பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    கதிர் ஆயிரம் இரவி*  கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்* 
    எதிர் இல் பெருமை இராமனை*  இருக்கும் இடம் நாடுதிரேல்*

    அதிரும் கழற் பொரு தோள்*  இரணியன் ஆகம் பிளந்து*  அரியாய்- 
    உதிரம் அளைந்த கையோடு இருந்தானை*  உள்ளவா கண்டார் உளர் (2)


    நாந்தகம்சங்குதண்டு*  நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்* 
    ஏந்துபெருமை இராமனை*  இருக்குமிடம் நாடுதிரேல்*

    காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக்*  கடுஞ்சிலை சென்றிறுக்க* 
    வேந்தர்தலைவன் சனகராசன்தன்*  வேள்வியில் கண்டாருளர். 


    கொலையானைக் கொம்பு பறித்துக்*  கூடலர் சேனை பொருது அழியச்* 
    சிலையால் மராமரம் எய்த தேவனைச்*  சிக்கென நாடுதிரேல்*

    தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று*  தடவரை கொண்டு அடைப்ப* 
    அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை*  அங்குத்தைக் கண்டார் உளர் 


    தோயம்பரந்த நடுவுசூழலில்*  தொல்லை வடிவுகொண்ட* 
    மாயக்குழவியதனை நாடுறில்*  வம்மின்சுவடுஉரைக்கேன்*

    ஆயர்மடமகள் பின்னைக்காகி*  அடல்விடைஏழினையும்* 
    வீயப்பொருது வியர்த்துநின்றானை*  மெய்ம்மையேகண்டார்உளர். 


    நீரேறுசெஞ்சடை நீலகண்டனும்*  நான்முகனும் முறையால்* 
    சீரேறுவாசகஞ்செய்யநின்ற*  திருமாலைநாடுதிரேல்*

    வாரேறுகொங்கை உருப்பிணியை*  வலியப்பிடித்துக்கொண்டு- 
    தேரேற்றிச் சேனைநடுவு போர்செய்யச்*  சிக்கெனக்கண்டார்உளர்.   


    பொல்லாவடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்*  புணர்முலைவாய்மடுக்க- 
    வல்லானை*  மாமணிவண்ணனை*  மருவும்இடம்நாடுதிரேல்

    பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு*  பௌவம்எறிதுவரை* 
    எல்லாரும் சூழச்சிங்காசனத்தே*  இருந்தானைக்கண்டாருளர்.  


    வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம்*  ஏந்துகையன்* 
    உள்ளவிடம்வினவில்*  உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்*

    வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித்*  தேர்மிசைமுன்புநின்று* 
    கள்ளப்படைத்துணையாகிப்*  பாரதம்கைசெய்யக்கண்டார்உளர். 


    நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற*  அரசர்கள்தம்முகப்பே* 
    நாழிகைபோகப்படைபொருதவன்*  தேவகிதன்சிறுவன்*

    ஆழிகொண்டு அன்றுஇரவிமறைப்பச்*  சயத்திரதனதலையை*
    பாழிலுருளப்படைபொருதவன்*  பக்கமேகண்டார்உளர். 


    மண்ணும்மலையும்மறிகடல்களும்*  மற்றும்யாவும்எல்லாம்* 
    திண்ணம்விழுங்கிஉமிழ்ந்ததேவனைச்*  சிக்கெனநாடுதிரேல்*

    எண்ணற்கரியதோரேனமாகி*  இருநிலம்புக்கிடந்து*
    வண்ணக்கருங்குழல்மாதரோடு*  மணந்தானைக்கண்டாருளர் 


    கரியமுகில்புரைமேனிமாயனைக்*  கண்டசுவடுஉரைத்துப்* 
    புரவிமுகம்செய்துசெந்நெல்ஓங்கி*  விளைகழனிப்புதுவைத்*

    திருவிற்பொலிமறைவாணன்*  பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்* 
    பரவும்மனமுடைப்பத்தருள்ளார்*  பரமனடிசேர்வர்களே (2)


    போது அலர்ந்த பொழில் சோலைப்*  புறம் எங்கும் பொரு திரைகள்* 
    தாது உதிர வந்து அலைக்கும்*  தட மண்ணித் தென் கரைமேல்*

    மாதவன் தான் உறையும் இடம்*  வயல் நாங்கை*  வரி வண்டு 
    தேதென என்று இசை பாடும்*  திருத்தேவனார்தொகையே. 


    யாவரும் ஆய் யாவையும் ஆய்*  எழில் வேதப் பொருள்களும் ஆய்* 
    மூவரும் ஆய் முதல் ஆய*  மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*

    மாவரும்திண் படைமன்னை*  வென்றிகொள்வார் மன்னுநாங்கை* 
    தேவரும் சென்றுஇறைஞ்சுபொழில்*  திருத்தேவனார்தொகையே.         


    வான்நாடும் மண்நாடும்*  மற்றுஉள்ள பல்உயிரும்*    
    தான்ஆய எம்பெருமான்*  தலைவன் அமர்ந்து உறையும்இடம்*

    ஆனாத பெருஞ்செல்வத்து*  அருமறையோர் நாங்கைதன்னுள்*
    தேன்ஆரும் மலர்ப்பொழில்சூழ்*  திருத்தேவனார்தொகையே. 


    இந்திரனும் இமையவரும்*  முனிவர்களும் எழில் அமைந்த* 
    சந்த மலர்ச் சதுமுகனும்*  கதிரவனும் சந்திரனும்*

    எந்தை! எமக்கு அருள் என நின்ரு*  அருளூமிடம் எழில்நாங்கை* 
    சுந்தரநல் பொழில்புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.     


    அண்டமும் இவ் அலை கடலும்*  அவனிகளும் குல வரையும்* 
    உண்ட பிரான் உறையும் இடம்*  ஒளி மணி சந்து அகில் கனகம்*

    தெண் திரைகள் வரத் திரட்டும்*  திகழ் மண்ணித் தென் கரைமேல்* 
    திண் திறலார் பயில்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.  


    ஞாலம் எல்லாம் அமுது செய்து*  நான்மறையும் தொடராத*    
    பாலகன் ஆய் ஆல் இலையில்*  பள்ளிகொள்ளும் பரமன் இடம்*

    சாலி வளம் பெருகி வரும்*  தட மண்ணித் தென் கரைமேல்* 
    சேல் உகளும் வயல்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.   


    ஓடாத ஆளரியின்*  உரு ஆகி இரணியனை*      
    வாடாத வள் உகிரால்*  பிளந்து அளைந்த மாலது இடம்*

    ஏடு ஏறு பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
    சேடு ஏறு பொழில் தழுவு*  திருத்தேவனார்தொகையே.


    வார் ஆரும் இளங் கொங்கை*  மைதிலியை மணம் புணர்வான்* 
    கார் ஆர் திண் சிலை இறுத்த*  தனிக் காளை கருதும் இடம்*

    ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
    சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்*  திருத்தேவனார்தொகையே.


    கும்பம் மிகு மத யானை*  பாகனொடும் குலைந்து வீழ*     
    கொம்பு-அதனைப் பறித்து எறிந்த*  கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*

    வம்பு அவிழும் செண்பகத்து*  மணம் கமழும் நாங்கைதன்னுள்* 
    செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.   


    கார் ஆர்ந்த திருமேனிக்*  கண்ணன் அமர்ந்து உறையும் இடம்* 
    சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்*  திருத்தேவனார்தொகைமேல்*

    கூர் ஆர்ந்த வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
    ஏர் ஆர்ந்த வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே.    


    ஒரு நாயகமாய்*  ஓட உலகு உடன் ஆண்டவர்,* 
    கரு நாய் கவர்ந்த காலர்*  சிதைகிய பானையர்,*

    பெரு நாடு காண*  இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்,* 
    திருநாரணன் தாள்*  காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.


    உய்ம்மின் திறைகொணர்ந்து*  என்று உலகு ஆண்டவர்,*  இம்மையே 
    தம் இன்சுவை மடவாரைப்*  பிறர் கொள்ளத் தாம் விட்டு* 

    வெம் மின் ஒளிவெயில்*  கானகம் போய்க் குமைதின்பர்கள்,* 
    செம்மின் முடித் திருமாலை*  விரைந்து அடி சேர்மினோ. 


    அடி சேர் முடியினர் ஆகி*  அரசர்கள் தாம் தொழ,* 
    இடி சேர் முரசங்கள்*  முற்றத்து இயம்ப இருந்தவர்,* 

    பொடி சேர் துகளாய்ப் போவர்கள்*  ஆதலில் நொக்கெனக்,* 
    கடி சேர் துழாய்முடிக்*  கண்ணன் கழல்கள் நினைமினோ. 


    நினைப்பான் புகில் கடல் எக்கலின்*  நுண்மணலில் பலர்,* 
    எனைத்தோர் உகங்களும்*  இவ் உலகு ஆண்டு கழிந்தவர்,* 

    மனைப்பால் மருங்கு*  அற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்,* 
    பனைத் தாள் மத களிறு அட்டவன்*  பாதம் பணிமினோ.


    பணிமின் திருவருள் என்னும்*  அம் சீதப் பைம் பூம் பள்ளி,* 
    அணி மென் குழலார்*  இன்பக் கலவி அமுது உண்டார்,* 

    துணி முன்பு நால*  பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்,* 
    மணி மின்னு மேனி*  நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.  


    வாழ்ந்தார்கள் வாழ்ந்தது*  மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து,* 
    ஆழ்ந்தார் என்று அல்லால்*  அன்று முதல் இன்று அறுதியா,*

    வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்*  என்பது இல்லை நிற்குறில்,* 
    ஆழ்ந்து ஆர் கடற்பள்ளி*  அண்ணல் அடியவர் ஆமினோ.  


    ஆம் இன் சுவை அவை*  ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்தபின்,* 
    தூ மென் மொழி மடவார்*  இரக்கப் பின்னும் துற்றுவார்,* 

    ஈமின் எமக்கு ஒரு துற்று என்று*  இடறுவர் ஆதலின்,* 
    கோமின் துழாய் முடி*  ஆதி அம் சோதி குணங்களே.        


    குணம் கொள் நிறை புகழ் மன்னர்*  கொடைக்கடன் பூண்டிருந்து,* 
    இணங்கி உலகு உடன் ஆக்கிலும்*  ஆங்கு அவனை இல்லார்,*

    மணம் கொண்ட போகத்து மன்னியும்*  மீள்வர்கள் மீள்வு இல்லை,* 
    பணம் கொள் அரவு அணையான்*  திருநாமம் படிமினோ.


    படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து*  ஐம்புலன் வென்று,* 
    செடி மன்னு காயம் செற்றார்களும்*  ஆங்கு அவனை இல்லார்,* 

    குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும்*  மீள்வர்கள் மீள்வு இல்லை,* 
    கொடி மன்னு புள் உடை*  அண்ணல் கழல்கள் குறுகுமினோ.


    குறுக மிக உணர்வத்தொடு நோக்கி*  எல்லாம்விட்ட,* 
    இறுகல் இறப்பு என்னும்*  ஞானிக்கும் அப் பயன் இல்லையேல்,* 

    சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்*  பின்னும் வீடு இல்லை,* 
    மறுகல் இல் ஈசனைப் பற்றி*  விடாவிடில் வீடு அஃதே. 


    அஃதே உய்யப் புகும் ஆறு என்று*  கண்ணன் கழல்கள் மேல்,* 
    கொய் பூம் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,* 

    செய் கோலத்து ஆயிரம்*  சீர்த்தொடைப் பாடல் இவைபத்தும்,* 
    அஃகாமல் கற்பவர்*  ஆழ் துயர் போய் உய்யற்பாலரே.