பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு*  தளர்நடைஇட்டு வருவான்* 
    பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு*  ஒரு புள்ளுவன் பொய்யே தவழும்*

    மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச*  வாய்வைத்த பிரானே!* 
    அன்னே! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  (2)


    பொன்போல் மஞ்சனம் ஆட்டி அமுது ஊட்டிப் போனேன்*  வருமளவு இப்பால்* 
    வன் பாரச் சகடம் இறச் சாடி*  வடக்கில் அகம் புக்கு இருந்து*

    மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை*  வேற்றுருவம் செய்து வைத்த* 
    அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  


    கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்*  குடத் தயிர் சாய்த்துப் பருகி* 
    பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்*  பொன்றுவித்து இன்று நீ வந்தாய்*

    இம் மாயம் வல்ல பிள்ளை- நம்பீ!*  உன்னை என்மகனே என்பர் நின்றார்* 
    அம்மா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    மைஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை*  மையன்மை செய்து அவர் பின்போய்* 
    கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று*  குற்றம் பல பல செய்தாய்*

    பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ*  புத்தகத்துக்கு உள கேட்டேன்* 
    ஐயா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு*  தயிரும் விழுங்கி* 
    கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த*  கலத்தொடு சாய்த்துப் பருகி*

    மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல*  விம்மி விம்மி அழுகின்ற* 
    அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*  


    கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்*  கற்றாநிரை மண்டித் தின்ன* 
    விரும்பாக் கன்று ஒன்று கொண்டு*  விளங்கனி வீழ எறிந்த பிரானே!*

    சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்*  சூழ்வலை வைத்துத் திரியும்* 
    அரம்பா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு*  வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி* 
    சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்*  சுற்றும் தொழ நின்ற சோதி!*

    பொருள்- தாயம் இலேன் எம்பெருமான்!*  உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு- 
    அரட்டா உன்னை அறிந்து கொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    வாளா ஆகிலும் காணகில்லார்*  பிறர் மக்களை மையன்மை செய்து* 
    தோளால் இட்டு அவரோடு திளைத்து*  நீ சொல்லப் படாதன செய்தாய்*

    கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி கெட்டேன்!*  வாழ்வில்லை*  நந்தன்- 
    காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    தாய்மார் மோர் விற்கப் போவர்*  தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்* 
    நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை*  நேர்படவே கொண்டு போதி*

    காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து*  கண்டார் கழறத் திரியும்* 
    ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*


    தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்*  சோலைத் தடம் கொண்டு புக்கு* 
    முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை*  மூவேழு சென்றபின் வந்தாய்*

    ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்*  உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்* 
    அத்தா உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 


    காரார் மேனி நிறத்து எம்பிரானைக்*  கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி* 
    ஆரா இன்னமுது உண்ணத் தருவன் நான்*  அம்மம் தாரேன் என்ற மாற்றம்*

    பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்*  பட்டர்பிரான் சொன்ன பாடல்* 
    ஏரார் இன்னிசை மாலைகள் வல்லார்*  இருடிகேசன் அடியாரே*  (2)


    இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்*  வளைமருப்பினில் அகத்துஒடுக்கி* 
    கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்*  கமலநல்மலர்த்தேறல் அருந்தி*

    இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி*  அம் பொழிலூடே* 
    செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு*  திருவயிந்திரபுரமே. (2)   


    மின்னும் ஆழி அங்கையவன்*  செய்யவள் உறை தரு திரு மார்பன்* 
    பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய*  பரன் இடம் வரைச் சாரல்* 

    பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர*  பிணி அவிழ் கமலத்துத்* 
    தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு* திருவயிந்திரபுரமே. 


    வையம் ஏழும் உண்டு ஆல் இலை*  வைகிய மாயவன்*
    அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்*  மெய்தகு வரைச் சாரல்* 

    மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய*  முல்லை அம் கொடி ஆட* 
    செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு*  திருவயிந்திரபுரமே.


    மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்தன்*  மார்புஅகம் இரு பிளவாக்* 
    கூறு கொண்டு அவன் குலமகற்கு*  இன் அருள் கொடுத்தவன் இடம்*

    மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை*  விசும்பு உற மணி நீழல்* 
    சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்*  திருவயிந்திரபுரமே.   


    ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல் இடம் அளந்து*
    ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்*  பொன் மலர் திகழ்*

    வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்*  குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி* 
    தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு*  திருவயிந்திரபுரமே.       


    கூன் உலாவிய மடந்தைதன்*  கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
    கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்*  கவின் ஆரும்* 

    வான் உலாவிய மதி தவழ் மால் வரை*  மா மதிள் புடை சூழ* 
    தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய*  திருவயிந்திரபுரமே.        


    மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்*  விலங்கலின்மிசை இலங்கை மன்னன்*
    நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம்*  மணி வரை நீழல்* 

    அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்*  பெடையொடும் இனிது அமர* 
    செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு*  தண் திருவயிந்திரபுரமே.     


    விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்*  வில் இறுத்து*  அடல் மழைக்கு- 
    நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்*  நிலவிய இடம் தடம் ஆர்* 

    வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு*  மலை வளர் அகில் உந்தித்* 
    திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.  


    வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்*  விசயனுக்கு ஆய்*
    மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்*  குலவு தண் வரைச் சாரல்* 

    கால் கொள் கண் கொடி கைஎழ*  கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்* 
    சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.       


    மூவர் ஆகிய ஒருவனை*  மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை* 
    தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச*  தண் திருவயிந்திரபுரத்து* 

    மேவு சோதியை வேல் வலவன்*  கலிகன்றி விரித்து உரைத்த* 
    பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்*  பாவங்கள் பயிலாவே  (2)


    முடிச்சோதியாய்*  உனது முகச் சோதி மலர்ந்ததுவோ,* 
    அடிச்சோதி நீநின்ற*  தாமரையாய் அலர்ந்ததுவோ,*

    படிச்சோதி ஆடையொடும்*  பல் கலனாய்,*  நின்பைம்பொன் 
    கடிச்சோதி கலந்ததுவோ?*  திருமாலே! கட்டுரையே. (2)   


    கட்டுரைக்கில் தாமரை*  நின் கண் பாதம் கை ஒவ்வா,* 
    சுட்டு உரைத்த நன்பொன்*  உன் திருமேனி ஒளி ஒவ்வாது,*

    ஒட்டு உரைத்து இவ் உலகு உன்னைப்*  புகழ்வு எல்லாம் பெரும்பாலும்,* 
    பட்டுரையாய் புற்கு என்றே*  காட்டுமால் பரஞ்சோதீ!       


    பரஞ்சோதி! நீ பரமாய்*  நின் இகழ்ந்து பின்,*  மற்று ஓர் 
    பரம் சோதி இன்மையின்*  படி ஓவி நிகழ்கின்ற,*

    பரஞ்சோதி நின்னுள்ளே*  படர் உலகம் படைத்த,*  எம் 
    பரஞ்சோதி கோவிந்தா!*  பண்பு உரைக்கமாட்டேனே.


    மாட்டாதே ஆகிலும்*  இம் மலர் தலை மாஞாலம்,*  நின் 
    மாட்டு ஆய மலர்புரையும்*  திருவுருவம் மனம் வைக்க* 

    மாட்டாத பலசமய*  மதி கொடுத்தாய், மலர்த்துழாய்* 
    மாட்டேநீ மனம் வைத்தாய்*  மாஞாலம் வருந்தாதே?


    வருந்தாத அரும்தவத்த*  மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்,* 
    வருந்தாத ஞானம் ஆய்*  வரம்பு இன்றி முழுது இயன்றாய்,*

    வரும் காலம் நிகழ் காலம்*  கழி காலம் ஆய்,*  உலகை 
    ஒருங்காக அளிப்பாய் சீர்*  எங்கு உலக்க ஓதுவனே?


    ஓதுவார் ஓத்து எல்லாம்*  எவ் உலகத்து எவ் எவையும்,* 
    சாதுவாய் நின் புகழின்*  தகை அல்லால் பிறிது இல்லை,*

    போது வாழ் புனம் துழாய்*  முடியினாய்,*  பூவின்மேல் 
    மாது வாழ் மார்பினாய்!*  என் சொல்லி யான் வாழ்த்துவனே?  


    வாழ்த்துவார் பலர் ஆக*  நின்னுள்ளே நான்முகனை,* 
    மூழ்த்த நீர் உலகு எல்லாம்*  படை என்று முதல் படைத்தாய்*  

    கேழ்த்த சீர் அரன் முதலாக்*  கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து,* 
    சூழ்த்து அமரர் துதித்தால்*  உன் தொல் புகழ் மாசூணாதே?     


    மாசூணாச் சுடர் உடம்புஆய்*  மலராது குவியாது,* 
    மாசூணா ஞானம் ஆய்*  முழுதும் ஆய் முழுது இயன்றாய்,*

    மாசூணா வான் கோலத்து*  அமரர் கோன் வழிப்பட்டால்,* 
    மாசூணா உனபாத*  மலர்ச் சோதி மழுங்காதே?     


    மழுங்காத வைந் நுதிய*  சக்கர நல் வலத்தையாய்,* 
    தொழும் காதல் களிறு அளிப்பான்*  புள் ஊர்ந்து தோன்றினையே,* 

    மழுங்காத ஞானமே*  படை ஆக மலர் உலகில்* 
    தொழும்பாயார்க்கு அளித்தால்*  உன் சுடர்ச் சோதி மறையாதே? 


    மறை ஆய நால் வேதத்துள் நின்ற*  மலர்ச் சுடரே,* 
    முறையால் இவ் உலகு எல்லாம்*  படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தா,*ய் 

    பிறை ஏறு சடையானும்*  நான்முகனும் இந்திரனும்* 
    இறை ஆதல் அறிந்து ஏத்த*  வீற்றிருத்தல் இது வியப்பே?   


    வியப்பாய வியப்புஇல்லா*  மெய்ஞ் ஞான வேதியனைச்,* 
    சயப்புகழார் பலர் வாழும்*  தடம் குருகூர்ச் சடகோபன்,*

    துயக்கு இன்றித் தொழுது உரைத்த*  ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்*  ஒலி முந்நீர் ஞாலத்தே. (2)