பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    கறவா மட நாகு*  தன் கன்று உள்ளினால்போல்* 
    மறவாது அடியேன்*  உன்னையே அழைக்கின்றேன்*

    நறவு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நின்ற நம்பி* 
    பிறவாமை எனைப் பணி*  எந்தை பிரானே!*


    வற்றா முதுநீரொடு*  மால் வரை ஏழும்* 
    துற்று ஆக முன் துற்றிய*  தொல் புகழோனே*

    அற்றேன் அடியேன்*  உன்னையே அழைக்கின்றேன்* 
    பெற்றேன் அருள் தந்திடு*  என் எந்தை பிரானே!*  


    தாரேன் பிறர்க்கு*  உன் அருள் என்னிடை வைத்தாய்* 
    ஆரேன் அதுவே*  பருகிக் களிக்கின்றேன்*

    கார் ஏய் கடலே மலையே*  திருக்கோட்டி* 
    ஊரே உகந்தாயை*  உகந்து அடியேனே*.       


    புள் வாய் பிளந்த*  புனிதா! என்று அழைக்க* 
    உள்ளே நின்று*  என் உள்ளம் குளிரும் ஒருவா!*

    கள்வா!*  கடல்மல்லைக் கிடந்த கரும்பே* 
    வள்ளால்! உன்னை*  எங்ஙனம் நான் மறக்கேனே*


    வில் ஏர் நுதல்*  நெடுங் கண்ணியும் நீயும்* 
    கல் ஆர் கடுங் கானம்*  திரிந்த களிறே*

    நல்லாய் நர நாரணனே!*  எங்கள் நம்பி* 
    சொல்லாய் உன்னை*  யான் வணங்கித் தொழும் ஆறே *


    பனி ஏய் பரங் குன்றின்*  பவளத் திரளே* 
    முனியே*  திருமூழிக்களத்து விளக்கே*

    இனியாய் தொண்டரோம்*  பருகும் இன் அமுது ஆய 
    கனியே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*. 


    கதியேல் இல்லை*  நின் அருள் அல்லது எனக்கு* 
    நிதியே!*  திருநீர்மலை நித்திலத் தொத்தே*

    பதியே பரவித் தொழும்*  தொண்டர் தமக்குக் 
    கதியே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*     


    அத்தா! அரியே! என்று*  உன்னை அழைக்க *
    பித்தா என்று பேசுகின்றார்*  பிறர் என்னை*

    முத்தே!  மணி மாணிக்கமே!*  முளைக்கின்ற 
    வித்தே*  உன்னை எங்ஙனம் நான் விடுகேனே!* 


    தூயாய்! சுடர் மா மதிபோல்*  உயிர்க்கு எல்லாம்* 
    தாய் ஆய் அளிக்கின்ற*  தண் தாமரைக் கண்ணா!*

    ஆயா! அலை நீர் உலகு ஏழும்*  முன் உண்ட 
    வாயா*  உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?*


    வண்டு ஆர் பொழில் சூழ்*  நறையூர் நம்பிக்கு*  என்றும்- 
    தொண்டு ஆய்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 

    தொண்டீர்! இவை பாடுமின்*  பாடி நின்று ஆட* 
    உண்டே விசும்பு*  உம்தமக்கு இல்லை துயரே*   (2)
     


    உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி*  என்னை உன் பாதபங்கயம்,* 
    நண்ணிலாவகையே*  நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,* 

    எண் இலாப் பெறுமாயனே!  இமையோர்கள் ஏத்தும்*  உலகம் மூன்று உடை,* 
    அண்ணலே! அமுதே! அப்பனே!*  என்னை ஆள்வானே! (2)


    என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து*  இராப்பகல் மோதுவித்திட்டு,* 
    உன்னை நான் அணுகாவகை*  செய்து போதிகண்டாய்,* 

    கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!*  கடல் ஞாலம் காக்கின்ற* 
    மின்னு நேமியினாய்!*  வினையேனுடை வேதியனே! 


    வேதியாநிற்கும் ஐவரால்*  வினையேனை மோதுவித்து*  உன் திருவடிச் 
    சாதியாவகை*  நீ தடுத்து என் பெறுதிஅந்தோ,*

    ஆதி ஆகி அகல் இடம் படைத்து*  உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட-
    சோதி நீள் முடியாய்!*  தொண்டனேன் மதுசூதனனே!     


    சூது நான் அறியாவகை*  சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி*  உன் அடிப்போது-
    நான் அணுகாவகை*  செய்து போதிகண்டாய்,* 

    யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி*  ஓர் ஆலின் நீள் இலை,* 
    மீது சேர் குழவி!*  வினையேன் வினைதீர் மருந்தே!


    தீர் மருந்து இன்றி ஐந்து நோய்*  அடும் செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை,* 
    நேர் மருங்கு உடைத்தா அடைத்து*  நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்,* 

    ஆர் மருந்து இனி ஆகுவார்?*  அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம்,* 
    வேர் மருங்கு அறுத்தாய்!*  விண்ணுளார் பெருமானே? ஓ! 


    விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்*  ஐம்புலன் இவை, 
    மண்ணுள் என்னைப் பெற்றால்*  என் செய்யா மற்று நீயும் விட்டால்?*

    பண்ணுளாய் கவி தன்னுளாய்!*  பத்தியின் உள்ளாய்! பரமீசனே,*  வந்து என்-
    கண்ணுளாய்!  நெஞ்சுளாய்!  சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே.     


    ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத*  ஓர் ஐவர் வன் கயவரை,* 
    என்று யான் வெல்கிற்பன்*  உன் திருவருள் இல்லையேல்?,* 

    அன்று தேவர் அசுரர் வாங்க*  அலைகடல் அரவம் அளாவி,*  ஓர் 
    குன்றம் வைத்த எந்தாய்!*  கொடியேன் பருகு இன் அமுதே!     


    இன் அமுது எனத் தோன்றி*  ஓர் ஐவர் யாவரையும் மயக்க,* நீ வைத்த- 
    முன்னம் மாயம் எல்லாம்*  முழு வேர் அரிந்து*  என்னை உன்- 

    சின்னமும் திரு மூர்த்தியும்*  சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு,* 
    என் அம்மா! என் கண்ணா!*  இமையோர் தம் குலமுதலே !       


    குலம் முதல் அடும் தீவினைக்*  கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை* 
    வலம் முதல் கெடுக்கும்*  வரமே தந்தருள்கண்டாய்,* 

    நிலம் முதல் இனி எவ் உலகுக்கும்*  நிற்பன செல்வன எனப்,*  பொருள்- 
    பல முதல் படைத்தாய்!*  என் கண்ணா! என் பரஞ்சுடரே!            


    என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி*  உன் இணைத் தாமரைகட்கு,*
    அன்பு உருகி நிற்கும்*  அது நிற்க சுமடு தந்தாய்,* 

    வன் பரங்கள் எடுத்து ஐவர்*  திசை திசை வலித்து எற்றுகின்றனர்:* 
    முன் பரவை கடைந்து*  அமுதம் கொண்ட மூர்த்தி ஓ!


    கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்*  குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும்,*  அப் 
    புண்டரீகக் கொப்பூழ்ப்*  புனல் பள்ளி அப்பனுக்கே,* தொண்டர்

    தொண்டர் தொண்டர் தொண்டன்*  சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    கண்டு பாட வல்லார்*  வினை போம் கங்குலும் பகலே. (2)