பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    வாக்குத் தூய்மை இலாமையினாலே*  மாதவா! உன்னை வாய்க்கொள்ள மாட்டேன்* 
    நாக்கு நின்னைஅல்லால் அறியாது*  நான் அதஞ்சுவன் என் வசமன்று*

    மூர்க்குப் பேசுகின்றான் இவன்என்று*  முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்* 
    காக்கை வாயிலும் கட்டுரைகொள்வர்*  காரணா! கருளக் கொடியானே!  (2)


    சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்*   சங்கு சக்கரம் ஏந்துகையானே!* 
    பிழைப்பர் ஆகிலும் தம்அடியார் சொல்*  பொறுப்பது பெரியோர் கடன்அன்றே*

    விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால்*  வேறுஒருவரோடு என் மனம் பற்றாது* 
    உழைக்குஓர் புள்ளி மிகைஅன்று கண்டாய்*  ஊழியேழுலகு உண்டுமிழ்ந்தானே!


    நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்*  நாரணா! என்னும் இத்தனைஅல்லால்* 
    புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்*  புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!*

    உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்*  ஓவாதே நமோநாரணா! என்பன்* 
    வன்மைஆவது உன் கோயிலில்வாழும்*  வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே.


    நெடுமையால் உலகேழும் அளந்தாய்!*  நின்மலா! நெடியாய்! அடியேனைக்* 
    குடிமை கொள்வதற்கு ஐயுறவேண்டா*  கூறைசோறு இவை வேண்டுவதில்லை*

    அடிமைஎன்னும் அக்கோயின்மையாலே*  அங்கங்கே அவைபோதரும் கண்டாய்* 
    கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை*  கோத்தவன் தளைகோள் விடுத்தானே!


    தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை*  துடவையும் கிணறும் இவைஎல்லாம்* 
    வாட்டம்இன்றி உன்பொன்னடிக் கீழே*  வளைப்புஅகம் வகுத்துக் கொண்டிருந்தேன்*

    நாட்டு மானிடத்தோடு எனக்குஅரிது*  நச்சுவார் பலர் கேழலொன்றாகி* 
    கோட்டுமண்கொண்ட கொள்கையினானே!*  குஞ்சரம் விழக் கொம்புஒசித்தானே!


    கண்ணா! நான்முகனைப் படைத்தானே!*  காரணா! கரியாய்! அடியேன் நான்* 
    உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை*  ஓவாதே நமோ நாரணா என்று*

    எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம*  வேத நாள்மலர் கொண்டு உன பாதம்- 
    நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்*  அன்று எனக்கு அவை பட்டினி நாளே.


    வெள்ளை வெள்ளத்தின்மேல் ஒருபாம்பை*  மெத்தையாக விரித்து*  அதன்மேலே- 
    கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்*  காணலாங்கொல் என்றுஆசையினாலே*

    உள்ளம்சோர உகந்துஎதிர்விம்மி*  உரோமகூபங்களாய்க்*  கண்ணநீர்கள்- 
    துள்ளம்சோரத் துயில்அணை கொள்ளேன்*  சொல்லாய்யான் உன்னைத் தத்துறுமாறே.


    வண்ணமால் வரையே குடையாக*  மாரிகாத்தவனே! மதுசூதா!* 
    கண்ணனே! கரிகோள்விடுத்தானே!*  காரணா! களிறுஅட்டபிரானே!*

    எண்ணுவார் இடரைக் களைவானே!*  ஏத்தரும் பெருங்கீர்த்தியினானே!* 
    நண்ணிநான் உன்னை நாள்தொறும் ஏத்தும்*  நன்மையே அருள்செய் எம்பிரானே!  


    நம்பனே! நவின்றுஏத்த வல்லார்கள்*  நாதனே! நரசிங்கமது ஆனாய்!* 
    உம்பர்கோன் உலகுஏழும் அளந்தாய்*  ஊழிஆயினாய்! ஆழிமுன்ஏந்திக்*

    கம்பமா கரிகோள் விடுத்தானே!*  காரணா! கடலைக்கடைந்தானே!* 
    எம்பிரான்! என்னையாளுடைத் தேனே!*  ஏழையேன் இடரைக் களையாயே.


    காமர் தாதை கருதலர்சிங்கம்*  காண இனிய கருங்குழற் குட்டன்* 
    வாமனன் என்மரகத வண்ணன்*  மாதவன் மதுசூதனன் தன்னைச்*

    சேமநன்குஅமரும் புதுவையர்கோன்*  விட்டுசித்தன் வியன் தமிழ்பத்தும்* 
    நாமம்என்று நவின்றுஉரைப்பார்கள்*  நண்ணுவார் ஒல்லை நாரணன்உலகே.


    அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்*  என்னை ஆள் உடையான்*
    குறிய மாணி உரு ஆய*  கூத்தன் மன்னி அமரும் இடம்*

    நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க*  எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட* 
    பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்*  புள்ளம்பூதங்குடி தானே.(2)    


    கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து*  உலகம் கைப்படுத்து* 
    பொள்ளைக் கரத்த போதகத்தின்*  துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*

    பள்ளச் செறுவில் கயல் உகள*  பழனக் கழனி-அதனுள் போய* 
    புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்*  புள்ளம்பூதங்குடி தானே. 


    மேவா அரக்கர் தென் இலங்கை*  வேந்தன் வீயச் சரம் துரந்து* 
    மாவாய் பிளந்து மல் அடர்த்து*  மருதம் சாய்த்த மாலது இடம்*

    காஆர் தெங்கின் பழம் வீழ*  கயல்கள் பாய குருகு இரியும்* 
    பூஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.    


    வெற்பால் மாரி பழுது ஆக்கி*  விறல் வாள் அரக்கர் தலைவன் தன்* 
    வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்*  துணித்த வல் வில் இராமன் இடம்*

    கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்*  கவின் ஆர் கூடம் மாளிகைகள்* 
    பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.  


    மையார் தடங் கண் கருங் கூந்தல்*  ஆய்ச்சி மறைய வைத்த தயிர்* 
    நெய்யார் பாலோடு அமுது செய்த*  நேமி அங் கை மாயன் இடம்*

    செய்யார் ஆரல் இரை கருதிச்*  செங் கால் நாரை சென்று அணையும்* 
    பொய்யா நாவின் மறையாளர்*  புள்ளம்பூதங்குடிதானே.    


    மின்னின் அன்ன நுண் மருங்குல்*  வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா* 
    மன்னு சினத்த மழ விடைகள்*  ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*

    மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்*  வரி வண்டு இசை பாட* 
    புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே.     


    குடையா விலங்கல் கொண்டு ஏந்தி*  மாரி பழுதா நிரை காத்து* 
    சடையான் ஓட அடல் வாணன்*  தடந் தோள் துணித்த தலைவன் இடம்*

    குடியா வண்டு கள் உண்ண*  கோல நீலம் மட்டு உகுக்கும* 
    புடை ஆர் கழனி எழில் ஆரும்*  புள்ளம்பூதங்குடி தானே.     


    கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி* 
    இறையான் கையில் நிறையாத*  முண்டம் நிறைத்த எந்தை இடம்*

    மறையால் முத்தீ அவை வளர்க்கும்*மன்னு புகழால் வண்மையால்* 
    பொறையால் மிக்க அந்தணர் வாழ்*  புள்ளம்பூதங்குடி தானே.


    துன்னி மண்ணும் விண் நாடும்*  தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்* 
    அன்னம் ஆகி அரு மறைகள்*  அருளிச்செய்த அமலன் இடம்*

    மின்னு சோதி நவமணியும்*  வேயின் முத்தும் சாமரையும்* 
    பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்*  புள்ளம்பூதங்குடி தானே.


    கற்றா மறித்து காளியன்தன்*  சென்னி நடுங்க நடம்பயின்ற* 
    பொன் தாமரையாள் தன் கேள்வன்*  புள்ளம்பூதங்குடி தன்மேல*

    கற்றார் பரவும் மங்கையர் கோன்*  கார் ஆர் புயல்கைக் கலிகன்றி* 
    சொல்தான் ஈர் ஐந்து இவை பாட*  சோர நில்லா துயர் தாமே.       


    கை ஆர் சக்கரத்து*  என் கருமாணிக்கமே! என்று என்று,* 
    பொய்யே கைம்மைசொல்லி*  புறமே புறமே ஆடி.* 

    மெய்யே பெற்றொழிந்தேன்,*  விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
    ஐயோ கண்ணபிரான்!*  அறையோ இனிப்போனாலே. (2)


    போனாய் மாமருதின் நடுவே*  என் பொல்லா மணியே,* 
    தேனே! இன்அமுதே!'*  என்று என்றே சில கூத்துச்சொல்ல,* 

    தானேல் எம்பெருமான்*  அவன் என் ஆகி ஒழிந்தான்,* 
    வானே மாநிலமே,* மற்றும்முற்றும் என் உள்ளனவே.


    உள்ளன மற்று உளவா*  புறமே சில மாயம் சொல்லி,* 
    வள்ளல் மணிவண்ணனே!*  என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்,*

    கள்ள மனம் தவிர்ந்தே*  உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,* 
    வெள்ளத்து அணைக்கிடந்தாய்*  இனி உன்னை விட்டு என் கொள்வனே? 


    என் கொள்வன் உன்னை விட்டு என்னும்*  வாசகங்கள் சொல்லியும்,* 
    வன் கள்வனேன் மனத்தை வலித்து*  கண்ண நீர் கரந்து,* 

    நின்கண் நெருங்கவைத்தே*  எனது ஆவியை நீக்ககில்லேன்,* 
    என்கண் மலினம் அறுத்து*  என்னைக்கூவி அருளாய்கண்ணனே!         


    கண்ணபிரானை*  விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,* 
    நண்ணியும் நண்ணகில்லேன்*  நடுவே ஓர் உடம்பில் இட்டு,* 

    திண்ணம் அழுந்தக் கட்டிப்*  பல செய்வினை வன் கயிற்றால்,* 
    புண்ணை மறையவரிந்து*  என்னைப் போர வைத்தாய் புறமே.


    புறம் அறக் கட்டிக்கொண்டு*  இரு வல்வினையார் குமைக்கும்,* 
    முறை முறை யாக்கை புகல்ஒழியக்*  கண்டு கொண்டொழிந்தேன்,*

    நிறம் உடை நால்தடம்தோள்*  செய்யவாய் செய்ய தாமரைக்கண்,* 
    அறம்முயல் ஆழிஅங்கைக்*  கருமேனி அம்மான் தன்னையே.      


    அம்மான் ஆழிப்பிரான்*  அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?,* 
    எம் மா பாவியர்க்கும்*  விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,* 

    'கைம்மா துன்பு ஒழித்தாய்!'  என்று கைதலைபூசல் இட்டே,* 
    மெய்ம் மால் ஆயொழிந்தேன்*  எம்பிரானும் என் மேலானே.   


    மேலாத் தேவர்களும்*  நிலத் தேவரும் மேவித் தொழும்,* 
    மாலார் வந்து இனநாள்*  அடியேன் மனத்தே மன்னினார்,*

    சேல் ஏய் கண்ணியரும்*  பெரும் செல்வமும் நன்மக்களும்,* 
    மேலாத் தாய் தந்தையும்*  அவரே இனி ஆவாரே.   


    ஆவார் ஆர் துணை என்று*  அலை நீர்க் கடலுள் அழுந்தும்- 
    நாவாய் போல்,*  பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க,* 

    தேவு ஆர் கோலத்தொடும்*  திருச் சக்கரம் சங்கினொடும்,* 
    ஆஆ என்று அருள்செய்து*  அடியேனொடும் ஆனானே.    


    ஆனான் ஆளுடையான் என்று*  அஃதே கொண்டு உகந்துவந்து*
    தானே இன்அருள் செய்து*  என்னை முற்றவும் தான் ஆனான்,* 

    மீன் ஆய் ஆமையும் ஆய்*  நரசிங்கமும் ஆய் குறள் ஆய்,* 
    கான் ஆர் ஏனமும் ஆய்*  கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே.    


    கார்வண்ணன் கண்ண பிரான்*  கமலத்தடங்கண்ணன் தன்னை,* 
    ஏர்வள ஒண்கழனிக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    சீர் வண்ணம் ஒண்தமிழ்கள்*  இவை ஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஆர்வண்ணத்தால் உரைப்பார்*  அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே.