பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    வட்டு நடுவே*  வளர்கின்ற*  மாணிக்க- 
    மொட்டு நுனையில்*  முளைக்கின்ற முத்தே போல்* 

    சொட்டுச் சொட்டு என்னத்*  துளிக்கத் துளிக்க*  என் 
    குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான்  கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்* (2)


    கிண்கிணி கட்டிக்*  கிறி கட்டிக் கையினிற்*
    கங்கணம் இட்டுக்*  கழுத்திற் தொடர் கட்டித்* 

    தன் கணத்தாலே*  சதிரா நடந்து வந்து*
    என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்*  எம்பிரான் என்னைப் புறம்புல்குவான் 


    கத்தக் கதித்துக்*  கிடந்த பெருஞ்செல்வம்* 
    ஒத்துப் பொருந்திக்கொண்டு*  உண்ணாது மண் ஆள்வான்*

    கொத்துத் தலைவன்*  குடிகெடத் தோன்றிய* 
    அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்*  ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்


    நாந்தகம் ஏந்திய*  நம்பி சரண் என்று*
    தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி*  தரணியில்* 

    வேந்தர்கள் உட்க*   விசயன் மணித் திண்தேர்*
    ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான்  உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்


    வெண்கலப் பத்திரம் கட்டி*  விளையாடிக்*
    கண் பல பெய்த*  கருந்தழைக் காவின் கீழ்ப்*

    பண் பல பாடிப்*  பல்லாண்டு இசைப்ப*  பண்டு- 
    மண் பல கொண்டான் புறம்புல்குவான்*  வாமனன் என்னைப் புறம்புல்குவான்


    சத்திரம் ஏந்தித்*  தனி ஒரு மாணியாய்*
    உத்தர வேதியில்*  நின்ற ஒருவனைக்* 

    கத்திரியர் காணக்*  காணி முற்றும் கொண்ட* 
    பத்திராகாரன் புறம்புல்குவான்*  பார் அளந்தான் என் புறம்புல்குவான்


    பொத்த உரலைக் கவிழ்த்து*  அதன்மேல் ஏறி* 
    தித்தித்த பாலும்*  தடாவினில் வெண்ணெயும்*

    மெத்தத் திருவயிறு*  ஆர விழுங்கிய*
    அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்*  ஆழியான் என்னைப் புறம்புல்குவான்


    மூத்தவை காண*  முது மணற்குன்று ஏறிக்* 
    கூத்து உவந்து ஆடிக்*  குழலால் இசை பாடி* 

    வாய்த்த மறையோர் வணங்க*  இமையவர்- 
    ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்*  எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்


    கற்பகக் காவு*  கருதிய காதலிக்கு*
    இப்பொழுது ஈவன் என்று*  இந்திரன் காவினில்*  

    நிற்பன செய்து*  நிலாத் திகழ் முற்றத்துள்* 
    உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்*  உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான் 


    ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான்*  புறம்புல்கிய* 
    வேய்த் தடந்தோளி சொல்*  விட்டுசித்தன் மகிழ்ந்து* 

    ஈத்த தமிழ் இவை*  ஈரைந்தும் வல்லவர்* 
    வாய்த்த நன்மக்களைப் பெற்று*  மகிழ்வரே (2)


    கண் ஆர் கடல் சூழ்*  இலங்கைக்கு இறைவன்தன்* 
    திண் ஆகம் பிளக்கச்*  சரம் செல உய்த்தாய்!* 

    விண்ணோர் தொழும்*  வேங்கட மா மலை மேய* 
    அண்ணா அடியேன்*  இடரைக் களையாயே.   


    இலங்கைப் பதிக்கு*  அன்று இறை ஆய*
    அரக்கர் குலம் கெட்டு அவர் மாள*  கொடிப் புள் திரித்தாய்!* 

    விலங்கல் குடுமித்*  திருவேங்கடம் மேய*  
    அலங்கல் துளப முடியாய்!*  அருளாயே.     


    நீர் ஆர் கடலும்*  நிலனும் முழுது உண்டு* 
    ஏர் ஆலம் இளந் தளிர்மேல்*  துயில் எந்தாய்!* 

    சீர் ஆர்*  திருவேங்கட மா மலை மேய* 
    ஆரா அமுதே!*  அடியேற்கு அருளாயே.    


    உண்டாய் உறிமேல்*  நறு நெய் அமுது ஆக* 
    கொண்டாய் குறள் ஆய்*  நிலம் ஈர் அடியாலே* 

    விண் தோய் சிகரத்*  திருவேங்கடம் மேய, 
    அண்டா!*  அடியேனுக்கு அருள்புரியாயே.    


    தூண் ஆய் அதனூடு*  அரியாய் வந்து தோன்றி* 
    பேணா அவுணன் உடலம்*  பிளந்திட்டாய்!* 

    சேண் ஆர் திருவேங்கட*  மா மலை மேய,* 
    கோள் நாகணையாய்!*  குறிக்கொள் எனை நீயே.      


    மன்னா*  இம் மனிசப் பிறவியை நீக்கி* 
    தன் ஆக்கி*  தன் இன் அருள் செய்யும் தலைவன்* 

    மின் ஆர் முகில் சேர்*  திருவேங்கடம் மேய* 
    என் ஆனை என் அப்பன்*  என் நெஞ்சில் உளானே.


    மான் ஏய் மட நோக்கி*  திறத்து எதிர் வந்த* 
    ஆன் ஏழ் விடை செற்ற*  அணி வரைத் தோளா!*

    தேனே!*  திருவேங்கட மா மலை மேய* 
    கோனே! என் மனம்*  குடிகொண்டு இருந்தாயே.    


    சேயன் அணியன்*  என சிந்தையுள் நின்ற* 
    மாயன் மணி வாள் ஒளி*  வெண் தரளங்கள்* 

    வேய் விண்டு உதிர்*  வேங்கட மா மலை மேய* 
    ஆயன் அடி அல்லது*  மற்று அறியேனே.            


    வந்தாய் என் மனம் புகுந்தாய்*  மன்னி நின்றாய்* 
    நந்தாத கொழுஞ் சுடரே*  எங்கள் நம்பீ!* 

    சிந்தாமணியே*  திருவேங்கடம் மேய எந்தாய்!*
    இனி யான் உனை*  என்றும் விடேனே.    


    வில்லார் மலி*  வேங்கட மா மலை மேய* 
    ல்லார் திரள்தோள்*  மணி வண்ணன் அம்மானைக்* 

    ல்லார்  திரள்தோள்*  கலியன் சொன்ன மாலை* 
    வல்லார் அவர்*  வானவர் ஆகுவர் தாமே.  


    பொருமா நீள் படை*  ஆழி சங்கத்தொடு,* 
    திருமா நீள் கழல்*  ஏழ் உலகும் தொழ,*

    ஒரு மாணிக் குறள் ஆகி,*  நிமிர்ந்த,*  அக் 
    கரு மாணிக்கம்*  என் கண்ணுளது ஆகுமே.


    கண்ணுள்ளே நிற்கும்*  காதன்மையால் தொழில்,* 
    எண்ணிலும் வரும்*  என் இனி வேண்டுவம்?*

    மண்ணும் நீரும்*  எரியும் நல் வாயுவும்* 
    விண்ணும் ஆய் விரியும்*  எம் பிரானையே.


    எம்பிரானை*  எந்தை தந்தை தந்தைக்கும்- 
    தம்பிரானை,*  தண் தாமரைக் கண்ணனை,*

    கொம்பு அராவு*  நுண் நேர் இடை மார்பனை,* 
    எம்பிரானைத் தொழாய்*  மட நெஞ்சமே.


    நெஞ்சமே நல்லை நல்லை*  உன்னைப் பெற்றால்- 
    என் செய்யோம்?*  இனி என்ன குறைவினம்?*

    மைந்தனை மலராள்*  மணவாளனைத்,* 
    துஞ்சும்போதும்*  விடாது தொடர்கண்டாய்.


    கண்டாயே நெஞ்சே*  கருமங்கள் வாய்க்கின்று,*  ஓர் 
    எண் தானும் இன்றியே*  வந்து இயலுமாறு,*

    உண்டானை*  உலகு ஏழும் ஓர் மூவடி 
    கொண்டானைக்,*  கண்டுகொண்டனை நீயுமே.   


    நீயும் நானும்*  இந் நேர்நிற்கில்,*  மேல்மற்றோர். 
    நோயும் சார்கொடான்*  நெஞ்சமே சொன்னேன்,* 

    தாயும் தந்தையும் ஆய்*  இவ் உலகினில்,* 
    வாயும் ஈசன்*  மணிவண்ணன் எந்தையே.  


    எந்தையே என்றும்*  எம் பெருமான் என்றும்,* 
    சிந்தையுள் வைப்பன்*  சொல்லுவன் பாவியேன்,*

    எந்தை எம் பெருமான் என்று*  வானவர்,* 
    சிந்தையுள் வைத்துச்*  சொல்லும் செல்வனையே.


    செல்வ நாரணன் என்ற*  சொல் கேட்டலும்,* 
    மல்கும் கண்பனி*  நாடுவன் மாயமே,*

    அல்லும் நன்பகலும்*  இடைவீடு இன்றி,* 
    நல்கி என்னை விடான்*  நம்பி நம்பியே.


    நம்பியை*  தென் குறுங்குடி நின்ற,*  அச் 
    செம்பொனே திகழும்*  திரு மூர்த்தியை,*

    உம்பர் வானவர்*  ஆதி அம் சோதியை,* 
    எம் பிரானை*  என் சொல்லி மறப்பனோ?


    மறப்பும் ஞானமும்*  நான் ஒன்று உணர்ந்திலன்,* 
    மறக்கும் என்று*  செந்தாமரைக் கண்ணொடு,*

    மறப்பு அற என் உள்ளே*  மன்னினான் தன்னை,* 
    மறப்பனோ? இனி*  யான் என் மணியையே.   


    மணியை வானவர் கண்ணனை*  தன்னது ஓர்- 
    அணியை,*  தென் குருகூர்ச் சடகோபன்,*  சொல்

    பணிசெய் ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
    தணிவிலர் கற்பரேல்,*  கல்வி வாயுமே.