்பகங்கள் மணம்நாறும், வண்பொழிலின்ஊடே* 
    ஆடுஏறு வயல்ஆலைப், புகைகமழும் நாங்கூர் அரிமேய விண்ணகரம்,வணங்குமடநெஞ்சே! 


    கண்டவர்தம் மனம்மகிழ, மாவலிதன் வேள்விக்*  களவுஇல்மிகு சிறுகுறள்ஆய், மூவடிஎன்று இரந்திட்டு* 
    அண்டமும் இவ்அலைகடலும், அவனிகளும்எல்லாம்*  அளந்தபிரான் அமரும்இடம், வளங்கொள்பொழில்அயலே*

    அண்டம்உறு முழவுஒலியும், வண்டுஇனங்கள்ஒலியும்*  அருமறையின்ஒலியும், மடவார் சிலம்பின் ஒலியும்* 
    அண்டம்உறும் அலைகடலின், ஒலிதிகழும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    வாள்நெடுங்கண் மலர்க்கூந்தல், மைதிலிக்கா*  இலங்கை மன்னன் முடிஒருபதும் தோள்இருபதும் போய்உதிரத்* 
    தாள்நெடுந்திண் சிலைவளைத்த, தயரதன்சேய்* என்தன் தனிச்சரண் வானவர்க்குஅரசு, கருதும்இடம் தடம்ஆர்*

    சேண்இடம்கொள் மலர்க்கமலம், சேல்கயல்கள்வாளை*  செந்நெலொடும் அடுத்துஅரிய உதிர்ந்த செழுமுத்தம்* 
    வாள்நெடுங்கண் கடைசியர்கள், வாரும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    தீமனத்தான் கஞ்சனது, வஞ்சனையில் திரியும்*  தேனுகனும் பூதனைதன், ஆர்உயிரும் செகுத்தான்* 
    காமனைத்தான் பயந்த, கருமேனிஉடைஅம்மான்*  கருதும்இடம் பொருதுபுனல், துறைதுறை முத்துஉந்தி*

    நாமனத்தால் மந்திரங்கள், நால்வேதம்*  ஐந்து வேள்வியோடு ஆறுஅங்கம், நவின்று கலை பயின்று*
    அங்குஆம்மனத்து மறையவர்கள், பயிலும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!


    கன்றுஅதனால் விளவுஎறிந்து, கனிஉதிர்த்த காளை*  காமருசீர் முகில்வண்ணன், காலிகள்முன் காப்பான்* 
    குன்றுஅதனால் மழைதடுத்து, குடம்ஆடு கூத்தன்*  குலவும்இடம், கொடிமதிள்கள் மாளிகை கோபுரங்கள்*

    துன்றுமணி மண்டபங்கள், சாலைகள்*  தூமறையோர்  தொக்குஈண்டித் தொழுதியொடு, மிகப்பயிலும் சோலை* 
    அன்றுஅலர்வாய் மதுஉண்டு, அங்கு அளிமுரலும் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!


    வஞ்சனையால் வந்தவள்தன், உயிர்உண்டு*  வாய்த்த தயிர்உண்டு வெண்ணெய்அமுதுஉண்டு*
    வலிமிக்க கஞ்சன் உயிர்அதுஉண்டு, இவ் உலகுஉண்ட காளை*  கருதும்இடம் காவிரிசந்து, அகில்கனகம்உந்தி*

    மஞ்சுஉலவு பொழிலூடும், வயலூடும் வந்து*  வளம்கொடுப்ப மாமறையோர், மாமலர்கள் தூவி* 
    அஞ்சலித்து அங்கு அரிசரண்என்று, இறைஞ்சும்அணி நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!     


    சென்று சினவிடைஏழும், படஅடர்ந்து*  பின்னை செவ்வித்தோள் புணர்ந்து, உகந்த திருமால்தன் கோயில்* 
    அன்று அயனும் அரன்சேயும், அனையவர்கள் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம், அமர்ந்த செழுங்குன்றை*

    கன்றிநெடுவேல் வலவன், மங்கையர்தம் கோமான்*  கலிகன்றி ஒலிமாலை, ஐந்தினொடு மூன்றும்* 
    ஒன்றினொடும் ஒன்றும், இவை கற்றுவல்லார்*  உலகத்து உத்தமர்கட்கு உத்தமர்ஆய் உம்பரும் ஆவர்களே. (2)    


    சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு*  சங்கொடு சக்கரம்வில்,* 
    ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்*  தண்டு கொண்டு புள் ஊர்ந்து,*  உலகில் 

    வன்மை உடைய அரக்கர்*  அசுரரை மாளப் படைபொருத,* 
    நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற*  நான் ஓர் குறைவு இலனே. (2)


    குறைவு இல் தடங்கடல் கோள் அரவு ஏறி*  தன் கோலச் செந்தாமரைக்கண்,* 
    உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த*  ஒளி மணி வண்ணன் கண்ணன்,*

    கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி*  அசுரரைக் காய்ந்த அம்மான்,* 
    நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்*  யான் ஒரு முட்டு இலனே.


    முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்*  மூவுலகுக்கு உரிய,* 
    கட்டியை தேனை அமுதை*  நன்பாலை கனியை கரும்பு தன்னை,*

    மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி*  அவன் திறத்துப் 
    பட்ட பின்னை*  இறையாகிலும்*  யான் என் மனத்துப் பரிவு இலனே. 


    ',பரிவு இன்றி வாணனைக் காத்தும்'*  என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த* 
    திரிபுரம் செற்றவனும் மகனும்*  பின்னும் அங்கியும் போர் தொலைய,*

    பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை*  ஆயனை பொன் சக்கரத்து
    அரியினை,*  அச்சுதனைப் பற்றி*  யான் இறையேனும் இடர் இலனே.


    இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்*  எல்லா உலகும் கழிய,* 
    படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்*  உடன் ஏற திண்தேர்கடவி,*

    சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்*  வைதிகன் பிள்ளைகளை,* 
    உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி*  ஒன்றும் துயர் இலனே.


    துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி*  நின்ற வண்ணம் நிற்கவே,* 
    துயரில் மலியும் மனிசர் பிறவியில்*  தோன்றி கண் காணவந்து,*

    துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்*  புக உய்க்கும் அம்மான்,* 
    துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ்துற்ற*  யான் ஓர் துன்பம் இலனே.


    துன்பமும் இன்பமும் ஆகிய*  செய்வினை ஆய் உலகங்களும் ஆய்,* 
    இன்பம் இல் வெம் நரகு ஆகி*  இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய்

    மன் பல் உயிர்களும் ஆகி*  பலபல மாய மயக்குக்களால்,* 
    இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று*  ஏதும் அல்லல் இலனே. 


    அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்*  அழகு அமர் சூழ் ஒளியன்,* 
    அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்*  ஆகியும் நிற்கும் அம்மான்,*

    எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு*  எல்லாக் கருமங்களும் செய்,* 
    எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி*  யான் ஓர் துக்கம் இலனே.


    துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி*  துழாய் அலங்கல் பெருமான்,* 
    மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து*  வேண்டும் உருவு கொண்டு,* 

    நக்க பிரானோடு அயன் முதலாக*  எல்லாரும் எவையும்,*  தன்னுள் 
    ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று*  ஒன்றும் தளர்வு இலனே.


    தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த*  தனிமுதல் ஞானம் ஒன்றாய்,* 
    அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்*  அருவு ஆகி நிற்கும்,*

    வளர் ஒளி ஈசனை மூர்த்தியை*  பூதங்கள் ஐந்தை இருசுடரை,* 
    கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள்பற்றி*  யான் என்றும் கேடு இலனே.


    கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
    பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,*  அவன் 

    நாடும் நகரமும் நன்குடன் காண*  நலனிடை ஊர்தி பண்ணி,* 
    வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்*  ஒரு நாயகமே. (2)