பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    சிலைஇலங்கு பொன்ஆழி*  திண்படைதண்டு ஒண்சங்கம் என்கின்றாளால்,* 
    மலைஇலங்கு தோள் நான்கே*  மற்றுஅவனுக்கு எற்றேகாண்! என்கின்றாளால்*

    முலைஇலங்கு பூம்பயலை*  முன்புஓட அன்புஓடி இருக்கின்றாளால்*
    கலைஇலங்கு மொழியாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)


    செருவரை முன்ஆசுஅறுத்த*  சிலைஅன்றோ? கைத்தலத்தது என்கின்றாளால்,* 
    பொருவரைமுன் போர்தொலைத்த*  பொன்ஆழி மற்றுஒருகை என்கின்றாளால்*

    ஒருவரையும் நின்ஒப்பார்*  ஒப்புஇலா என்அப்பா! என்கின்றாளால்*
    கருவரைபோல் நின்றானை*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!  (2)


    துன்னுமா மணிமுடிமேல்*  துழாய்அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்,* 
    மின்னுமா மணிமகர குண்டலங்கள்*  வில்வீசும் என்கின்றாளால்*

    பொன்னின் மாமணி ஆரம்*  அணிஆகத்து இலங்குமால் என்கின்றாளால்*
    கன்னிமா மதிள்புடைசூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ! 


    தார்ஆய தண்துளப*  வண்டுஉழுத வரைமார்பன் என்கின்றாளால்* 
    போர்ஆனைக் கொம்புஒசித்த*  புள்பாகன் என்அம்மான் என்கின்றாளால்*

    ஆரானும் காண்மின்கள்*  அம்பவளம் வாய்அவனுக்கு என்கின்றாளால்*
    கார்வானம் நின்றுஅதிரும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    அடித்தலமும் தாமரையே*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்,* 
    முடித்தலமும் பொன்பூணும்*  என்நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்*

    வடித்தடங்கண் மலரவளோ*  வரைஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்* 
    கடிக்கமலம் கள்உகுக்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    பேர்ஆயிரம் உடைய பேராளன்*  பேராளன் என்கின்றாளால்* 
    ஏர்ஆர் கனமகர குண்டலத்தன்*  எண்தோளன் என்கின்றாளால்*

    நீர்ஆர் மழைமுகிலே*  நீள்வரையே ஒக்குமால் என்கின்றாளால்*
    கார்ஆர் வயல் மருவும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ!


    செவ்அரத்த உடைஆடை*  அதன்மேல்ஓர் சிவளிகைக்கச்சு என்கின்றாளால்* 
    அவ்அரத்த அடிஇணையும்*  அம்கைகளும் பங்கயமே என்கின்றாளால்*

    மைவளர்க்கும் மணிஉருவம்*  மரகதமோ மழைமுகிலோ! என்கின்றாளால்* 
    கைவளர்க்கும் அழலாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    கொற்றப்புள் ஒன்றுஏறி*  மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்* 
    வெற்றிப்போர் இந்திரற்கும்*  இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்*

    பெற்றக்கால் அவன்ஆகம்*  பெண்பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்*
    கற்றநூல் மறையாளர்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    வண்டுஅமரும் வனமாலை*  மணிமுடிமேல் மணம்நாறும் என்கின்றாளால்* 
    உண்டுஇவர் பால் அன்பு எனக்குஎன்று*  ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்*

    பண்டுஇவரைக் கண்டுஅறிவது*  எவ்ஊரில் யாம்? என்றே பயில்கின்றாளால்*
    கண்டவர்தம் மனம்வழங்கும்*  கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள் கொலோ!


    மாவளரும் மென்நோக்கி*  மாதராள் மாயவனைக் கண்டாள் என்று* 
    காவளரும் கடிபொழில்சூழ்*  கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன*

    பாவளரும் தமிழ்மாலை*  பன்னியநூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* 
    பூவளரும் கற்பகம்சேர்*  பொன்உலகில் மன்னவர்ஆய்ப் புகழ் தக்கோரே.   (2)


    தேவிமார் ஆவார் திருமகள்பூமி*   ஏவமற்றுஅமரர் ஆட்செய்வார்* 
    மேவிய உலகம் மூன்றுஅவைஆட்சி*  வேண்டுவேண்டு உருவம்நின் உருவம்*

    பாவியேன் தன்னை அடுகின்ற கமலக் கண்ணதுஓர்*  பவளவாய் மணியே* 
    ஆவியே! அமுதே! அலைகடல் கடைந்த  அப்பனே!*  காணுமாறு அருளாய்   (2)


    காணுமாறுஅருளாய் என்றுஎன்றே கலங்கி*   கண்ணநீர் அலமர*  வினையேன் 
    பேணுமாறுஎல்லாம் பேணி*  நின்பெயரே  பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ*

    காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணா!*  தொண்டனேன் கற்பகக்கனியே* 
    பேணுவார் அமுதே! பெரிய தண்புனல்சூழ்*   பெருநிலம் எடுத்த பேராளா!         


    எடுத்தபேராளன் நந்தகோபன்தன்*   இன்உயிர்ச் சிறுவனே*  அசோதைக்கு 
    அடுத்தபேரின்பக் குலஇளம்களிறே*   அடியனேன் பெரிய அம்மானே*

    கடுத்தபோர் அவுணன் உடல் இருபிளவாக்*   கைஉகிர் ஆண்ட எம்கடலே,* 
    அடுத்ததுஓர் உருவாய் இன்று நீ வாராய்*  எங்ஙனம் தேறுவர் உமரே?


    உமர்உகந்துஉகந்த உருவம்நின்உருவம்ஆகி*  உன்தனக்கு அன்பர் ஆனார்* 
    அவர் உகந்துஅமர்ந்த செய்கை உன்மாயை*   அறிவுஒன்றும் சங்கிப்பன் வினையேன்*

    அமர்அதுபண்ணி அகல்இடம்புடைசூழ்*   அடுபடை அவித்த அம்மானே* 
    அமரர்தம் அமுதே! அசுரர்கள் நஞ்சே*   என்னுடை ஆர்உயிரேயோ!    


    ஆர்உயிரேயோ அகல்இடம்முழுதும்*  படைத்துஇடந்து உண்டு உமிழ்ந்துஅளந்த* 
    பேர்உயிரேயோ பெரியநீர் படைத்து*  அங்கு உறைந்து அது கடைந்துஅடைத்து உடைத்த*

    சீர்உயிரேயோ மனிசர்க்குத்தேவர் போலத்*  தேவர்க்கும்தேவாவோ* 
    ஓர்உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்*   உன்னை நான் எங்கு வந்து உறுகோ?       


    எங்குவந்துஉறுகோ என்னைஆள்வானே*   ஏழ்உலகங்களும் நீயே* 
    அங்கு அவர்க்குஅமைத்த தெய்வமும்நீயே*  அவற்றுஅவை கருமமும் நீயே*

    பொங்கியபுறம்பால் பொருள்உளவேலும்*   அவையுமோ நீ இன்னேஆனால்* 
    மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே*   வான்புலன் இறந்ததும் நீயே.  


    இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே*   நிகழ்வதோ நீ இன்னேஆனால்* 
    சிறந்தநின் தன்மை அதுஇதுஉதுஎன்று*  அறிவுஒன்றும் சங்கிப்பன்வினையேன்*

    கறந்தபால் நெய்யே நெய்யின்  சுவையே!*  கடலினுள் அமுதமே அமுதில்* 
    பிறந்த இன்சுவையே சுவையதுபயனே!*   பின்னைதோள் மணந்தபேர்ஆயா!


    மணந்தபேர்ஆயா! மாயத்தால்முழுதும்*   வல்வினையேனை ஈர்கின்ற* 
    குணங்களை உடையாய் அசுரர் வன்கையர்கூற்றமே!*  கொடிய புள்உயர்த்தாய்*

    பணங்கள்ஆயிரமும் உடைய பைந்நாகப்பள்ளியாய்!*  பாற்கடல் சேர்ப்பா* 
    வணங்குமாறு அறியேன்! மனமும் வாசகமும்*   செய்கையும் யானும் நீதானே.   


    யானும் நீதானே ஆவதோமெய்யே*   அருநரகுஅவையும் நீ ஆனால்* 
    வான்உயர் இன்பம் எய்தில்என்*  மற்றை   நரகமே எய்தில்என்? எனினும்,*

    யானும் நீதானாய்த் தெளிதொறும், நன்றும் அஞ்சுவன்*  நரகம் நான்அடைதல்* 
    வான்உயர்இன்பம் மன்னிவீற்றிருந்தாய்*  அருளுநின் தாள்களைஎனக்கே.


    தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்தந்* த பேர்உதவிக்கைம்மாறாத்* 
    தோள்களை ஆரத்தழுவி என்உயிரை*  அறவிலை செய்தனன் சோதீ,

    தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய்*   துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய்* 
    தாள்கள் ஆயிரத்தாய்! பேர்கள்ஆயிரத்தாய்*   தமியனேன் பெரிய அப்பனே!


    பெரிய அப்பனை பிரமன் அப்பனை*   உருத்திரன் அப்பனை*  முனிவர்க்கு 
    உரிய அப்பனை அமரர் அப்பனை*   உலகுக்குஓர் தனிஅப்பன் தன்னை*

    பெரியவண்குருகூர் வண்சடகோபன்*   பேணின ஆயிரத்துள்ளும்* 
    உரியசொல்மாலை இவையும்பத்துஇவற்றால்*   உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே  (2)