பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    ஆற்றில் இருந்து*  விளையாடுவோங்களைச்*
    சேற்றால் எறிந்து*  வளை துகிற் கைக்கொண்டு*

    காற்றிற் கடியனாய்*  ஓடி அகம் புக்கு* 
    மாற்றமும் தாரானால் இன்று முற்றும்* 
     வளைத் திறம் பேசானால் இன்று முற்றும் (2)


    குண்டலம் தாழ*  குழல் தாழ நாண் தாழ*
    எண் திசையோரும்*  இறைஞ்சித் தொழுது ஏத்த* 

    வண்டு அமர் பூங்குழலார்*  துகிற் கைக்கொண்டு* 
    விண் தோய் மரத்தானால் இன்று முற்றும்* 
     வேண்டவும் தாரானால் இன்று முற்றும் 


    தடம் படு தாமரைப்*  பொய்கை கலக்கி* 
    விடம் படு நாகத்தை*  வால் பற்றி ஈர்த்து* 

    படம் படு பைந்தலை*  மேல் எழப் பாய்ந்திட்டு* 
    உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்* 
     உச்சியில் நின்றானால் இன்று முற்றும்


    தேனுகன் ஆவி செகுத்துப்* 
    பனங்கனி தான் எறிந்திட்ட*  தடம் பெருந்தோளினால்* 

    வானவர் கோன் விட*  வந்த மழை தடுத்து* 
    ஆனிரை காத்தானால் இன்று முற்றும்*
    அவை உய்யக் கொண்டானால் இன்று முற்றும்


    ஆய்ச்சியர் சேரி*  அளை தயிர் பால் உண்டு*
    பேர்த்து அவர் கண்டு பிடிக்கப்*  பிடியுண்டு* 

    வேய்த் தடந்தோளினார்*  வெண்ணெய் கோள் மாட்டாது*
    அங்கு ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்* 
     அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் 


    தள்ளித் தளர் நடை யிட்டு*  இளம் பிள்ளையாய்*
    உள்ளத்தின் உள்ளே*  அவளை உற நோக்கிக* 

    கள்ளத்தினால் வந்த*  பேய்ச்சி முலை உயிர்* 
    துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்* 
     துவக்கு அற உண்டானால் இன்று முற்றும்


    மாவலி வேள்வியில்*  மாண் உருவாய்ச் சென்று*  
    மூவடி தா என்று*  இரந்த இம் மண்ணினை* 

    ஒரடி இட்டு*  இரண்டாம் அடிதன்னிலே* 
    தாவடி இட்டானால் இன்று முற்றும்* 
     தரணி அளந்தானால் இன்று முற்றும்   


    தாழை தண்-ஆம்பற்*  தடம் பெரும் பொய்கைவாய்* 
    வாழும் முதலை*  வலைப்பட்டு வாதிப்பு உண்*

    வேழம் துயர் கெட*  விண்ணோர் பெருமானாய்* 
    ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்* 
     அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும் 


    வானத்து எழுந்த*  மழை முகில் போல்*
    எங்கும் கானத்து மேய்ந்து*  களித்து விளையாடி* 

    ஏனத்து உருவாய்*  இடந்த இம் மண்ணினைத்* 
    தானத்தே வைத்தானால் இன்று முற்றும் 
     தரணி இடந்தானால் இன்று முற்றும் 


    அங் கமலக் கண்ணன்தன்னை*  அசோதைக்கு* 
    மங்கை நல்லார்கள்*  தாம் வந்து முறைப்பட்ட* 

    அங்கு அவர் சொல்லைப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
     இங்கு இவை வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே* (2) 


    மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும்*  வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்* 
    எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர்*  இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*

    துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்*  தூய நான்மறையாளர் சோமுச் செய்ய* 
    செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  (2)   


    கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்*  தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்* 
    சந்து அணி மென் முலை மலராள் தரணிமங்கை*  தாம் இருவர் அடி வருடும் தன்மையானை* 

    வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்*  ஐந்துவளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்* 
    சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும்*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.         


    கொழுந்து அலரும் மலர்ச் சோலைக்*  குழாம்கொள் பொய்கைக்*  கோள்முதலை வாள்எயிற்றுக் கொண்டற்குஎள்கி* 
    அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி*  அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை* 

    எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட*  இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட* 
    செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 


    தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து*  தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை* 
    ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்*  அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*

    கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்*  குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத்* 
    தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 


    கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி*  கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்* 
    பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம்*  பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*

    மறை வளர புகழ் வளர மாடம்தோறும்*  மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத* 
    சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  


    உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று*  அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க* 
    தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று*  தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை*

    வெறி ஆர்ந்த மலர்மகள் நாமங்கையோடு வியன்கலை எண் தோளினாள் விளங்கு*
    செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  


    இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி*  இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து* 
    வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு*  வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*

    கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று*  காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட* 
    செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.


    பார் ஏறு பெரும் பாரம் தீரப்*  பண்டு பாரதத்துத் தூது இயங்கி*
    பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை*  செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை* 

    போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்*  புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல்* 
    சீர் ஏறு மறையாளர் நிறைந்த*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே. 


    தூ வடிவின் பார்மகள் பூமங்கையோடு*  சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற* 
    காவடிவின் கற்பகமே போல நின்று*  கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை* 

    சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை*  செம் பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை
    தீ வடிவின் சிவன் அயனே போல்வார்*  மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.  


    வாரணம் கொள் இடர் கடிந்த மாலை*  நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்* 
    சீர் அணங்கு மறையாளர் நிறைந்த*  செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன், என்று* 

    வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார 
    காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த*  கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே. (2)      


    கிளர் ஒளி இளமை*  கெடுவதன் முன்னம்,* 
    வளர் ஒளி மாயோன்*  மருவிய கோயில்,*

    வளர் இளம் பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
    தளர்வு இலர் ஆகிச்*  சார்வது சதிரே.  


    சதிர் இள மடவார்*  தாழ்ச்சியை மதியாது,* 
    அதிர் குரல் சங்கத்து*  அழகர் தம் கோயில்,*

    மதி தவழ் குடுமி*  மாலிருஞ்சோலைப்,* 
    பதியது ஏத்தி*  எழுவது பயனே.    


    பயன் அல்ல செய்து*  பயன் இல்லை நெஞ்சே,* 
    புயல் மழை வண்ணர்*  புரிந்து உறை கோயில்,*

    மயல் மிகு பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
    அயல்மலை அடைவது*  அது கருமமே.


    கரும வன் பாசம்*  கழித்து உழன்று உய்யவே,* 
    பெருமலை எடுத்தான்*  பீடு உறை கோயில்,*

    வரு மழை தவழும்*  மாலிருஞ்சோலைத்,* 
    திருமலை அதுவே*  அடைவது திறமே.   


    திறம் உடை வலத்தால்*  தீவினை பெருக்காது,* 
    அறம் முயல் ஆழிப்*  படையவன் கோயில்,*

    மறு இல் வண் சுனை சூழ்*  மாலிருஞ்சோலைப்,* 
    புறமலை சாரப்*  போவது கிறியே.


    கிறி என நினைமின்*  கீழ்மை செய்யாதே,* 
    உறி அமர் வெண்ணெய்*  உண்டவன் கோயில்,*

    மறியொடு பிணை சேர்*  மாலிருஞ்சோலை,* 
    நெறி பட அதுவே*  நினைவது நலமே.


    நலம் என நினைமின்*  நரகு அழுந்தாதே,* 
    நிலம் முனம் இடந்தான்*  நீடு உறை கோயில்,*

    மலம் அறு மதி சேர்*  மாலிருஞ்சோலை,* 
    வலம் முறை எய்தி,*  மருவுதல் வலமே.


    வலஞ்செய்து வைகல்*  வலம் கழியாதே,* 
    வலஞ்செய்யும் ஆய*  மாயவன் கோயில்,*

    வலஞ்செய்யும் வானோர்*  மாலிருஞ்சோலை,,* 
    வலஞ்செய்து நாளும்*  மருவுதல் வழக்கே.


    வழக்கு என நினைமின்*  வல்வினை மூழ்காது,* 
    அழக்கொடி அட்டான்*  அமர் பெருங்கோயில்,*

    மழக் களிற்று இனம் சேர்*  மாலிருஞ்சோலை,* 
    தொழக் கருதுவதே*  துணிவது சூதே.


    சூது என்று களவும்*  சூதும் செய்யாதே,* 
    வேதம் முன் விரித்தான்*  விரும்பிய கோயில்,*

    மாது உறு மயில் சேர்*  மாலிருஞ்சோலைப்,* 
    போது அவிழ் மலையே*  புகுவது பொருளே.     


    பொருள் என்று இவ் உலகம்*  படைத்தவன் புகழ்மேல்,* 
    மருள் இல் வண் குருகூர்*  வண் சடகோபன்,*

    தெருள் கொள்ளச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்து,* 
    அருளுடையவன் தாள்*  அணைவிக்கும் முடித்தே.