பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    மெச்சு ஊது சங்கம் இடத்தான்*  நல் வேய் ஊதி* 
    பொய்ச் சூதிற் தோற்ற*  பொறை உடை மன்னர்க்காய்*

    பத்து ஊர் பெறாது அன்று*  பாரதம் கைசெய்த* 
    அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
          அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் (2)


    மலை புரை தோள் மன்னவரும்*  மாரதரும் மற்றும்* 
    பலர் குலைய*  நூற்றுவரும் பட்டழிய*  பார்த்தன்

    சிலை வளையத்*  திண்தேர்மேல் முன்நின்ற*  செங்கண் 
    அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
          அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.


    காயும் நீர் புக்குக்*  கடம்பு ஏறி*  காளியன் 
    தீய பணத்திற்*  சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி* 

    வேயின் குழல் ஊதி*  வித்தகனாய் நின்ற* 
    ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
    அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    இருட்டிற் பிறந்து போய்*  ஏழை வல் ஆயர்* 
    மருட்டைத் தவிர்ப்பித்து*  வன் கஞ்சன் மாளப்-

    புரட்டி*  அந்நாள் எங்கள்*  பூம்பட்டுக் கொண்ட* 
    அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    சேப் பூண்ட*  சாடு சிதறித்*  திருடி நெய்க்கு 
    ஆப்பூண்டு*  நந்தன் மனைவி கடை தாம்பால்*

    சோப்பூண்டு துள்ளித்*  துடிக்கத் துடிக்க*  அன்று 
    ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.


    செப்பு இள மென்முலைத்*  தேவகி நங்கைக்குச்* 
    சொப்படத் தோன்றி*  தொறுப்பாடியோம் வைத்த* 

    துப்பமும் பாலும்*  தயிரும் விழுங்கிய* 
    அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    தத்துக் கொண்டாள் கொலோ?*  தானே பெற்றாள் கொலோ?* 
    சித்தம் அனையாள்*  அசோதை இளஞ்சிங்கம்*

    கொத்து ஆர் கருங்குழற்*  கோபால கோளரி* 
    அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் 


    கொங்கை வன்*  கூனிசொற் கொண்டு குவலயத்* 
    துங்கக் கரியும்*  பரியும் இராச்சியமும்* 

    எங்கும் பரதற்கு அருளி*  வன்கான் அடை* 
    அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
     அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    பதக முதலை*  வாய்ப் பட்ட களிறு* 
    கதறிக் கைகூப்பி*  என் கண்ணா! கண்ணா! என்ன*

    உதவப் புள் ஊர்ந்து*  அங்கு உறுதுயர் தீர்த்த* 
    அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
    அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்


    வல்லாள் இலங்கை மலங்கச்*  சரந் துரந்த* 
    வில்லாளனை*  விட்டுசித்தன் விரித்த*

    சொல் ஆர்ந்த அப்பூச்சிப்*  பாடல் இவை பத்தும் 
    வல்லார் போய்*  வைகுந்தம் மன்னி இருப்பரே (2)


    வானவர் தங்கள் சிந்தை போல*  என் நெஞ்சமே! இனிதுஉவந்து 
    மா தவ மானவர் தங்கள் சிந்தை*  அமர்ந்து உறைகின்ற எந்தை*

    கானவர் இடு கார் அகில் புகை*  ஓங்கு வேங்கடம் மேவி*
    மாண் குறள் ஆன அந்தணற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* (2)  


    உறவு சுற்றம் என்று ஒன்று இலா*  ஒருவன்  உகந்தவர் தம்மை*
    மண்மிசைப் பிறவியே கெடுப்பான்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    குறவர் மாதர்களோடு*  வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்*
    வேங்கடத்து அறவன் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*


    இண்டை ஆயின கொண்டு*  தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்*
    வானிடைக் கொண்டு போய் இடவும்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    வண்டு வாழ் வட வேங்கட மலை*  கோயில் கொண்டு அதனோடும்*
    மீமிசை அண்டம் ஆண்டு இருப்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*  


    பாவியாது செய்தாய்*  என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை*
    மண்மிசை மேவி ஆட்கொண்டு போய்*  விசும்பு ஏற வைக்கும் எந்தை* 

    கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்*  வேங்கட மலை ஆண்டு*
    வானவர் ஆவியாய் இருப்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*         


    பொங்கு போதியும் பிண்டியும் உடைப்*  புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை* 
    தங்கள் தேவரும் தாங்களுமே ஆக*  என் நெஞ்சம் என்பாய்* 

    எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்*  வேங்கடம் மேவி நின்று அருள்* 
    அம் கண் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 


    துவரி ஆடையர் மட்டையர்*  சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்* 
    தமரும் தாங்களுமே தடிக்க*  என் நெஞ்சம் என்பாய்* 

    கவரி மாக் கணம் சேரும்*  வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை* 
    அமர நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 


    தருக்கினால் சமண் செய்து*  சோறு தண் தயிரினால் திரளை*
    மிடற்றிடை நெருக்குவார் அலக்கண்*  அது கண்டு என் நெஞ்சம் என்பாய்* 

    மருள்கள் வண்டுகள் பாடும்*  வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்* 
    வானிடை அருக்கன் மேவிநிற்பாற்கு*  அடிமைத் தொழில் பூண்டாயே*


    சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும்*  சிலர் பேசக் கேட்டிருந்தே* 
    என் நெஞ்சம் என்பாய்!*  எனக்கு ஒன்று சொல்லாதே* 

    வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி*  வேங்கட மலை கோயில் மேவிய* 
    ஆயர் நாயகற்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே. 


    கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய்*  என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்* 
    பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக்*  காண்கிலார்* 

    ஆடு தாமரையோனும் ஈசனும்*  அமரர் கோனும் நின்று ஏத்தும்*  
    வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு*  இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*  


    மின்னு மா முகில் மேவு*  தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய* 
    அன்னம் ஆய் நிகழ்ந்த*  அமரர் பெருமானைக்* 

    கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி*  இன் தமிழால் உரைத்த*
    இம் மன்னு பாடல் வல்லார்க்கு*  இடம் ஆகும் வான் உலகே* (2) 


    வாயும் திரை உகளும்*  கானல் மடநாராய்,* 
    ஆயும் அமர் உலகும்*  துஞ்சிலும் நீ துஞ்சாயால்,* 

    நோயும் பயலைமையும்*  மீது ஊர எம்மேபோல்,* 
    நீயும் திருமாலால்* நெஞ்சம் கோள்பட்டாயே?.  


    கோள் பட்ட சிந்தையையாய்க்*  கூர்வாய அன்றிலே,* 
    சேண் பட்டயாமங்கள்*  சேராது இரங்குதியால்,*

    ஆள் பட்ட எம்மேபோல்,*  நீயும் அரவு அணையான்,* 
    தாள் பட்ட தண் துழாய்த்*  தாமம் காமுற்றாயே.   


    காமுற்ற கையறவோடு*  எல்லே இராப்பகல்,* 
    நீ முற்றக் கண்துயிலாய்*  நெஞ்சு உருகி ஏங்குதியால்,*

    தீ முற்றத் தென் இலங்கை*  ஊட்டினான் தாள் நயந்த,* 
    யாம் உற்றது உற்றாயோ?*  வாழி கனை கடலே


    கடலும் மலையும்*  விசும்பும் துழாய் எம்போல்,* 
    சுடர் கொள் இராப்பகல்*  துஞ்சாயால் தண் வாடாய்,* 

    அடல் கொள் படை ஆழி*  அம்மானைக் காண்பான் நீ,* 
    உடலம் நோய் உற்றாயோ*  ஊழிதோறு ஊழியே.


    ஊழிதோறு ஊழி*  உலகுக்கு நீர்கொண்டு,* 
    தோழியரும் யாமும் போல்*  நீராய் நெகிழ்கின்ற,*

    வாழிய வானமே*  நீயும் மதுசூதன்,* 
    பாழிமையில் பட்டு அவன்கண்*  பாசத்தால் நைவாயே.


    நைவாய எம்மேபோல்*  நாள் மதியே நீ இந் நாள்,* 
    மை வான் இருள் அகற்றாய்*  மாழாந்து தேம்புதியால்,*

    ஐ வாய் அரவு அணைமேல்*  ஆழிப் பெருமானார்,* 
    மெய் வாசகம் கேட்டு*  உன் மெய்ந்நீர்மை தோற்றாயே


    தோற்றோம் மட நெஞ்சம்*  எம் பெருமான் நாரணற்கு*  எம் 
    ஆற்றாமை சொல்லி*  அழுவோமை நீநடுவே,*

    வேற்றோர் வகையில்*  கொடிதாய் எனை ஊழி,* 
    மாற்றாண்மை நிற்றியோ*  வாழி கனை இருளே.


    இருளின் திணி வண்ணம்*  மாநீர்க்கழியே போய்,* 
    மருளுற்று இராப்பகல்*  துஞ்சிலும் நீ துஞ்சாயால்,*

    உருளும் சகடம்*  உதைத்த பெருமானார்,* 
    அருளின் பெரு நசையால்*  ஆழாந்து நொந்தாயே.


    நொந்து ஆராக் காதல் நோய்*  மெல் ஆவி உள் உலர்த்த,* 
    நந்தா விளக்கமே,*  நீயும் அளியத்தாய்,*

    செந்தாமரைத் தடங்கண்*  செங்கனி வாய் எம் பெருமான்,* 
    அம் தாமம் தண் துழாய்*  ஆசையால் வேவாயே.  


    வேவு ஆரா வேட்கை நோய்*  மெல் ஆவி உள் உலர்த்த,* 
    ஓவாது இராப்பகல்*  உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய்,*

    மா வாய் பிளந்து*  மருதிடை போய் மண் அளந்த,* 
    மூவா முதல்வா*  இனி எம்மைச் சோரேலே.


    சோராத எப் பொருட்கும்*  ஆதியாம் சோதிக்கே,* 
    ஆராத காதல்*  குருகூர்ச் சடகோபன்,*

    ஓராயிரம் சொன்ன*  அவற்றுள் இவை பத்தும்,* 
    சோரார் விடார் கண்டீர்*  வைகுந்தம் திண்ணனவே.